அதர்வா முரளி, ராஜ்கிரண், ஆஷிகா ஆகியோர் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் வெளியாகி இருக்கும் படம் பட்டத்து அரசன். சமீபகாலமாக கிராமத்து படங்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது இயக்குனர் சற்குணம், களவானி, நய்யாண்டி போன்ற நவீன கால கிராமத்து படங்களாக இருந்தாலும் சரி, வாகைசூடவா போன்ற அச்சு அசல் பழமையான கிராமத்து படமாக இருந்தாலும் தான் ஒரு சிறந்த படைப்பாளி என்று நிரூபித்தவர், தற்போது பட்டத்து அரசனுடன் களமிறங்கி இருக்கிறார்.
ஊரில் அனைவரும் மதிக்கும் குடும்பம் ராஜ்கிரணுடையது. அதைப் பார்த்து பொறாமைப்படும் ராஜ்கிரணின் நண்பராலேயே, ராஜ்கிரணின் குடும்பத்தின் மீது தீராப்பழி ஏற்படுகிறது. தங்கள் குடும்பத்தின் மீது ஏற்பட்ட பழியை ராஜ்கிரணும் அவருடைய பேரன் அதர்வா முரளியும் சேர்ந்து எப்படி துடைக்கிறார்கள் என்பதே பட்டத்து அரசன் படத்தின் கதை.
ஹீரோவின் தாத்தா ரோல் என்று சிறிய கதாபாத்திரம் எல்லம் இல்லை, ராஜ்கிரண் பாத்திரமும் ஏறக்குறைய ஹீரோ பாத்திரம்தான், சொல்லப்போனால் ராஜ்கிரண், அதர்வா முரளி இருவர்மே இப்படத்தின் ஹீரோக்கள்தான். சண்டி வீரன் படத்துக்குப்பிறகு மீண்டும் சற்குணம் இயக்கத்தில் கிராமத்துப்படத்தில் நடித்திருக்கும் அதர்வா, மிகக் கச்சிதமாக கதாபாத்திரத்துடன் பொருந்தி இருக்கிறார். சண்டை காட்சிகள், எமோசன் காட்சிகள், கபடி விளையாட்டு என அனைத்து களத்திலும் தன்னை சிறந்த நடிகர் என்று காட்டி இருக்கிறார் அதர்வா. ராஜ்கிரண் குறித்து சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கிராமத்து பெரியமனிதர். பழி சுமத்தப்பட்டு அதை நினைத்து பொருமுவது என கதாபாத்திரத்தை கண்முன்னே நிறுத்துகிறார். அதே போல் குறிப்பிட்டு சொல்லி பாராட்ட வேண்டிய கதா பாத்திரம் ஜெயபிரக்சாஷின் கதா பாத்திரம். ஹீர்யோயின் ஆசிகா அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட சிறு பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. லோகநாத்தின் கேமிரா கிராமத்து பசுமையை கண்களில் விதைக்கிறது. கிராமம், கபடி, போட்டிகள், பொறாமைகள் என கலவையான உணர்வுகளை, தன்னுடைய பாணியில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சற்குணம்
பட்டத்து அரசன் அரசாள்கிறான்