சினிமா டைரக்டர் ஜெமினி வாய்ப்பு தேடி பட கம்பெனிகளில் கதையோடு அலைகிறார். ஒரு தயாரிப்பாளர் மூன்று நாட்களில் இன்னொரு புதிய கதையை எழுதிக்கொண்டு வரும்படி சொல்ல திரைக்கதை எழுதுவதற்காக காட்டுப்பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டுக்கு செல்கிறார். கூடவே தன் மனைவி ரீனா கிருஷ்ணனையும் அழைத்து போகிறார். அந்த பங்களாவில் போய் தங்கி கதை எழுத ஆரம்பிக்கிறார்.

அப்போது பங்களாவுக்குள் அமானுஷ்ய சக்தி இருப்பதை இருவரும் தனித்தனியாக உணர்ந்து அச்சத்தில் உறைகிறார்கள். அமானுஷ்யசக்தி பங்களாவுக்குள் ஏன் நடமாடுகிறது என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த அதிர்ச்சி பின்னணி என்ன, அமானுஷ்ய சக்தியின் நோக்கம் என்ன என்பது தான் 181 திரைப்படம்.

கதாநாயகனாக வரும் ஜெமினி, இயக்குநருக்கான கதாபாத்திரம் அறிந்து மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகியாக வரும் ரீனா கிருஷ்ணன் அழகில் கவனம் ஈர்க்கிறார்.

இறுதிக் காட்சியில் நடிப்பில் ஆவேசமும் காட்டி உள்ளார். உண்மை தெரிந்து இருவரும் எடுக்கும் முடிவு கதைக்கு வலிமை சேர்க்கிறது. விஜய் சந்துரு மற்றும் அவருடைய நண்பர்களாக வரும் அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளனர். அபலைப் பெண்ணாக வரும் காவ்யா நடிப்பு கவனம் பெறுகிறது. அவரது முடிவு பரிதாபம்.

இசையமைப்பாளர் ஷமீல் திகில் கதைக்கு தேவையான பரபரப்பான இசையை கொடுத்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிரசாத்தின் கேமரா கோணங்கள் காட்டு பங்களா பேய் திகிலுக்கு உதவுகிறது. கிளைமாக்சில் இடம்பெற்றுள்ள வரம்பு மீறிய காட்சிகள் படத்தின் பலவீனம். வழக்கமான பேய் கதைக்குள் பெண்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் சமூக விஷயங்களை வைத்து விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் இசாக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here