நான் இயக்கியுள்ள ‘பஜனை ஆரம்பம்’ முகம் சுழிக்க வைக்கும் படம் அல்ல; இப்படத்தில் பெண்களைப் பற்றித் தவறாக எதுவும் காட்டப்படவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் தட்சிணாமூர்த்தி கூறினார்.

ஸ்ரீரங்க நாச்சியார் மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ். தோதாத்ரி சந்தானம் தயாரிப்பில் ,கௌஷிக் யாதவி, நாஞ்சில் விஜயன், சோபியா நடிப்பில் உருவாகி வரும் படம் பஜனை ஆரம்பம் .இப்ப படத்தை பல்வேறு இயக்குநர்களிடம் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பணியாற்றிய ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி எழுதி இயக்குகிறார். பி. இளங்கோவன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார், வசனம் M.ஹரிஹரன். நந்தன் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.

சென்னை, மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னையில் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கதாநாயகன் கௌசிக் பேசும்போது,
”இது ஒரு காமெடி எண்டர்டெய்னராக உருவாக்கி உள்ளது. படத்தின் தலைப்பைப் பார்த்து தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். இந்தப் படம் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்:

மக்களுக்கும் அரசுக்கும் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணங்களைச் சொல்கிற படமாக இருக்கும்” என்றார்.

கதாநாயகி யாதவி பேசும் போது,

“படத்தின் பெயரையும் போஸ்டர்களையும் பார்க்கும்போது இதில் நீங்கள் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டீர்கள் என்கிறார்கள் ஆனால் நான் படத்தின் கதையையும் எனது கதாபாத்திரத்தையும் கேட்டேன். எனக்குப் பிடித்திருந்தது.மற்றபடி எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.

போஸ்டரில் பல பெண்கள் முகம் காட்டுகிறார்கள். படத்தில் அவர்களுடன் கூட்டத்தில் ஒருவராக இருப்பது பற்றியும் கேட்கிறார்கள். ஒரு படம் என்கிற போது ஒட்டுமொத்த குழுவினரின் வெற்றியாக இருக்க வேண்டும் என்கிற வகையில் நான் நடித்து இருக்கிறேன். எனது பாத்திரம் பேசப்படும் “என்றார்.

இயக்குநர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி பேசும் போது,

“பஜனை என்பது மக்களிடம் பரவலாக அறியப்பட்ட சொல் தான்.

ஒவ்வொரு கோயிலிலும் இன்று ஆறு முப்பது மணிக்கு பஜனை ஆரம்பம் என்று பார்த்திருக்கிறோம் .சாதாரணமாக அதைக் கடந்து போய் இருப்போம். அந்த வகையில் தான் படத்தின் தலைப்பை வைத்திருக்கிறோம்.ஒரு ஈர்ப்புக்காகவும் பரபரப்புக்காகவும் கவனம் பெற வேண்டும் என்றும் தான் இந்தப் பெயரை வைத்துள்ளோம் .இந்தப் பட போஸ்டரில் 10 பெண்களுக்கு ஒருவர் தாலி கட்டுவது போல் ஒரு தோற்றம் உள்ளது. ஜப்பானில் அப்படி ஒருவர் ஒரே ஆண்டில் 10 பேரை மணம் செய்து கொண்டு அவர்களைத் தாயாக்கி இருக்கிறார்.இது ஒரு திருமண சாதனையாக பேசப்படுகிறது. பத்திரிகையில் வந்துள்ள இந்தச் செய்தியை படத்தில் வரும் காமெடியன் படிக்கிறார். அப்போது அதைக் கேட்கிற கதாநாயகன் நாம் அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறார். அப்படி நமது கதாநாயகன் கற்பனை செய்து கனவு காண்பதாக வரும் காட்சியில்தான் இப்படி வருகிறது.இங்கே நாயகன் பல பெண்களுக்குத் தாலி கட்டிப் பைத்தியம் ஆகி தற்கொலை செய்து கொள்வது போல் தான் காட்சி வரும். மற்றபடி படத்தில் பெண்களை எந்த வகையிலும் தவறாக நான் காட்டவில்லை.படம் மெடிக்கல் மாஃபியா பற்றித்தான் முழுமையாகப் பேசுகிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடச் சொல்லி பல்வேறு திரை உலக நண்பர்களிடம் நான் வேண்டுகோள் வைத்தேன். ஆனால் யாரும் தலைப்பைப் பார்த்துவிட்டு வர மறுத்து விட்டார்கள். அனைவருக்கும் சொல்கிறேன் இது ஆபாசப் படம் அல்ல. பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் படமும் அல்ல. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் படத்தில் இருக்காது.இன்று நாட்டில் நடக்கும் பிரச்சினை பற்றிச் சொல்கிற படம் அவ்வளவுதான்.அது என்ன பிரச்சினை என்று படத்தைப் பார்க்கும் போது தெரியும். தவறாக நினைப்பவர்கள் அனைவரும் படத்தைப் பார்க்கும் போது தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இது ஒரு முழு நீள என்டர்டெய்னர்.
முதற்கட்டமாக இதுவரை 17 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.இறுதிக் கட்டப் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளோம்.

படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன. சண்டை காட்சிகள் எல்லாம் ரியலாக இயல்பாக எடுக்கப்பட்டுள்ளன.படத்தின் பாடல்கள் வெளியீட்டின் போதும் படம் திரையிடும் முன்பும் படம் பற்றிய கூடுதல் விவரங்களை அளிப்போம்.அக்டோபரில் படம் வெளியாகும். அப்போது படத்தைப் பற்றிய அனைத்து தவறான அபிப்ராயங்களும் மாறிவிடும்.”என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here