புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’ தொடக்க விழா!

யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் ‘துடிக்கிறது மீசை’ படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் இப் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்,முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் , சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குநர் பேரரசு , மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

‘துடிக்கிறது மீசை’படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஜே. இளன் பேசும்போது,

“நான் இயக்குநர் எஸ்.டி.சபா அவர்களிடம் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி தாணு அவர்களிடமும் பணியாற்றி சினிமாவில் பல துறைகள் பற்றியும் அறிந்து அனுபவம் பெற்று இருக்கிறேன்.

படத்தின் கதை என்னவென்றால்,காதல் தவறில்லை. ஆனால்,காதலுக்காக
வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதைத் தவறு என்று சொல்கிற கதை இது. காதலுடன் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது. இக்கதை மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது. இந்தக் கதையை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் காதல், நகைச்சுவை கலந்து சுவாரசியமாகக் கூறவிருக்கிறோம்.

இன்று இந்தத் தொடக்க விழா நடைபெற்று தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இப்படத்தில் முருகதாஸ், புகழ், மாறன், யோகிதா, வர்ஷினி, அக்ஷிதா ஆகியோர் நடிக்கிறார்கள். நாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பதற்கும் பிரபலமான நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.

இன்றைய சினிமாவின் ஆரோக்கியமான விஷயமாக எனக்கு ஒன்று தோன்றுகிறது. இன்று எத்தனை பெரிய நட்சத்திரங்கள் நடித்தாலும் அவை வெற்றிபெறும் என்று கூற முடியாது. ஆனால் நல்ல கதை அம்சம் உள்ள படங்கள், புதுமையான திரைக்கதை உள்ள படங்கள் இப்போது வெற்றி பெற்று வருகின்றன. இது ஒரு நல்ல ஆரோக்கியமான, என்னைப் போன்ற புதியவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் மூலம் புகழ்பெற்ற வசனமான “துடிக்கிறது மீசை ” என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளோம்.இத்தலைப்பு கோபத்தைக் குறியீடாகச் சொல்கிறது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு அசோக்குமார், இசை ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் இசைவாணன், சீர்காழி சிற்பி என்று சினிமா மீது பேரார்வமும் திறமையும் உள்ளவர்கள் இணைந்துள்ளார்கள்.படப்பிடிப்புக்கு நம்பிக்கையோடு புறப்படுகிறது படக்குழு” என்கிறார் இயக்குநர் எம்.ஜே. இளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here