அனுப்புநர்:
கே.ஆர்
முன்னாள் தலைவர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
நிறுவனர் மற்றும் அறங்காவலர்
தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை
பெறுநர்:
தேர்தல் அதிகாரிகள்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,
பிலிம் சேம்பர் வளாகம்
605, அண்ணாசாலை
சென்னை -600006.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 30 ம் தேதி அடையாறில் உள்ள அன்னை சத்யா (ஸ்டுடியோ) கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு போதுமான இடவசதி இல்லை. கடந்த முறையும் அங்குதான் தேர்தல் நடைபெற்றது. வாக்களிக்க வந்தவர்களின் வாகனங்களை கூட அங்கு நிறுத்த முடியவில்லை. எல்லோரும் நெருக்கியடித்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதில் “சின்ன தம்பி” உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே பி பிலிம்ஸ் பாலு, உடல்நிலை பாதிக்கப்பட்டு மறுநாளே மருத்துவமனையில் அட்மிட் ஆகி கொரோனா தொற்று என கண்டறியப்பட்டு உயிரையே இழந்து விட்டார் என்பது வேதனையான உண்மை.
இப்போதும் அதே போல கொரோனா பரவும் காலம் ஆரம்பித்திருக்கிறது. அதைவிட கொடுமையான வெயில் காலமாக இருக்கிறது. இந்த முறை 1406 தயாரிப்பாளர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர். குறைந்தது 1200 பேர் தேர்தலில் வாக்களிக்க வருவார்கள். அத்தனை பேரும் கார்களில் வந்து இறங்குவதற்கும், நிறுத்துவதற்குமான இட வசதி அங்கு இல்லை. அத்துடன் பிரபல நடிகர்களும் இயக்குனர்களும் வாக்களிக்க வரும்போது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஏற்ற சூழலும் அங்கு இல்லை. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வருவதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே அடையாறு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் போதுமான இட வசதி இருக்கிறது. எவ்வளவு கார்களை வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். சினிமாவுக்கு தொடர்புடைய ஒரு இடம் என்பதால் தொடர்ந்து எல்லாத் தேர்தல்களையும் அங்கேயே நடத்திக் கொள்ளலாம். தமிழக அரசும் திரைப்படத்துறைக்கு ஆதரவாக இருப்பதால் அனுமதி பெறுவதும் கஷ்டமாக இருக்காது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் அதிகாரிகள் எல்லா சூழலையும் கவனத்தில் கொண்டு தேர்தல் நடத்தும் இடத்தை திரைப்பட கல்லூரி வளாகத்திற்கு மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன். வரும் வாக்காளர்களில் 45 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 70 வயதை கடந்தவர்கள் என்பதையும், ஏராளமான பெண்களும் வாக்களிக்க வருவார்கள் என்பதையும் தேர்தலை நடத்தும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்கனவே இந்த விஷயத்தை சங்க நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்கள் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு தயாரிப்பாளரும் தனிநபர் அல்ல. அவரைச் சுற்றி 100 குடும்பங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது?
இப்படிக்கு,
(கே.ஆர்.)
உறுப்பினர் எண்:0006
நாள்: 15.04.2023
சென்னை