மிகப்பெரிய வெற்றிக்கூட்டணியான தனுஷ் செல்வராகவன் கூட்டணியில், 2011ம் ஆண்டு வெளியான மயக்கம் என்ன படத்துக்குப்பிறகு மீண்டும் அதே இணை மீண்டும் இணைந்திருக்கும் படம் நானே வருவேன். தனுஷ் இரட்டை வேடங்களில் மிரட்டி இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மனைவி மகள் என எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் பிரபு கதாபாத்திர தனுஷின் மகளுக்கு திடீரென ஒரு வித்தியாசமான பிரச்சினை, நடு இரவில் தனியாக எங்கேயோ பார்த்து பேசிக்கொண்டிருக்கும் மகளின் உளவியல் சிக்கலுக்கு காரணம் என்ன என தேடும் தனுஷ், அதற்கான விடையை கண்டுபிடித்தாரா, அந்த சிக்கலின் பின்னனியில் இருக்கும் பகீர் விசயங்கள் என்ன என்பதே நானே வருவேன் படத்தின் கதை.
லேசாக நரைத்த தாடி மீசையுடன் நாற்பது வயதை தொடும், சராசரி நடுத்தர வர்க்கத்து பிரபு கதாபாத்திர தனுஷ் மற்றும் ஹிப்பி முடியுடன், மீசை இல்லாமல் வரும் கதிர் என்ற சைக்கோ பாத்திர தனுஷ் என இரண்டு பாத்திரங்களில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார் தனுஷ். இரண்டு வேறு எல்லைகளை தன் நடிப்பின் மூலம் சாத்தியப்படுத்தி இந்த தலைமுறையின் மிகச்சிறந்த நடிகர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் தனுஷ். குறிப்பாக தலையை சாய்த்து, பார்வையை உயர்த்தி கதிர் கதாபாத்திரம் செய்யும் மேனரிசங்கள் நெஞ்சில் நடுக்கத்தை வரவைப்பதுபோல் இருக்கிறது.
வீரா தீரா சூரா வாடா பாடல் வரும்போது தியேட்டர் அதிர்கிறது, நீண்ட நாட்களுக்குப்பிறகு யுவன் செல்வா தனுஷ் கூட்டணிக்கு கொடுத்த மக்கள் அங்கீகாரம். நாங்க இன்றும் அந்த கூட்டணியின் வெற்றிகளை மறக்கவில்லை என்பது போல் இருக்கிறது, திரையரங்கை நிறைக்கும் கைதட்டல்கள்.
இயக்குனராக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் செல்வராகவனுக்கு இது ஒரு மிகப்பெரிய கம்பேக். இடைவேளையின் போது செல்வராகவன் மறுபடியும் வந்துட்டார்டா என்று ரசிகர்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்துக்கு மிகப்பெரிய படல், மிரட்டும் பின்னணி இசை மற்றும் பாடல் என பட்டையை கிளப்பி இருக்கிறார்.
இயக்குனர் செல்வராகவனாக கைதட்டல்களை அள்ளும் அதே நேரம், நடிகர் செல்வராகவனாகவும் மிகப்பெரிய கரகோஷங்களை பெறுகிறார். பிரபு பாத்திரத்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் இந்துஜா, சிறுமி ஹியா தவே, எல்லி அவரம், தனுஷின் இளம் வயது பாத்திரங்களாக வரும் சிறுவர்கள், யோகிபாபு, பிரபு என அனைவரும் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
மொத்தத்தில் நானே வருவேன் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த படைப்பு.
நானே வருவேன்: மீண்டும் ஒரு மைல்கல் வெற்றி