பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மாமன்னன். வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால், ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமூக அக்கறையும் சமூக சிந்தனையும் கொண்ட படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜின், அடுத்த சமூக அக்கறை உள்ள படமாக வெளியாகி இருக்கும் மாமன்னன், பல விருதுகளை வாங்கப் போவது உறுதி. எந்த இடத்திலும் தான் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் படம் இயக்கியிருக்கும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டமான சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியில், காலம் காலமாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு இருந்த ஒரு இனம், தலைநிமிரும் போது என்ன நடக்கிறது என்பதே மாமன்னன் படத்தின் கதை. ஏதோ ஒரு மூலை முடுக்கு கிராமத்தில் இருக்கும் பெயர் தெரியாத நபருக்கு மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்பவர் சமூகத்தைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்டவராகவே கருதப்படும் சமூக அவலத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறது இப்படம்.
படத்தின் நாயகர்கள் என்றால் அது வடிவேலு, உதயநிதி மற்றும் பகத் பாசில் என மூன்று பேரையும் சொல்லலாம். மூன்று பேரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். உதயநிதி ஏற்கனவே இப்படத்தை கடைசி படம் என்று அறிவித்துவிட்டது வருத்தத்தை அளிக்கிறது. இவ்வளவு சிறப்பாக நடிப்பவர் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பகஸ்பாசில் குறித்து சொல்லத் தேவையே இல்லை, எந்த பாத்திரமானாலும் அப்பத்திரமாகவே மாறிவிடும் பகத்பாஸில் இப்படத்திலும் அதகளப்படுத்தி இருக்கிறார். வடிவேலுவின் திரை பயணத்தில் இது ஒரு மைல் கல் படமாக இருக்கும். ஏற்கனவே சில படங்களில் வடிவேலு குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த வேடம் லைஃப் டைம் செட்டில்மெண்ட் வேடம் என்று சொல்லலாம். வழக்கமாக டூயட் பாடும் நாயகியாக இல்லாமல் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை தாங்கி நடித்துள்ளார். சிறப்பாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஏ ஆர் ரகுமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம், வடிவேலுவின் குரலில் ஒலிக்கும் பாடல் மனதுக்குள் ஊடுருவி செல்கிறது. தேனி ஈஸ்வர் அவர்களின் கேமரா சேலம் மாநகராட்சி பகுதிகளையும், அதை ஒட்டி உள்ள பின் தங்கிய கிராமம், மலைப் பாங்கான பகுதிகள் என புகுந்து விளையாடுகிறது. செல்வாவின் எடிட்டிங் நறுக்குத் தெரித்தால் போல் உள்ளது. மொத்தத்தில் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக வெளியாகி இருக்கிறது மாமன்னன்.
மாமன்னன் ஆட்சி செய்வான்