டி.சிவா, பெப்சி துணை தலைவர் சுவாமிநாதன், திரப்பட கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ், நடிகை சச்சு, ரோஹிணி,தேவயானி, நடிகர் சரவணன், பசுபதி, அஜய் ரத்னம், மன்சூர் அலிகான், பொன்வண்ணன், அனுமோகன், வையாபுரி, டெல்லி கணேஷ், உதயா, விக்னேஷ், எம்.ஏ.பிரகாஷ், தளபதி தினேஷ், ஶ்ரீமன், வாசு டேவன், ஹேமசந்திரன், சவுந்தர்ராஜா, இயக்குனர் ஆர்.வி உதயகுமார், லியாகத் அலிகான் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு இந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் அவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் பேசிய பலரும் இந்த மூவருடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் டெல்லி கணேஷ் பேசும்போது,

“மனோபாலா நடிகர் ஆவதற்கு முன்பிருந்தே எனக்கு பழக்கமானவர். இப்போது கூட கைநிறைய படங்களை வைத்திருந்தார். அதேபோல மயில்சாமி ஒரு தைரியமான ஆள். நானும் மயில்சாமியும் சுந்தர்.சி இயக்கிய லண்டன் படத்தில் இணைந்து நடித்தபோது அவ்வளவு சந்தோசமான அனுபவங்களாக இருந்தது. டிபி கஜேந்திரன் நல்ல காமெடி படங்களை கொடுத்துள்ளார். அவர் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு முன்னாடியே இப்படி நமக்கு பிடித்தமானவர்கள் இறப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்கள் இன்னும் பத்து வருடம் இருந்திருக்கலாம். அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.

நடிகை சச்சு பேசும்போது,

‘இந்த வருடம் பிறந்ததிலிருந்து அடுத்தடுத்து இப்படி மூன்று துயர செய்திகள் வெளியாவது வேதனை அளிக்கிறது. மனோபாலா இயக்கிய டிவி சீரியலில் நான் நடித்திருக்கிறேன். நடிகர் சங்க கட்டட விஷயத்தில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். சீக்கிரம் கட்டடத்தை முடிக்க வேண்டும் என்று அடிக்கடி மனோபாலா சொல்லிகொண்டு இருப்பார்” என்று கூறினார்.

இயக்குனர் லியாகத் அலிகான் பேசும்போது,

“கோடி ரசிகர்களை சிரிக்க வைத்த இவர்கள் மண்ணில் வாழ மாட்டோம் உங்கள் மனதில் வாழ்வோம் என்று கூறி நம்மை அழ வைத்துவிட்டு சென்று விட்டனர். மயில்சாமி சமூக அக்கறை கொண்ட துணிச்சலான நடிகர். அதேபோல கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல டி.பி.கஜேந்திரன் வெகு திறமைசாலி.. மனோபாலா யாரிடமும் ஈகோ பார்காத மனிதர். அவரது படத்திற்கு ஒருமுறை கதாசிரியர் கலைமணி ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்தும் அளவுக்கு வசனங்களை எழுதிக்கொடுத்து அனுப்பினார் ஆனால் மதியத்திற்குள்ளேயே அவற்றை படமாக்கிவிட்டு அடுத்த காட்சிகளை கேட்டு ஆள் அனுப்பினார் மனோபாலா. அந்த அளவிற்கு வேகமும் அதேசமயம் தரமும் கொண்ட படங்களை இயக்கியவர் மனோபாலா” என்று கூறினார்.

நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பேசும்போது,

‘இந்த மூன்று பேருமே மக்களை மகிழ்வித்துள்ளனர். டி.பி.கஜேந்திரன் எப்போதுமே பாசிட்டிவ் எண்ணம் கொண்டவர். ஆளுமை மிக்கவர். மயில்சாமியுடன் சிறுத்தை படத்தில் இணைந்து நடித்தேன். தனக்கு மிஞ்சி தான் தானம் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனிதன் கடன் வாங்கி தானம் செய்கிறான் என்றால் அது மயில்சாமி ஒருவராக தான் இருக்கும். என்னிடத்தில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தனக்காக எதுவும் கேட்கவே மாட்டார். யாராவது ஒருவருக்கு உதவி செய்வதற்காக தான் அவரது அழைப்பு வரும். எம்ஜிஆரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து மறைந்துள்ளார்.. இப்படி அவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
மனோபாலாவை பொருத்தவரை பல நிகழ்வுகளின் அவரே பொறுப்பை எடுத்துக் கொள்வார். ஏதாவது வாக்குவாதம் போன்றவை நிகழ்ந்ததாக தெரிய வந்தால் அன்று இரவே அழைத்து அதை சமரசமாக முடித்து வைப்பார். எல்லோருடனும் தொடர்ந்து நட்பில் இருப்பார். மூன்று பேரையும் மிஸ் பண்ணுகிறோம். அவர்களது குடும்பத்துடன் நிச்சயம் நாங்கள் இருப்போம்” என்று கூறினார்.

நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் பேசும்போது,

‘மனோபாலா இல்லை என்பது போலவே தோன்றவில்லை. 2009ல் இருந்து அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். நடிகர் சங்கத்திற்கு ரொம்பவே உறுதுணையாக இருந்தார். இடையில் அவருக்கு இருதய வலி ஏற்பட்டு கேட்டு அப்பல்லோவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இரண்டாவது நாளே படப்பிடிப்புக்கு வந்து ஆச்சரியம் அளித்தார்.
நடிகர் சங்கத்தில் கடைசியாக நடந்த இரண்டாவது பொதுக்குழுவில் எங்களுடன் சேர்ந்து நடிகர் சங்கத்தை சுத்தி சுத்தி பார்த்தார். அவரது படம் பிரச்சனையில் இருந்தது. அந்த படம் வெளிவர சட்டபூர்வமான உதவிகளை செய்வோம்.
டி.பி கஜேந்திரன் எனது குடும்பத்திற்கு மிக நெருங்கிய நண்பர். அவர் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவை நேரில் சந்தித்து பேசியபோது, அதுவரை யாரிடமும் பேசாமல் இருந்தவர் அப்போது தான் கலகலப்பாக பேசினார். அவரது படங்கள் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை கொடுத்தது இல்லை.
மயில்சாமி என்னிடம் தொடர்பு கொண்டு அடிக்கடி பல பிரபலங்களின் போன் நம்பர்களை கேட்பார். ஆனால் அது அவர்கள் மூலமாக யாருக்காவது உதவி செய்வதற்காகத்தான் இருக்கும். கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு அவர் செய்த உதவி மகத்தானது” என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்வில் பூசி முருகன் பேசும்போது, ‘ நடிகர் விவேக் இறந்தபோது அவர்கள் ஞாபகார்த்தமாக அவர் வசித்த தெருவிற்கு சின்ன கலைவாண விவேக் தெரு என பெயர் வைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். இரண்டே நாளில் அதற்கான உத்தரவை பிறப்பித்தார் தமிழக முதல்வர். அதேபோல இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பெயரிலும் ஒரு தெருவிற்கு பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதையும் முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வோம்” என்று கூறினார்.

நடிகர் பொன்வண்ணன் பேசும்போது

, “சிலரது மரணங்கள் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்து இந்த மூவருடனும் இணைந்து பயணித்துள்ளேன். மூன்று பேருமே மூன்று வித குணங்களைக் கொண்டவர்கள். மயில்சாமி தனது மிமிக்ரி ஆடியோ கேசட்டை எடுத்துக்கொண்டு பாரதிராஜா வீட்டிற்கு வந்தபோது இருந்து அவரை தெரியும்.
மனோபாலவுடன் எனக்கு அடிக்கடி உரிமை சண்டை நடக்கும். ஆனால் அது அப்போதைக்கு தான். மறுநாளே அவர் வழக்கம் போல என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார். மயில்சாமி எல்லோருக்கும் ஒரு விதத்தில் உதவுவார் என்றால் மனோபாலா வேறு விதமாக உதவி செய்பவர். இசையமைப்பாளர் சிற்பியின் பாடல்களை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக சென்று அவரை பிரபலமான இசையமைப்பாளராக மாற்றியதில் மனோபாலாவிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. வாழ்க்கை எந்த உத்தரவாதமும் இல்லாதது. இதில் கோபம் பொறாமை ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு இந்த வாழ்க்கையை நல்லபடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற பாடத்தைத் தான் இவர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள்” என்று கூறினார்.

