சர்தார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் பேசியதாவது
தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது,
படம் ஆரம்பித்து கொரோனாவைத் தாண்டி, பல சவால்களைத் கடந்து உங்கள் முன்பு சர்தார் படத்தை நிறுத்தியிருக்கிறோம். உங்களுடைய ஆதரவான வார்த்தைகள் படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
கார்த்தி என்னுடைய நண்பர். இப்படத்தில் தினமும் அவருடன் பயணித்தேன். அவர் மித்ரனுடன் கலந்து பேசி, ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் காட்டிய ஈடுபாடு எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. மித்ரன் புத்திசாலியான இயக்குநர். நிறைய படிப்பார். ஒவ்வொரு முறையும் 4 மணி நேர கலந்துரையாடுவது உற்சாகமாக இருக்கும்.
ஜீவி அழகாக இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தில் சிலிர்க்க வைத்திருக்கிறார். கலை இயக்குநரை யார் அவர்? என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ரூபன் இரவு பகலாக உழைத்திருக்கிறார்.
ரெட் ஜெயிண்ட் உதயநிதி, ராஜா அனைவரும் மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறார். மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாள வினியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி.
உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், சண்டை உதவி இயக்குநர்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றார்.
சண்டை இயக்குநர் திலீப் சுப்புராயன் பேசும்போது,
சர்தார் படத்தை பொருத்தவரை அனைத்து உதவியாளர்களும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் கொடுத்த ஆதரவால் தான் என்னால் சுதந்திரமாக எடுக்க முடிந்தது என்றார்.
கலை இயக்குநர் கதிர் பேசும்போது,
நல்ல படங்களை அடையாளம் கண்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகையாளர்களான உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. தண்ணீர் என்பது இன்றியமையாதது என்று எல்லோருக்கும் தெரியும். அதைப் பற்றி விழிப்புணர்வு கொடுக்கும் படமாக இருக்கிறது.
கதை கேட்கும்போதே இந்த படம் வெற்றியடையும் என்பதை சில படங்களை ஊகிக்க முடியும். அதேபோல் இந்த படத்தின் கதையைக் கேட்கும்போதே வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஆனாலும், மற்ற படங்களைவிட இப்படத்திற்கு கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இறுதி 10 நாட்களில் 24 மணி நேரமும் அனைவரும் கடுமையாக உழைத்து படத்தை எடுத்து முடித்தோம்.
ரக்ஷித் சிறப்பாக மேக்கப் போட்டிருந்தார். ஒவ்வொரு வேடத்திலும் அதற்கேற்றாற் போல் உடல்மொழியைக் கொண்டு வருவார். எத்தனை மணி நேரமாக இருந்தாலும் அத்தனை மணி நேரமும் அந்த கதாபாத்திரமாவே உடல் மொழியை மாற்றாமல் அப்படியே இருப்பார் என்றார்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் பேசும்போது,
3 வருடம் உழைத்து இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். இறுதி 6 மாதங்கள் இரவு பகல் பாராமல் உழைத்தோம் என்றார்.
ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா பேசும்போது,
இப்படத்தில் எனக்கான வேலையை ரசித்து செய்தேன். நிறைய ஆராய்ச்சி செய்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் பேசும்போது,
கலை இயக்குநர் கதிர் சொல்லித்தான் இப்பட வாய்ப்பு கிடைத்தது. இயக்குநருடன் நிறைய பேசி முடிவெடுத்தோம். ஆனால், பட்ஜெட் அதிகமாகும். ஆகையால், முதலில் தயாரிப்பாளர் முடிவெடுக்கட்டும் என்று கூறினேன். அவர் முழு சுதந்திரம் கொடுத்தார். அதனால் தான் தேவையானவற்றை வாங்க முடிந்தது என்றார். இப்படத்தின் நாயகனுக்கு அப்பா மகன் உட்பட பல கெட்டப்புகள். சில கெட்டப்புக்கு 3மணி நேரம் ஆகும். மேக்கப் போடும் போது எங்கள் முன்னால் முகம் சுழிக்காமல் இருந்தால் தான் அதை நிறைவாக செய்யமுடியும். அதில் ஒரு சின்னதாக கூட முகத்தை சுழிக்காமல் இருந்தார் கார்த்தி சார். அதை தான் இப்போது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். நேஷ்னல் அவார்ட் கிடைச்ச நடிகர்கள் கூட எல்லாம் வேலை செஞ்சிருகேன். அவர்களே இப்படி பொறுமையாக.. டெடிக்கேட்டிவாக இருந்ததில்லை. கார்த்தி சாருக்கு வாழ்த்துக்கள்.
படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது,
பொதுவாக ஒருவர் நன்றாக பேசினால் வாயால் வடை சுடுவார் என்று கூறுவோம். ஆனால், மித்ரன் வாயால் பிரியாணி செய்வார். சண்டைக் காட்சிகளை கூறும்போது, உண்மையாகவே அடித்து விடுவாரா? என்ற பயம் வரும். ஆனால், கதை கூறுவதற்கும் அதை காட்சிப் படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கும். வாயால் கூறுவதை படமாக்குவது சவாலான விஷயம். ஆனால், மித்ரன் சொன்னதுபோலவே சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தார்.
