இயக்குநர் சுந்தர் சி யின் உதவியாளர் வி .எம். ரத்தினவேல் எழுதி இயக்கும் ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’
இந்தப் படத்தை
டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
கதாநாயகனாக ஆனந்த்நாக் அவருடைய நண்பர்களாகப் புது முகம் ராஜேஷ், ஶ்ரீஜித்,விக்கிபீமா, ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஸ்வேதா டோரத்தி, ரேணுகா பதுளா, ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஓஏகே சுந்தர், தளபதி தினேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மீசை ராஜேந்திரன், மணிமாறன், செந்தில் குமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.இயக்குனர் ரத்தினவேலும் ஒரு எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு சீனு ஆதித்யா, இசை ராஜ்பிரதாப், படத்தொகுப்பு சேதுரமணன், சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ், பாடல் அருண்பாரதி என ஆர்வமும் திறமையும் உள்ள தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து கூட்டணி அமைத்துப் பணிபுரிந்துள்ளனர்.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் வி.எம்.ரத்னவேல் கூறுகையில்,
“முதலில் நான் பாடம் கற்றுக்கொண்ட இடத்தைப் பற்றிக் கூற வேண்டும் .சுந்தர் சி சாரிடம் 2008 முதல் 2018 வரை பத்து ஆண்டுகள் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றி இருக்கிறேன்.
அவரது அவ்னி மூவி மேக்கர்ஸ், அவ்னி மூவி மீடியா நிறுவனப் படங்களிலும் ,அவர்கள் தயாரிப்பில் இருந்த தொலைக்காட்சித் தொடர்களிலும் நான் பணியாற்றி இருக்கிறேன். அது எனக்கு மாபெரும் அனுபவமாக இருந்தது.
சினிமா பற்றி நான் கற்றதும் பெற்றதும் அங்கு தான் என்று சொல்வேன்.
இந்தப் படம் கிரவுட் ஃபண்டிங் மூலம் கொரோனாவுக்கு முன்பு தொடங்க ஆசைப்பட்டு 25 பேர் நண்பர்கள் இணைந்தார்கள். இடையில் கொரோனா வந்ததும் அவர்கள் மெல்ல மெல்ல விலகினார்கள்.எனவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.கடைசியில் அதிலிருந்து எனது உறவினர் சிலரை மட்டும் சேர்த்துக்கொண்டு ஆறு பேருடன் இணைந்து நானும் சேர்ந்து இந்தப் படத்தை டீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளேன்.
இந்தப் படத்தின் கதை என்ன என்றால், சென்னையிலுள்ள ஒரு குப்பத்திற்கு அனாதைச் சிறுவர்கள் நான்கு பேர் வந்து இணைந்து கொள்கிறார்கள். அவர்கள் அந்த மக்களோடு ஒன்றாக கலக்கிறார்கள். நாலு பேரும் நாலு இடத்தில் வேலை பார்க்கிறார்கள்.
அதில் ஒருவன் முக்கோணக் காதலில் சிக்கிக் கொள்கிறான். அவனை ஒருத்தியும் அவன் இன்னொருத்தியையும் காதலிக்கும் சூழல் நேர்கிறது.
அந்த நான்கு பேரும் நான்கு வேலை பார்த்தாலும் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் தேவைக்குப போக மீதியை அந்தக் குப்பத்தில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவச் செலவிற்கும் மாணவர்களுக்குப் படிப்பு செலவுக்கும் என உதவுகின்றனர் .
அப்படிப்பட்ட அவர்கள் கையில் தலைக்கவசம் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. அதை அவர்கள் எப்படிச் சரியாகப் பயன்படுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்பதுதான் இந்தக் கதை.
ஹெல்மெட் என்று கூட நாங்கள் சொல்லாமல் தலைக்கவசம் என்று படத்திற்குப் பெயர் வைத்துள்ளோம். இந்தப் படத்திற்கு தூய தமிழில் பெயர் வைத்துள்ளோம். அது மட்டுமல்ல சென்னைக் குப்பம் என்றாலே அங்கு வாழும் இளைஞர்கள் பொறுப்பற்றுத் திரிபவர்கள் ,அவர்களின் நடவடிக்கைகள் மோசமாக இருக்கும் என்றுதான் படங்களில் இதுவரை காட்டி வந்திருக்கிறார்கள்.
குப்பத்து இளைஞர்கள் என்றால் பொறுப்பில்லாதவர்களா?
நான் இதில் அவர்களைப் பொறுப்புள்ள இளைஞர்களாகக் காட்டியுள்ளேன். அது மட்டுமல்ல படத்தில் ஒரு ஃப்ரேமில் கூட குடித்தல் புகைத்தல் காட்சி இருக்காது. அந்த அளவிற்கு நாங்கள் நாகரிகமாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்.
இந்தக் கதை முழுக்க முழுக்க சென்னையில் நடப்பதால் சென்னை உதயம் திரையரங்கின் எதிரே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் தான் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்தது .அது மட்டுமல்லாமல் கோயம்பேடு பேருந்து நிலையம் ,கே.கே. நகர் என்று சென்னைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். படத்தில் 2 பாடல்கள் ,2 சண்டைக் காட்சிகள் உண்டு. இதில் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள், பிரபலங்களிடம் பணியாற்றியவர்கள் அல்லது சில படங்களில் பணியாற்றியவர்கள் என்று தகுதியுடன் இருப்பவர்கள்.
படம் சொல்லும் கருத்து என்ன என்றால்,நமக்கு கிடைக்கும் வாய்ப்பை எந்தச் சூழ்நிலையிலும் சமாளித்து நமக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டால் நாம் நினைத்ததை அடையலாம் என்று இன்றைய இளைஞர்களுக்கு ஒரு தூண்டுதல் அமையும்படி கமர்ஷியல் கலந்து சொல்லியிருக்கிறேன்.
நாங்கள் பட்ஜெட் படம் என்றாலும் திட்டமிட்டு நியாயமான செலவில் தரமான விளைவை திரையில் காணும்படி எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தை நாங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் கையில் ஒப்படைக்கிறோம் .இதில் எங்களது முயற்சியும் உழைப்பும் நம்பிக்கையும் இருப்பதால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
” என்கிறார் இயக்குநர் வி. எம். ரத்தினவேல். இத்திரைப்படத்தை 9V ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது .
‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ படத்தின் டீஸரை இயக்குநர் கே. பாக்யராஜ் இன்று வெளியிட்டார் . டீஸரைப் பார்த்து ரசித்துப் பாராட்டிய அவர் , படக்குழுவினரை வாழ்த்தினார்.