எருமை மாட்டு மீது வந்து எலிமினேஷன் செய்வேன்! – தொடரும் மன்சூர் அலிகாகானின் பிக் பாஸ் அதிரடிகள்

இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சியே காணாமல் போய்விடும்! – நடிகர் மன்சூர் அலிகானின் சூப்பர் பிளான்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பற்றியும் சோசியல் மீடியாவில் தகவல்கள் வைராகி கொண்டிருக்கிறது. ஆனால், இவை அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான். கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, அதில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதிலும், ”நான் வந்தா பிக் பாஸாக தான் வருவேன்” என்ற அவரது பஞ்ச் பிக் பாஸ் வீட்டையே ஆட்டம் காண செய்துவிட்டது.

பிக் பாஸ் போட்டியில் பலமான போட்டியாளர்களும், பிரபலமான முகங்களும் இல்லாத காரணத்தால், அனைத்தையும் சமாளித்து அதிரடி காட்டும் ஒருவரை தேடிய நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நடிகர் மன்சூர் அலிகானை தேர்வு செய்து அவரை அணுகியதாக சொல்லப்படுகிறது.

ஆனால், நம்ம அதிரடி மன்னன் மன்சூர் அலிகான், தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருவதால் 6 மாதங்களுக்கு தன்னிடம் தேதி இல்லை, என்று சொல்லியிருக்கிறார். அப்படியே ஒருவேளை தேதிகளை சரிசெய்து பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க நான் சம்மதித்தாலும், நான் தான் பிக் பாஸாக இருந்து போட்டியை நடத்துவேன், என்று சொல்லியதோடு, 100 ஏக்கர் பொட்டல் நிலத்தை என்னிடம் கொடுங்கள், போட்டியாளர்களை வைத்து அந்த இடத்தை விவசாய நிலமாக மாற்றி, அதில் விளைச்சல் செய்து காட்டுவது தான் போட்டி. இதில் வெற்றி பெறுபவர்களை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்ச்சியாக தான் நான் பிக் பாஸ் போட்டியை நடத்துவேன், என்றும் கூறியிருக்கிறார்.

மன்சூர் அலிகானின் இந்த ஐடியாவை பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினர் ஏற்றுக் கொண்டார்களோ, இல்லையோ, ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் மன்சூர் அலிகானின் பிக் பாஸ் நிபந்தனை தான் வைரலாகி வருகிறது. மன்சூர் அலிகான் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க போகிறார், என்ற செய்தியை தாண்டி தற்போது மன்சூர் அலிகான், பிக் பாஸ் நிகழ்சிக்கே போட்டியாக, பல கருத்துக்களை வைரலாகி வருகிறார்.

இந்த நிலையில், புதிய வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக்க நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருப்பது பிக் பாஸ் ரசிகர்களிடமும், டிவி சேனல்கள் ஏரியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது உண்மையா?, புதிய பிக் பாஸ் நிகழ்ச்சி சாத்தியமா? என்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகானையே தொடர்பு கொண்டு கேட்டபோது,

”பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க மாட்டேன், என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் தொடர்ந்து நான் அதில் பங்கேற்கப் போவதாக செய்திகள் பரவியது. அதனால் தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பிக் பாஸாக போட்டியை நடத்துவேன், என்று கூறினேன். நான் கூறியது வைரலாகி இப்போது அதுபற்றி என்னிடம் ரசிகர்க்களும், மக்களும் கேட்க தொடங்கிவிட்டார்கள்.

எனவே, இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மக்களுக்கும் நாட்டுக்கும் பயன்படும் வகையில் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. இதை வித்தியாசமான, புதிய வகை பிக் பாஸ் என்று எடுத்துக்கொண்டாலும் தவறில்லை.

நான் சொல்லும் யோசனைபடி பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தால் இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். இங்கு வெற்றியாளர், தோல்வியடைந்தவர் என்று இருக்காது. அனைவருக்கும் விருது வழங்கப்படும். நம்மாழ்வார் உள்ளிட்ட விவசாயத்திற்காக பாடுபட்டவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படும்.

நான் குதிரை மீது வந்து தான் போட்டியில் பங்கேற்பேன். எலிமினேஷன் ஆகிறவர்கள் எருமை மாட்டை குளிப்பாட்ட வேண்டும். மாடுகளை வளர்க்க வேண்டும், யானைகளை கட்டி போரடிக்க வேண்டும். இப்படி பல வகையான போட்டிகளை நடத்துவேன்.

இந்த போட்டியில் உள்ளூர் போட்டியாளர்கள் மட்டும் அல்ல வெளிநாட்டில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாட்டினரின் அதிநவீன விவசாய கருவிகள் நம் நாட்டுக்கு வரும். மரம் ஏறுவதற்கு சரியான கருவி இல்லாமல் நாம் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு போட்டி நடத்தினால் நமக்கு பல அதிநவீன கருவிகளும், கண்டுபிடிப்பாளர்களும் கிடைப்பார்கள்.

மேலும், விவசாயத்தின் மீது தற்போதைய தலைமுறைக்கு ஆர்வம் ஏற்படுவதோடு, இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஒரு வழியாகவும் இந்த போட்டி அமையும். இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய இயற்கை விவசாய புரட்ச்சி ஏற்படும்.

இன்று விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் செயற்கைத்தன்மை வாய்ந்ததாகவும், ஹைப்ரீட் வகைகளாகவும் இருக்கிறது. இதனால் சிறுவயதில் பல நோய்களுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, இப்படி ஒரு போட்டி மூலம் இயற்கை முறையில் காய்கறி வளர்த்தலையும், இயற்கை உணவு சமைத்தல் போன்றவற்றை கொண்டு புதிய வகையிலான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், அது வியாபார அளவில் மட்டும் இன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.” என்றார்.

ஆஹா…அட்டகாசமான ஐடியாவா இருக்கே, இந்த புதிய வகை பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்த டிவி-க்காக நடத்தப் போறீங்க? என்று அவரிடம் கேட்க, “இது என் யோசனை என்பதால் இதை நான் தான் நடத்த வேண்டும் என்பதில்லை, இதை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இப்படி நடந்தால் நல்லா இருக்கும் என்று சொல்கிறேன். அப்படி இந்த போட்டியை என்னை வைத்து நடத்த எந்த தொலைக்காட்சி முன் வந்தாலும் அவர்களுக்காக நான் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்.

கதையின் நாயகனாகவும், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்கள் என்று நான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்காக தேதிகளை ஒதுக்க தயாராகவே இருக்கிறேன். காரணம், இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினால், அது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் இன்றி, டிவி முன்பு உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கும் பயன் தரும்.” என்று பட்டாசு வெடித்தது போல் பதில் கூறினார் நம்ம அதிரடி மன்னன் மன்சூர் அலிகான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here