ஐக்கிய அரபு நாட்டின் தேசிய தினத்தை போற்றும் விதமாக அந்நாட்டின் தேசிய கீதத்தை இசைக்கருவிகள் இல்லாமல் தொழிற்சாலையில் உள்ள கருவிகளைக் கொண்டு அந்த தேசிய கீதத்திற்கு புதிய இசை வடிவம் கொடுத்துள்ளனர் .

உலகிலேயே முதன்முறையாக தொழிற்சாலை கருவிகளைக் கொண்டு இசையமைத்த பெருமை இந்த ஐக்கிய அரபு அமீரக தேசிய கீதத்தை சாரும்..

ஒரு நாட்டின் தேசிய கீதம் என்பது அந்த நாட்டின் குடிமகன்களின் உணர்வில், உயிரில் கலந்தது. அதை பாடும்போதும் இசைக்கும்போதும் தேசப் பற்று உணர்ச்சி பிரவாகம் எடுக்கும். அந்த வகையில் உலகளவில் சிறந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (துபாய்) தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தேசிய கீதம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக எந்தவொரு பாடலும் குழு அல்லது தனி நபர்களின் இசையும் இசைக்கருவிகளை பயன்படுத்திதான் இசைக்கப்படும். ஆனால் உலகிலேயே முதன்முறையாக தொழிற்சாலை கருவிகளை கொண்டே ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கீதம் அதன் தேசிய தினமான டிசம்பர் 2 நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டது. துபாயில் உள்ள ஒரு தொழிற்சாலையுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த தேசிய கீதம் உருவாக்கும் இந்நிகழ்வில் இந்தியாவின் சார்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹானா மற்றும் இளைஞர் முன்னேற்றம் அவர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்ட சமூக சேவைகளை செய்துவரும் டேக் கேர் இண்டர்நேஷ்னல் ஃபவுண்டேஷன் நிறுவன தலைவர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு இசைக்கருவிகளை வாசித்தனர்.
தொழிற்சாலையில் பயன்படுத்தும் அரவை இயந்திரம், துளையிடும் இயந்திரம், சுத்தியல் போன்ற கருவிகளை கொண்டு இசையெழுப்ப ஐக்கிய அரபு அமீரக தேசிய கீதம் வித்தியாசமான முறையில் இசைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. மெய் சிலிர்க்க வைத்த இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹானாவும் டேக் கேர் இண்டர்நேஷ்னல் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் முகமது இப்ராஹிமும் தொழிலாளர்களுடன் இணைந்து தொழிற்சாலை கருவிகளை கொண்டு தேசிய கீதத்தை வாசித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வரலாற்றில் முதன்முறையாக தேசத்தின் மீதான அன்பும் பற்று வித்தியாசமாக முன்வைக்கப்பட்ட இந்த நெகிழ்வான நிகழ்வு நடந்து முடியும்போது அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்று நெகிழ்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கரவொலி எழுப்பி பாராட்டுகளையும் வரவேற்பினையும் தெரிவித்தது இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு நாளை யூடியூப்பில் வெளியாகவுள்ள தேசிய கீத பாடலை ஜகான்ஷெப் முஹால் இசையமைத்து உருவாக்கியுள்ளார். இதனை அந்நாட்டு மக்கள் ஆவலடுன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தேசிய கீத வீடியோ லிங்க்.. கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=r0gtdfIvmm0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here