இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட “பாய் – Sleeper Cells” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் “பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்”.

இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.
கே ஆர் எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.இவர் ஏற்கெனவே தொரட்டி, தீக்குளிக்கும் பச்சை மரம் போன்ற தமிழ்ப்படங்களுக்கும் சில மலையாள, தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்தவர். எடிட்டிங் இத்ரிஸ்.படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

படம் பற்றி இயக்குநர் கமலநாதன் புவன் குமார் பேசும்போது,

“நானும் ஆதவா ஈஸ்வராவும் நண்பர்கள். நாங்கள் இணைந்து வேறொரு படத்தினை உருவாக்கத் திட்டமிட்டோம். ஆனால் அதற்கு இரவு நேரத்தில் நிறைய படப்பிடிப்பு செய்ய வேண்டி இருந்தது.கொரோனா காலம் என்பதால் பெரிய சிக்கல்கள் வந்தது.எனவே மாற்றுத் திட்டம் ஒன்று யோசித்தோம். அப்படி உருவானது தான் இந்தக் கதை. இதற்கு ஆதவா தான் முன்னெடுப்பாக இந்த யோசனையைக் கூறினார். அதை விரிவு படுத்தி, திரைக்கதை உருவாக்கப்பட்டது. இது ஒரு NON-LINEAR வகை திரைப்படமாக உருவாகியிருக்கிறது . படத்தின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று அரசியலில் செல்வாக்கு செலுத்துகிற ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மதம் இருக்கிறது.
மதம் என்கிற கருவியை வைத்து
மனிதர்களின் ஏழ்மை மற்றும் அவர்களின் விரக்தி என்கிற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மூளைச்சலவை செய்து ஒரு சித்தாந்தத்திற்கு அடிமை ஆக்கி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் கொடூரத்தைச் சிலர் செய்து வருகிறார்கள் அதைப்பற்றி இந்தப் படம் பேசுகிறது .படத்தின் ஒற்றை நோக்கம் மனிதாபிமானம்தான் மேலானது என்பது தான்.

இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இவர் நெடுஞ்சாலை,கருப்பசாமி குத்தகைதாரர், கொக்கி போன்ற படங்களைத் தயாரித்தவர். பத்து தல படத்தில் முக்கியமான காதப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர்.

“பாய் – Sleeper Cells” திரைக்கதை வடிவம் முற்றிலும் புதிது, பார்வையாளர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நாயகன் ஆதவா ஈஸ்வரா இந்த படத்திற்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து கதாப்பாத்திரத்த உணர்ந்து நல்லா பண்ணிருக்காரு. திரைப்படத்திற்கான Indoor Location 2 Set போட்ருக்கோம், Outdoor Location அனைத்தும் Live – ஆக படமாக்காப்பாட்டது அது தான் படத்திற்கும் தேவைபட்டது, மிகவும் சவாலாக இருந்தது. 23 நாட்களில் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.
PVR பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிட வந்தது எங்களுக்குக் கிடைத்த பெரிய நம்பிக்கை. தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட முயற்சிகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன.

யாரை வைத்து இதன் போஸ்டர்களை வெளியிடுவது என்று யோசித்தோம். வழக்கமாகச் சினிமா சம்பந்தப்பட்டவர்களை வைத்து வெளியிட்டால் சாதாரணமாகவே தெரியும். பெரிய கவனம் பெறாது என்று நினைத்தோம். அதனால் படத்தில் சொல்லப்படும் கருத்தின் வாயிலாகவே வித்தியாசமான முறையில் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். எனவே மூன்று வெவ்வேறு மதத் தலைவர்களை வைத்து இதை வெளியிட முயற்சி செய்தோம்.அதற்குப் பலனும் கிடைத்தது.

அப்படி இந்து மதத்தின் சார்பாக, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள், இஸ்லாம் மதத்தின் சார்பாக இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான
கே .ஏ.எம் .முகமது அபுபக்கர் அவர்கள், கிறிஸ்தவ மதத்தின் சார்பில் அப்போஸ்தல சர்ச் ஆப் இந்தியா,பிஷப் டாக்டர் எஸ். எம். ஜெயக்குமார் அவர்கள் என மூன்று மதத் தலைவர்களையும் வைத்து வெளியிட்டோம் .

பொதுவாக ஒருவர் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி .எஸ் .ஆர். சுபாஷ் அவர்களையும் இணைத்து நான்கு பேரை வைத்து இந்தப் படத்தின் போஸ்டரை ஒரு முதியோர் இல்லத்தில் வெளியிட்டோம்.

படத்தின் தலைப்பைப் பார்த்தபோது மூன்று பேருமே தயங்கினார்கள். இது என்ன தலைப்பு இப்படி இருக்கிறது? என்றார்கள். ஆனால் நாங்கள் படத்தின் கதையையும் படம் சொல்லும் நோக்கத்தையும் அவர்களிடம் விளக்கிக் கூறிய போது தாங்கள் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும் நம்பிக்கையில் சம்மதித்தார்கள்.
அவர்களுக்கு எங்கள் நன்றி.

மதத்தின் பெயரால் நடக்கும் இது மாதிரியான தவறான செயல்களைக் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும் அதற்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு என்று மூவருமே கூறினார்கள். இதுவே எங்கள் படத்திற்கான முதல் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

“பாய்- ஸ்லீப்பர் செல்ஸ்” திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது,” இவ்வாறு இயக்குநர் கமலநாதன் புவன் குமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here