நடிகை ரோகிணி பேசும்போது,

“மனோபாலா ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட.. அவரிடம் எந்த விஷயம் குறித்து கேட்டாலும் அதற்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி வைத்து அது குறித்து பல விவரங்களை கூறுவார். அவரிடம் இருந்த புகைப்படங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்த வேண்டும். அது அவருக்கு பெருமை சேர்த்த மாதிரி இருக்கும்” என்று கூறினார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது,

“இயக்குனர் மனோபாலா முதன்முதலில் நட்புக்காக என்கிற படத்தில் எனது உதவியாளராகதத் தான் ஒரு நடிகராக அறிமுகமானார். படப்பிடிப்பில் இருவரும் பல விஷயங்களை ஜாலியாக பகிர்ந்து கொண்டோம். உன்னுடன் நடித்த பின்னர் தான், நான் இப்போது பிஸியான நடிகராக இருக்கிறேன் என்று அவ்வப்போது என்னிடம் கூறுவா.ர் இங்கே மறைந்த இந்த மூவரும் நடிகர் சங்க கட்டிடத்தில் எப்படி எல்லாம் பேசி மகிழலாம் என நினைத்திருப்பார்கள். அதற்காக உடனடியாக நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்கும் வேலைகள் துரிதப்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,

“இந்த இரங்கல் கூட்டம் மூலமாக கலைக்குடும்பத்தை ஒன்று சேர்க்கும் பணியை இந்த மூவரும் செய்திருக்கிறார்கள். மயில்சாமி என்னுடைய படங்களில் வாய்ப்பு கேட்டு வந்தபோது என்னுடைய முதல் படத்தின் சண்டைக் காட்சிகளில் அவரது குரலை பயன்படுத்தி டப்பிங் கொடுக்க செய்தேன். டிபி கஜேந்திரன் எப்போதுமே தன்னை எழுத்தாளர் என்கிற மைண்ட்செட்டிலேயே வைத்திருப்பார். மனோபாலா சோகமாக இருந்து நான் பார்த்ததில்லை. இயக்குனர் சங்கத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் பாலமாக இருந்தார் மனோபாலா. சிகிச்சையில் இருந்தபோது நான் சீக்கிரம் வந்து விடுவேன் என கூறினார். கடைசியாக அவர் ஒரு படம் எடுத்து மிகுந்த துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்தார்” என்றார்.

பெப்சி துணைத் தலைவர் சுவாமிநாதன் பேசும்போது,

“தலைவர் ஆர்.கே.செல்வமணி இங்கே வந்திருந்தால் இவர்கள் பற்றி இன்னும் அதிகமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பார். மனோபாலா என்னை எப்பொழுது பார்த்தாலும் ‘டே சுவாமிநாதா’ என உரிமையாக அழைப்பார். நானும் மயில்சாமியும் ஒரே ஏரியா என்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். சுதந்திர தினத்தன்று தன் வீட்டு வழியாக செல்லும் குழந்தைகளை அழைத்து நோட்டு புத்தகங்களை தந்து மகிழ்வார். அந்த காட்சிகளை இனி காண முடியாது என்பது வருத்தம் தருகிறது” என்று பேசினார்.

நடிகை தேவயானி பேசும்போது,

‘இங்கே போட்டோவில் இருக்கும் இவர்கள் மூவரையும் பார்க்கும்போது சந்தோசமாக இருங்க, ஒற்றுமையாக இருங்க, பாசிட்டிவாக இருங்க என்று நமக்கு சொல்வது போல தோன்றுகிறது” என்று கூறினார்.

