தமிழ் திரையுலகில் அவ்வப்போது டெக்னிக்கலாக மிரட்டும் படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்க்கும் அந்தவகையில் உலத்தரத்தில் ஒரு தமிழ்படம் என்று ‘கொலை’ படத்தை சொல்லலாம். பாலாஜி கே குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்திரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கொலை. இபடத்துக்கு கிரிஷ் இசையமைக்க, சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரபல மாடல் மீனாட்சி சௌத்திரி கொலைசெய்யப்பட, அக்கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான ரித்திகா சிங், உயர் அதிகாரி ஜான் விஜய்யின் எதிர்ப்பையும் மீறி, முன்னாள் காவல்துறை அதிகாரியான விஜய் ஆண்டணியின் உதவியை நாடுகிறார். மனைவியை பிரிந்து வாழும் விஜய் ஆண்டனியின் மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் உச்சபட்ச மன அழுத்தத்தில் இருக்கும் விஜய் ஆண்டனி கொலை பற்றிய விசாரணை தொடங்கி எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதே கொலை படத்தின் கதை.
பாலாஜி கே குமார் திரைக்கதையை ஒவ்வொரு ஃப்ரேமாக செதுக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். த்ரில்லர் படத்துக்குரிய சூழ்நிலையை ரசிகர்களின் மனதிலேயே, உருவாக்கி படத்துடன் ஒன்றி பயணிக்க வைத்திருக்கிறார். விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது மிகச்சிறப்பு. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் நடிகர்களாக தெரியாமல் கதாபாத்திரங்களாகவே ரசிகர்களின் மனதில் பதிகின்றன.
அமையான அலட்டல் இல்லாத கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி. நடை, உடை, பாவனை, தோற்றம் என அனைத்திலும் மத்திய வயதுடைய மனிதராக மாறி இருக்கிறார். ரித்திகா சிங் கதாபாத்திரதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இயக்குனரின் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது சிவக்குமார் விஜயனின் கேமிரா. எடிட்டர் ஆர்.கே. செல்வாவின் எடிட்டிங் தரமாக இருக்கிறது.
பாடல்களும் பின்னணி இசையும் கிரிஷ் கைவண்ணத்தில் மிகச்சிறப்பாக இருக்கிறது. கொலை படம் உலகத்தரத்திலான ஒரு த்ரில்லர் பட அனுபவமாக இருக்கிறது.
கொலை : தரமான கலைப் படைப்பு