தமிழ் திரையுலகம் சரியான திசையில் பயணிக்கிறது என்பதற்கு சான்றாக அயோத்தி போன்ற திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மிகச்சிறந்த கதையை எந்தவிதமான கமர்சியல் கலப்பும் இல்லாமல், அதே நேரம் அனைவரும் ரசிகும்படியான ஜனரஞ்சக கலவையாக ‘அயோத்தி’ படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு பாராட்டுக்கள். எந்தவிதமான ஹீரோயிசமும் இல்லாத இக்கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட சசிக்குமார் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.
அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தீர்த்த யாத்திரை வரும் யாஷ்பால் சர்மாவின் குடும்பம், விபத்தை சந்திக்க, விபத்தில் யாஷ்பால் மனைவி அஞ்சு அஸ்ரானி இறந்துவிட, மகள் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மகன் அத்வைதுடன் உதவி செய்ய ஆள் இல்லாமல், மொழி தெரியாத ஊரில் தனிமையில் நிற்கிறார் யாஸ்பால். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவ வரும் சசிக்குமார், புகழ் இருவரும் சந்திக்கும் பிரசினைகள், நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பே ‘அயோத்தி’
எந்த ஒரு இடத்தில் எல்லை மீறாத, சினிமாத்தனம் இல்லாத, அதே நேரம் தொய்வு இல்லாத படமாக வெளியாகி இருக்கும் அயோத்தி, நிச்சயம் தமிழ் திரையுலகில் ஒரு மைல்கல் படமாக இருக்கும். தன்னுடைய எளிமையான நடிப்பின் மூலம் பாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார் சசிக்குமார். அம்மாவின் இறப்பை கண்முன்னே எதிர்கொள்ளமுடியாமலும், அப்பாவின் அடாவடித்தனத்தை பொறுத்துக்கொள்ள முடியாமலும் அல்லாடும் பாத்திரத்தை மிக மிக சிறப்பாக செய்திருக்கிறார் ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ரானி. நடமாடும் ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் யாஷ்பால். இப்படி பெரிய கதாபாத்திரங்களில் தொடங்கி, சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வரை மனதில் பதியும்படி இருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலம்.
படத்தின் தன்மைகேற்ற மனதை வருடும், ரகுநந்தனின் பாடலும், பின்னணி இசையும், படத்துடன் ஒன்றிணைந்து பயணிக்கின்றன. அயோத்தி, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் கலாச்சாரத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது மாதேஷின் கேமிரா.
குறைகள் என்று எதுவும் சொல்லமுடியாத அயோத்தி போன்ற படங்களை கொண்டாட வேண்டியது ரசிகர்களின் கடமை. இது போன்ற படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிக்கைகளின் கடமை
அயோத்தி: படம் அல்ல பாடம்