நயன்தாரா, விநய், சத்யராஜ், அனுபம்கெர், அனியா நபீசா ஆகியோர் நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில், பிரித்திவி சந்திரசேகர் இசையில் வெளியாகி இருக்கும் படம் கனெக்ட். இதுவரை இல்லாத புதிய படம் என்று நாம் பலமுறை கேட்டதுண்டு…. அவற்றில் சில உண்மைகளும் இருந்திருக்கலாம் அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் கனெக்ட் படம் இதுவரை தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத்திரையுலகிலேயே புதிய வகைப் பேய்ப்படம் என்று சொல்லலாம். அந்த வித்தியாசம் என்னவென்று திரையங்குகளில் சென்று பாருங்கள் நாங்கள் சொன்னது உண்மை என்று உங்களுக்குத்தெரியும்
நயன்தாரா, அவரது மகள் அனியா, அவரது கணவர் விநய், நயன்தாராவின் அப்பா சத்யராஜ் என மகிழ்ச்சியாக அந்தக்குடும்பம் வாழ்ந்துவரும் நிலையில், கொரோனா தீவிரமாக பரவுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரான விநய் கொரோனா தாக்குதலால் உயிரிழக்கிறார். இறந்து போன தனது அப்பா விநய்யுடன் ஓஜா போர்டு மூலம் பேசவேண்டும் என்று நினைக்கும் அனியாவின் முயற்சி விபரீதமாகிறது. இதன் காரணமாக நடக்கும் சிக்கல்கள், அமானுஷ்யங்கள் கலந்த கதைதான் கனெக்ட்,
படம் தொடங்கிய சில மணித்துளிகளில், நம்மை இழுத்துச்செல்கிறது கதை, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு காட்சியியும் நம்மை அச்சத்தால் உறைய வைக்கிறது.
நாயகியை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் இப்படத்தின் மையக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. பரபரப்பான ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும்போது 14வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருக்கும் நயன்தாராவின் துணிச்சலை பாராட்டலாம். இளம்பெண் கதாபாத்திரமாக இருந்தாலும் இளம்பெண்ணுக்கு அம்மா பாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய முத்திரையை பதிப்பதில் நயன்தாரா தவறுவதே இல்லை. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் நயன்தாராவின் நடிப்பு அசத்தல் . அதேபோல் நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் அனியாவின் நடிப்பு சிறப்பு. பேய் ஓட்டும் பாதிரியாராக நடித்திருக்கும் அனுபம் கேர், பேய் மிரட்டலை தாண்டி மிரட்டி இருக்கிறார். நயன்தாராவின் அப்பா பாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராய் நடிப்பு பற்றி தனியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை, எப்போதும் போல சிறப்பாக நடித்திருக்கிறார்.
குறிப்பாக தன் பேத்தி பேய் பிடித்து கஷ்டப்படும் நிலை கண்டு கதறும் நடிப்பு விருதுகளை பெற்றுத்தரும் நடிப்பு. இவர்கள் தவிர சிறிய பாத்திரங்களில் நடித்திருக்கும் லிஸி, மேகா ராஜன், பிரவீணா என ஒவ்வொருவருடைய பாத்திரங்களும் மனதில் அழமாக பதியுமளவுக்கு நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குனர்.
இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு முன்னே இருக்கும் மிகப்பெரிய சவால், ஏறக்குறைய ஒரே வீட்டில், அதிகபட்சம் இருளில் நடப்பது போன்ற கதையை, துளியும் சுவாரஸ்யம் குறையாமல் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான். அந்த சவாலை சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
படம் பார்ப்பவர்களை முழு நேரமும் அச்சத்தில் உறைய வைக்கும்படியான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரித்திவி சந்திரசேகர். நடுநடுங்க வைக்கும் ஒரு பயமான பயணத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன்.
கனெக்ட் – கதிகலங்கும் அச்சம்