கருமேகங்கள் கலைகின்றன’ இயக்குனர் தங்கர் பச்சான்.
வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

  • தங்கர் பச்சன் .

2003-ல் நான் எழுதிய ஒரு சிறுகதை. தி.நகரில் திருப்பதி கோயிலின் அருகில் ஒரு நண்பரை சந்திக்க காத்திருந்தேன். அப்போது கோயில் வாசலில் இருவர் அங்கு அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு உலகத்தை விட்டே போய் விட வேண்டும், வாழவே விருப்பமில்லை என்ற முகம். அவர் கையில் யோகிபாபு கையில் வைத்திருப்பது போல ஒரு பை வைத்திருந்தார். அதற்கு நேர்மாறாக.. இன்னொருவரும் அதே மனனிலையில். ஆனால் அவர், வாழ்க்கையில் உயர்ந்த பதவியில் இருப்பவராக தோன்றியது. இருவர் முகமும் எழுதப்படாத, உச்சரிக்கப்படாத ஒரே உணர்வை எனக்கு கூறியது. கோயிலில் இருந்து ஒருவர் பிரசாதம் கொண்டு வந்து தருகிறார். அந்த ஏழை வாங்கிக் கொள்கிறார். ஆனால், அந்த பணக்காரர் தன்மானம் காரணமாக வாங்க மறுக்கிறார். பிறகு வாங்கிக் கொள்கிறார், அவர் கண்களில் பசி தெரிந்தது. அன்று இரவு வீட்டிற்கு செல்லும்போது இந்த இரு மனிதர்களும் என்னை பாதித்தார்கள். அப்போது தான் இந்த கதையை எழுதினேன். கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன என்று தான் பெயர் வைத்தேன். ஆனால், கருமேகங்கள் கலைகின்றன என்று மாறியது. ஆனால், இதையும் ‘கேகே’ என்று மாற்றி விடுகிறார்கள். தமிழை சுருக்கும் கொடுமை நடந்து வருவது வருத்தமாக இருக்கிறது. ( அரங்கத்தில் சிரிப்பலை )

வாழ்ந்து முடித்த ஒருவர், வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து அன்புக்காக ஏங்கும் மற்றொருவர் இந்த இரண்டு பேர் போல உலகம் முழுக்க இருக்கிறார்கள். அன்புக்காக ஏங்கி தவிக்கிறார்கள். யாருக்கும் யார் மீதும் அன்பு இல்லை. அதைக் கூற வேண்டும் என்று நினைத்தேன்.

எல்லா ஊர்களிலும் சென்று வியாபாரம் செய்வது சிறந்த படமல்ல. எல்லா ஊர்களிலும் உள்ள மக்களைப் பற்றி எடுக்க வேண்டும். ஆனால், தரமான படங்களை யார் கொண்டாடுகிறார்கள். மக்கள் நல்ல படங்கள் திரையரங்கில் பார்க்கக் கூடாது, வீட்டில் தான் பார்க்க வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். படம் நன்றாக இல்லை என்று கூறினால் , ஏன் படம் நன்றாக இல்லை என்று கூறிகொண்டு ரூ.1000/- க்கு டிக்கட் எடுக்கிறார்கள். ம். ஆனால், இது போன்ற நல்ல படங்களை திரையரங்கில் வந்து பார்த்தால் இன்னும் இது போன்ற பல படங்களை இயக்குவேன். மக்களின் வாழ்வியலை சொல்லும்படியாக என்னிடம் பல கதைகள் இருக்கிறது.

பாரதிராஜாவிடம் இந்த கதையைக் கூறிவிட்டு ஒரு வருடம் காத்திருந்தேன். இந்த கதையை யோகிபாபுவிடம் கதையைக் கூறும்போது, இவர் நடிப்பாரா? இந்த கதாபாத்திரம் அவருக்கு ஏற்றதாக இருக்குமா? என்றும் சந்தேகம் மனதில் எழுந்து கொண்டு இருந்தது. கதை கேட்டு முடித்ததும், இதைதான் எடுக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார். அப்போது தான் அவர் எப்படிப்பட்ட மனிதர் நான் தெரிந்து கொண்டேன்.

ஆனால், நான் எடுத்த படத்தை பாராட்டுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். பள்ளிக்கூடம் படத்தைப் பார்த்து இன்று பல பள்ளிகள் புதுபிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், பாக்ஸ் ஆபிஸில் என்ன வந்தது. அப்போது யார் குற்றவாளிகள்? இந்த படம் பார்த்ததும் யார் யாரெல்லாம் அப்பாவைத் தேடி ஓடப் போகிறார்கள் என்று பாருங்கள். இதற்கு மேல் நீங்கள் படம் பாருங்கள்.

இந்த படத்தை, யான் பிரதாப் அவருக்கு படையல் செய்கிறேன். எல்லோரும் சினிமா என்று ஒரே மாதிரி எடுத்துக் கொண்டிருக்கும்போது, திரை மொழியை அடித்து உடைத்தவர். படத்தொகுப்பில் இலக்கணத்தைப் சுக்குநூறாக புரட்டிப் போட்டவர். அதை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன். அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்தார். அவர் அப்பா பிரஞ்சு, அம்மா சுவிட்சர்லாந்து. சுவிட்சர்லாந்து நாட்டில் அவர்களுடைய இறுதி வாழ்க்கையை அவர்கள் முடிவு செய்துக் கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆகையால், அவருடைய முடிவை அவரே தேடிக் கொண்டார்.

ஆண்டனியின் படத்தொகுப்பைப் பார்த்து ஆச்சர்யம். அவர் மாடர்ன் எடிட்டர். அவரின் உலகம் வேறு. அவரின் பார்வையில் இப்படம் எப்படி இருக்கிறது என்று கேட்க ஆசை. அவருக்கு மட்டும் தான் இப்படத்தை முதலில் காண்பிக்க நினைத்தேன். இப்போது இப்படத்தைப் பற்றி அவர் கூறுவார்.

இந்த படத்தில் எல்லோரும் என்னைத் திட்டியிருப்பார்கள். பாரதிராஜா அண்ணன் இன்னமும் என்னை இப்படி செய்து விட்டான் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல படைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான். யோகிபாபு இன்னும் 5 நாள் இருந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். ஆனால், அவரை குறைகூற இயலவில்லை. அவ்வளவு படங்கள் வைத்திருக்கிறார். 3 நாட்கள், 5 நாட்கள் என்று டேட் கொடுத்து பலரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷை அவ்வப்போது அழைத்து வேலை வாங்குவேன். இந்த குரல் வேண்டாம் என்று பல குரல்களை மறுத்திருக்கிறேன். அனைத்திற்கும் பொறுமையாக இசையமைத்துக் கொடுத்தார்.

வீரசக்தி என் தாயின் வயிற்றில் பிறக்காத சகோதரன்.

எங்கள் மகள் 6 மாதத்திலிருந்து எங்களுடன் இருக்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும் அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோ இருக்கிறது. அவர் தான் சாரல், அவரை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். நிறைய திட்டியிருக்கிறேன். ஆனால், பேசாமலேயே நடிப்பார். அனைவரையும் அழ வைக்க போகிறார்.

6 நிமிடம், 71/2 நிமிடம் என்று ஒரே நேரத்தில் ஓடக்கூடிய கடையில் அதிதி பாலன் அசத்திருக்கிறார். அந்த காட்சியை பார்த்து விட்டு அனைவரும் கொண்டாடுவீர்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here