வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், மகேந்திரன், ரோகிணி ஆகியோர் நடிப்பில் ஜெகன் விஜயா இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் பிகினிங். தமிழில் திரையுலகின் முதல் ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் திரைப்படம் என்ற புகழுடன் வெளியாகி இருக்கும் இப்படத்தின் புதிய முயற்சி தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்லாமல் ஆசிய திரையுலகிற்கே புது முயற்சி என்பது கூடுதல் தகவல் மற்றும் சிறப்பு. இப்படத்துக்கு சுந்தரமூர்த்தி இசையமைக்க, வீரக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒரே திரையில் இரண்டு பாகமாக இரண்டு கதைகள் ஓடுகின்றன. ஒரு பாகத்தில் மனநலம் குன்றிய இலைஞரான வினோத்தும் அவரது அம்மாவான ரோகிணியும் ஒரு தனித்துவிடப்பட்ட கதாபாத்திரங்களாக வாழ்ந்து வருகின்றனர். உணவு உட்பட, வினோத்துக்கு தேவையான அனைத்தையும் செய்துவைத்துவிட்டு, வினோத்தை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு ரோகிணி வேலைக்கு சென்றுவிட, டிவியில் வரும் கார்டூன்களே தன் வாழ்க்கை என குழந்தை மனதுடன் வாழ்ந்து வருபவர் வினோத்.
மற்றொரு திரையில் வில்லன் சச்சின் தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கௌரி கிஷனை கடத்தி வருகிறார். அவர் எதற்காக கௌரியை கடத்தினார் அதன் முடிவு என்ன என்று சொல்லப்படுகிறது. க்ளைமாக்ஸில் இரண்டு திரையும் இணையும் தருணம் மிகச்சிறப்பு
திரையின் ஒரு பாதியை முழுமையாக ஆக்கிரமிக்கிறார் வினோத் கிஷன். இப்படத்திற்காக நிச்சயம் பல விருதுகள் வினோத்துக்கு காத்திருக்கின்றன. மனநலம் குன்றிய குழந்தை மனம் படைத்த கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
மற்றொரு பாகம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் கௌரி, வில்லன் சச்சின், அமைதியான நடிப்பில், கண்களாலேயே மிரட்டி இருக்கிறார், கேபிஒய் பாலா, மகேந்திரன் ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்.
ஒட்டு மொத்தமாக எட்டு கதாபாத்திரங்கள், இரண்டே இரண்டு லொகேசன்கள் என படம் முழுக்க வந்தாலும் ஒரே ஒரு நொடி கூட சலிப்பு ஏற்படாமல் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குனருக்கு சிறப்பு பாராட்டுக்கள். இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தி, ஒளிப்பதிவாளர் வீரக்குமார், எடிட்டர் ப்ரேம் குமார் ஆகியோர் இயக்குனருக்கு தோள் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக திரையில் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்துக்கு கவனக்குவிப்பு மாறுவதை தன் இசையால் மேம்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர்.
ஒரு மிகச்சிறந்த த்ரில்லர் படத்தை, வித்தியாசமான முயற்சியை எளிமையாக புரிந்து கொள்ளும்படி கொடுத்திருக்கின்றனர் பிகினிங் படக்குழுவினர். இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக பிகினிங் இருக்கும் என்று ‘டாக்ஸ் ஆஃப் சினிமா’ குழு சார்பாக வாழ்த்துகிறோம்.
பிகினிங்: மிகச்சிறந்த தொடக்கம்