திரப்பட கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ் பேசும்போது,

“இவர்கள் மூவரும் இறந்தது போலவே தோன்றவில்லை. நானும் மயில்சாமி போல நன்றாக மிமிக்கிரி பண்ணுவேன். மனோபாலா இயக்கத்திலும் நான் நடித்துள்ளேன். மனோபாலா எப்போதுமே இதயத்தில் இருந்து பேசுவார். டி.பி கஜேந்திரன் நம்முடன் பேசும்போது நம் மனதை காயப்படுத்தாமல் நாகரீகமாக பேசக்கூடியவர். ஒரு முறை எனது உடல்நிலை சரியில்லாத நிலையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அதுகுறித்து விசாரித்து என் மனதை கஷ்டப்படுத்தாமல் பேசியதை மறக்க முடியாது” என்றார்.

நடிகர் வையாபுரி பேசும்போது,

“டிபி கஜேந்திரனுடன் பம்மல் கே சம்பந்தம் படத்தில் முதல் முதலாக இணைந்து நடித்தேன். அதன்பிறகு அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன். மனோபாலாவின் இயக்கத்தில் வெளியான நைனா என்கிற படத்திலும் நடித்துள்ளேன். பின்னர் அவருடன் இணைந்தும் நடித்திருக்கிறேன். வாரம் ஒரு நாளாவது நம்மிடம் பேசாமல் இருக்க மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டை எப்போதுமே கலகலப்பாக வைத்திருப்பார். அவர் ஒரு நல்ல சமையல் கலைஞரும் கூட.
அதே போல மயில்சாமி வீட்டிற்கு எங்களது குடும்பத்துடன் வாராவாரம் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். அவர் இறப்பதற்கு முதல் வாரம் சென்றபோது அனைவரும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து செல்பி எடுத்துக் கொண்டோம். அதற்கு பிறகு அவரை சந்திக்க முடியாது என்பதை இது முன்கூட்டியே உணர்த்தியது போல இருந்தது” என்று கூறினார்.

நடிகர் அனுமோகன் பேசும்போது,

“இந்த மூவருடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு உள்ளது. மனோபாலாவும் நானும் வாடா போட நண்பர்கள். உதவி இயக்குனர்களாக ஒன்றாக வாய்ப்பு தேடியவர்கள். அதேபோல திருவண்ணாமலை என்றாலே மயில்சாமி தான் ஞாபகத்துக்கு வருவார். தீபம் ஏற்றும் முதல் ஆளாக அங்கே இருப்பார். பூலோகத்தில் நீங்கள் நகைச்சுவை செய்தது போதும், தேவலோகத்திற்கு வந்து எங்களையும் மகிழ்வியுங்கள் என்று கூறி அழைத்துக் கொண்டார்களோ என்று தான் எந்த தோன்றுகிறது” என்று கூறினார்.

நடிகர் உதயா பேசும்போது,

“டி.பி கஜேந்திரன் என்னை தனது சொந்த தம்பி மகன் மாதிரி தான் நடத்துவார். மயில்சாமியை மாமா என்று உரிமையாக அழைப்பேன். அவரும் என்னை அப்படித்தான் அழைப்பார். மற்றவர்களுக்காக கல்வி உதவி கேட்பார். மனோபாலா எப்போதுமே என்னை உற்சாகத் தூண்டுதல் செய்யும் நபராகவே இருந்துள்ளார். அவர் கடைசியாக இயக்கிய குறும்படத்தில் நான் நடித்துள்ளேன் என்கிற பெருமையை எனக்கு கொடுத்துள்ளார். சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தை திரையுலகம் சேர்ந்து ரிலீஸ் பண்ண வேண்டும். அதேபோல அவர் நடத்தி வந்த யூட்யூப் சேனலையும் தொடர்ந்து நடத்த உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், மறைந்த இந்த கலைஞர்களுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்தவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடிகர் சங்க மேலாளர் தாமராஜ், பி.ஆர்.ஓ.ஜான்சன் அனைவரையும் வரவேற்றார்கள். நடிகை ரோகிணி இந்த நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here