இயக்குனர் சீனு ராமசாமி.
அவரது முதல் படமான கூடல் நகரிலிருந்து சமீபத்திய படமான மாமனிதன் வரை பார்த்து ரசித்திருக்கிறேன்.
முதல் படத்தின் போது தொடங்கிய நட்பு, இப்போது வரை, இளகி விடாமல் கணத்து பயணப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ரசனை மிகுந்த டைரக்டர்.
காரணம் அடிப்படையில் அவர் ஒரு கவிஞர்.
பத்து நாட்களுக்கு முன்பு அவரை வேறொரு விஷயத்திற்காக சந்தித்தேன். பேசி விட்டு புறப்படும் போது ஒரு கவரை என்னிடம் கொடுத்தார்.
“வெய்ட்” டாக இருந்தது.
வீட்டிற்கு வந்ததும் பிரித்து பார்த்தேன்.
அவர் எழுதிய முழு கவிதைகளின் தொகுப்பான “புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை” புத்தகம் இருந்தது.
எனக்கு சந்தோஷம் தாள வில்லை.
இரண்டு மூன்று நாட்களாக அந்த கவிதைகளை வரிக்கு வரி ரசித்துப் படித்தேன்.
அப்போதுதான் அதன் “வெய்ட்” புரிந்தது.
நிறைய கவிதைகள் நல்ல கவிதைகள்.
புத்தகம் முழுவதுமே சிறப்பு வாய்ந்திருந்தது.
வாழ்த்துக்கள் சீனு.
உங்கள் அடுத்தப் படமும் உலக தரத்தில் இருக்கும் என்று நம்புகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த கவிதை –
உந்து
நீரில் விழுந்த
எறும்பு தத்தளித்து நீந்தி
சிறு இலையைப் பற்றி
பயணப்படும் காட்சியை
முழுமையாகப் பார்த்தேன்.
யுத்தத்தில் வென்ற
வீரனைப் போல
கரைக்குத்
திரும்பிக் கொண்டிருந்த
சிறு உயிர்
எனக்குச் சொன்னது
நீந்திக்
கரைசேர்.
வான் மிருகம்
காதுகளைத்
திருப்பிக் கொள்ளும்
ஆழ்கடல் திமிங்கலம்
பறந்து வெளியேறிவிடும்
பறவைகள்
ஓடி ஒளியலாம் விலங்குகள்
ஊர்ந்தோ
தவழ்ந்தோ
மரவள்ளிக் கிழங்குகளும்
அது முளைவிடக் காத்திருக்கும்
அம்மக்களும்
எப்படி தப்புவது?
தூரத்தில் வருகிறது
ராணுவ விமானம்.
- மணிபாரதி.