அதேபோல கதை கேட்கும்போது கார்த்தி சார் நிறைய கேள்விகள் கேட்பார். இப்படத்திலும் நிறைய கேள்விகள் கேட்டார். இறுதியில் அவர் ஒப்புக் கொண்டதும் இப்படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
மேக்கப் மேன் ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்டு சர்தார் வேடத்தின் தொடர்ச்சி சரியாக உள்ளதா? என்று கேட்டார். இதுவரை யாரும் அப்படி கேட்டதில்லை. அதிலிருந்தே அவரின் ஈடுபாடு தெரிந்தது. அதன்பிறகு, எனக்கும் இப்படத்தை மிகச் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.
அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியாளர்களும் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தார்கள். ஒவ்வொருவரும் எது சரி, எது தவறு என்று எடுத்துக் கூறி இப்படம் நன்றாக வருவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும்போது,
ஒரே வருடத்தில் 3 வெவ்வேறான படங்களில் நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அவர் ஒரு பாடல் பாடினார். கிட்டதட்ட 7 மணி நேரம் ஆனது. ஆனால், இப்பாடலை எப்படி காட்சிப்படுத்த போகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தோன். ஆனால், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இயக்குநர் எடுத்திருந்தார். மித்ரன் சவாலான இயக்குநர். ஒவ்வொரு காட்சிக்கும் இசை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாயிலேயே இசையமைத்து காட்டுவார். அவர் நினைத்தபடி வரும்வரை விடவே மாட்டார். பல பாடல்கள் இசையமைத்து முடித்தும் தூக்கி போட்டிருக்கிறோம். என் இசையில் பாதி பங்கு அவரை சேரும் என்றார்.
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது,
இப்படத்தில் யாரும் சந்தோஷமாக வேலை பார்க்க முடியாது என்று லக்ஷ்மன் சாரிடம் கதை கூறும்போதே தெரியும்.
இப்படம் கதையிலிருந்து திரைக்கதையாக்கும்போதிருந்தே கடினமாகத்தான் இருந்தது. கதை ஆக்குவதிலிருந்து சரியாக வருவதற்கு எழுத்தாளர்கள் மிகவும் உழைத்திருக்கிறார்கள். மேலும், இக்கதை கோர்வையாக வருவதற்கு ஜிவி உதவிபுரிந்தார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு எழுத்தாளர், இந்த பட கதையெய் பற்றி சொல்லுல் போது.. ஒரு மெத்தையில் இருக்கும் பஞ்சை தலையணைக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள் என்று கூறினார்.
அனைத்து கோணத்திலும் மிகப் பெரிய உழைப்பு இருந்தது. எல்லோருக்கும் எளிமையாக புரிய வேண்டும். கதை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது. உங்கள் பெயரை மித்ரன் என்பதற்கு பதிலாக மாத்ரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று ரூபன் கூறினார். அந்தளவிற்கு திரைக்கதையை மாற்றிக் கொண்டே இருப்பேன். படப்பிடிப்பிற்கு 60 நாள் வேண்டுமென்றால், தளம் அமைப்பதற்கு 120 நாட்கள் ஆகும். அதை கலை இயக்குனர் கதிர் சிறப்பாக செய்தார்.
கார்த்தி சார்.. மேக்கப் போடுவதிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவது வரை அவருடைய ஈடுபாட்டை பார்த்து மிரண்டு போனேன். அவரின் கடின உழைப்பு இப்படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு பாடலுக்கு 7 மணி நேரம் செலவழித்து இப்பாடலை நானே பாடினால் தான் நன்றாக இருக்கும் என்று பாடினார். அவரின் அர்ப்பணிப்பு தான் இப்படம் நன்றாக வருவதற்கு முக்கிய காரணம் என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது,
தனிப்பட்ட நபர் முன்னேற வேண்டும் என்றில்லாமல் ஒரு குழுவாக பணியாற்றிய அனுபவம் எனக்கு அனைத்து படங்களிலும் கிடைத்தது. நானும் தயாரிப்பாளர் லக்ஷ்மனும் எல்.கே.ஜி.-யில் இருந்து நண்பர்கள். அனைத்து அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பார். இப்படத்தின் கதையைக் கூறிவிடலாம். ஆனால், காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். ஒவ்வொரு காட்சியும் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு அனைவரும் குழுவாக இருந்து பணியாற்றினார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார். உதாரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ தளத்தை அமைப்பது எளிதல்ல. பார்க்கும்போதே பயம் வர வேண்டும்.
சமீப காலமாக தியாகம் என்பதை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த மித்ரனுக்கு நன்றி. மித்ரனும், ரூபனும் பெரிய மேஜிக் செய்திருக்கிறார்கள்.
மேலும், ஒவ்வொரு வேடத்திற்கு மேக்கப் போடும் போது சிரமமாக இருக்கும். அதை கலைக்கும் போது முகம் எரியும். இதைவிட பெரிய ஜாம்பவான்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று என் கோபத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வேன்.
எனக்காவது 6 மணி நேரம் தூக்கம் கிடைக்கும், ஆனால், ஜார்ஜ்க்கு அதுகூட இருக்காது. அனைவரின் குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அனைவரின் உழைப்பை வெளியேத் தெரியும்படி செய்த மித்ரனுக்கு நன்றி. படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும். ஆனால், அது எல்லாமே படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தான்.
ஜிவியின் இசை தத்ரூபமாக இருந்தது என்றார். லைலா மேடம் மிகவும் சந்தோஷப்பட்டார். ரஜிஷா மற்றும் ராஷியும் மகிழ்ச்சியடைந்தார்கள். குட்டி பையன் ரித்துவை அனைவரும் பாராட்டுகிறார்கள். முனீஷ்காந்த் அருமாயாப நடிகர். அவரால் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்டதற்காக ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்த மைனாவிற்கு நன்றி என்றார்.