ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரன் பேபி ரன் படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது:-

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது,

இந்த படம் எடுப்பதற்கும், திட்டமிட்டபடி வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது. பல முன்னணி திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் ஓடுகிறது. இந்த வாரம் வெளியாகும் படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்கான திரைகள் அதிகமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்படம் தொடங்கும்போது திரில்லர் படத்திற்கு திரையரங்கில் வரவேற்பு இருக்குமா? ஓடிடி தளங்கள் இருக்கும்போது, திரையரங்கில் மக்கள் வரவேற்பார்களா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால், நினைத்ததைவிட படம் வெற்றியடைந்திருக்கிறது.

சிறு வயதில் பேட்மின்டன் சேர்ந்தேன். படிப்படியாக முன்னேறி அந்த கோச்சிங் மையத்திலேயே நான் தான் வெற்றியாளனாக இருந்தேன். சிறிது காலம் சென்றதும், வெளியில் சென்றால்தான் அடுத்த நிலைக்கு உயர முடியும் என்று அந்த மையத்தில் இருந்து வெளியேறினேன். அப்போது என்னுடைய கோச் மிகவும் வருத்தமடைந்தார். ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு நீ அன்று எடுத்த முடிவு தான் சிறந்தது. அதற்கு மேல் உனக்கு கற்றுக் கொடுக்க எதுவுமில்லை என்றார்.

அதுபோல் சினிமாவில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு, நான் இதற்கு முன் எடுத்த மூன்று படங்கள் போல் அடுத்தடுத்த படங்கள் இருக்கக் கூடாது என்று தான் இப்படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இப்படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக சண்டைக் காட்சிகளைப் பார்த்து யதார்த்தமாக இருக்கிறது என்று பாராட்டினார்கள் என்றார்.

படத்தொகுப்பாளர் G.மதன் பேசும்போது,

இந்த படம் எனக்கு சிறப்பான படம். இப்படத்தின் கதை கேட்டதும் மிகவும் ஆர்வமாக இருந்தது. கதை கூறியதுபோல் படம் எடுத்துவிட்டால் நிச்சயம் வெற்றிபெறும் என்று நினைத்தேன். அதேபோல், படமும் நன்றாக வந்திருந்தது. படத்தொகுப்பிற்கு 2 வாரங்கள் ஆனது. முடிந்ததும் இயக்குநரிடம் காட்டினேன், அவருக்கு பிடித்திருந்தது. அதேபோல் தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்தது. பின்பு ஆர்.ஜே.பாலாஜியிடம் படம் நன்றாக வந்திருக்கிறது, மக்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை என்றேன். ஆனால், மக்கள் படத்தை வெற்றியடைய செய்துவிட்டார்கள்.

இந்த வாய்ப்பு கொடுத்த லக்ஷ்மன் சாருக்கு நன்றி, துரைக்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் குமார் பேசும்போது,

நன்றி தெரிவிக்கும் சந்திப்பு மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், நிர்வாக தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. சொன்ன நேரத்தைவிட விரைந்து படத்தை முடித்தார்கள்.

இப்படத்தை பார்த்துவிட்டு ஓவர்சீஸ் முதல் ஓடிடி, அமேசான் வரை அனைத்து தளங்களில் வாங்கி இருக்கும் அனைவருக்கும் நன்றி. சிறந்த கதை, கலைஞர்களை கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு அனைத்து தளங்களிலும் வரவேற்பு இருக்கிறது.

நானும் பாலாஜி சாரும் இன்னொரு படத்தில் பணியாற்றவிருக்கிறோம். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் பேசும்போது,

இதுபோன்ற ஒரு படம் எடுப்பதற்கு லக்ஷ்மன் சார் தான் காரணம். அவருடைய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுத்த ஊக்கத்தில் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. இப்படம் வெற்றிபெற முக்கிய காரணம் நடிகர், நடிகைகள் தான். இப்படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்படம் வேகமாக முடித்ததற்கு நான் மட்டும் காரணம் அல்ல, நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் என்னோடு வேகமாக பயணித்து பணியாற்றினார்கள். ஆர்.ஜே.பாலாஜி சார் எனக்கு உறுதுணையாக இருந்தார். அவரிடம் நேர்மறையான உணர்வு இருக்கிறது.

நடிகர் விஷ்வந்த் பேசும்போது,

இந்த படம் வெற்றி பெற பத்திரிகையாளர்களாகிய நீங்கள் முக்கிய காரணம். நான் இப்படத்தில் கால் டாக்சி டிரைவராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பலரும் என்னை படத்தின் இடைவெளியிலேயே பாராட்டினீர்கள். சிலர் கண்கலங்கியதாகவும் தெரிவித்தார்கள். அதற்கு முக்கிய காரணம், இந்த வாய்ப்பளித்த ஜிஎன் கிருஷ்ண குமார் சார் தான்.

என்னிடம் கதை வரும் போது என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால், திரையில் தான் படத்தின் ஆரம்ப காட்சிகளை பார்த்தேன். அப்போது, படம் ஆரம்பித்த 10வது நிமிடம் முதல் திரையரங்கு முழுவதும் அமைதியாகவே இருந்தது.

அந்த அளவிற்கு கதையை ஆர்.ஜே. பாலாஜி சார் சுமக்க ஆரம்பித்து விட்டார். அது தான் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் கூட. மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி சார் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

பலரும் என்னிடம் பேசியது, படத்தின் இறுதி காட்சியில் வரும் கருத்து தான். படம் பேசிய விஷயம் பெரிதாக இருந்தது என்றார்கள். இந்த வாய்ப்பளித்த அனைவர்க்கும் நன்றி என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here