மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்த சௌந்தரராஜா, தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வருகிறார்.

இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். சமீபத்தில் கொரோனா ஊரடங்களில் அவதிப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்து உதவினார். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் சவுந்தரராஜா, தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவையும் சேர்த்து கொண்டாடினார்.

இவ்விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் அரசு வழிகாட்டுதலின் படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஏரிக்கரைகள், மலை குன்றுகள், பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில் நட்டு அதை பாதுகாக்கவும் வழி வகை செய்திருந்தார். இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்றது.

சென்னையில் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சௌந்தரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி சேர்மன் தேவ் ஆனந்த், நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி, நடிகர் பிளாக் பாண்டி, மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் உறவுகள், நண்பர்கள், மற்றும் சௌந்தரராஜாவின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.

இதன் பின் சௌந்தரராஜா பேசும்போது, ‘மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நண்பர்கள், உறவுகள் அனைவரும் தமிழகம் முழுவதும் பருவ மழைக்காலத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிப்பதை ஒரு சவாலாக எடுத்து இருக்கிறோம். முதல் நாளான இன்று மனைவி, குடும்பத்தினருடன் தொடங்கி இருக்கிறேன். எப்போதும் ஒரு இடத்தை தேர்வு செய்து மரக்கன்றுகளை நடுவேன். ஆனால், இந்த முறை நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோர் என்னுடன் சேர்ந்து பயணிப்பதாக கூறினார்கள். 350 பேர் கொண்ட குழு இன்று செயல்பட்டு வருகிறது. மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

கொரோனா காலத்தில் இயற்கை ரொம்ப முக்கியம் என்று நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கை பேரழிவுகள் வந்தால் கூட, இயற்கையின் முக்கியத்துவத்தை தெரியாமல், பாதுகாக்காமல் விட்டு விடுகிறோம். மரங்கள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து விடுகிறோம். விவசாயம், பசுமையில்தான் ஒரு புரட்சி நடக்க வேண்டும். அதன்மூலமாகதான் நாடு வல்லரசாக வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் பட்டினி என்று ஒருவரும் இருக்க கூடாது என்பதே மிகப்பெரிய வளர்ச்சி வல்லரசு என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் இயற்கையை நேசிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதை எடுத்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் அதை பின்பற்றுங்கள். இந்த மண்ணையும் மக்களையும் காப்போம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here