முழுக்க முழுக்க கமர்சியல் திரைப்படங்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்ட சூழ்நிலையில், எந்தவித கமர்சியல் சமரசங்களும் இன்றி, மிகச்சிறந்த திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் தங்கர் பச்சான். சமீபகாலமாக அடிக்கடி நம் காதில் விழும் வாசகமான ‘உலகத்திரைப்படம்’ என்ற பதம் கருமேகங்கள் கலைகின்றன படத்துக்கு சிறப்பாக பொருந்தும். நீண்ட நாட்களுக்குப்பிறகு மிகச்சிறந்த திரை அனுபவத்தை கொடுத்திருக்கும் கார்மேகங்கள் கலைகின்றன படத்தை கொடுத்ததற்காக தங்கர் பச்சான் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

தாங்கள் தொலைத்துவிட்ட உறவுகளை தேடிச்செல்லும் முன்னாள் நீதிபதி பாரதிராஜாவும், பரோட்டா மாஸ்டர் யோகிபாவும் ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்துக்கொள்கின்றனர். இருவரின் தேடலும் எங்கு சென்று முடிகின்றன என்பதே கருமேகங்கள் கலைகின்றன படத்தின் கதை. நேர்மையின் பக்கம் நிற்பவர், நேர்மையும் அறமும் வாழ்க்கைக்கு உதவாது என்று நினைப்பவர், வயதான பெற்றோரை பிரிந்து வெளிநாட்டில் சுகபோகமாக வசிக்கும் பிள்ளைகள், கைவிட்டவன், கைவிடப்பட்டவள், சமூகத்தின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர், கடைநிலை வாழ்க்கையில் கரைந்து கொண்டிருப்பவர், முதியவர், குழந்தை என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் வலியையும் மிக நேர்த்தியான திரைக்கதையு மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் தங்கர் பச்சான்.

தமிழ் திரையுலகை புரட்டிப்போட்ட பல படங்களை இயக்கியுள்ள பாரதிராஜாவுக்கு, நடிகராக இப்படம் ஒரு மிக முக்கிய மைல்கல் என்று சொல்லுமளவுக்கு நடித்திருக்கிறார். அவர் தோற்றமும், உடல்மொழியும் பாரதிராஜா என்பவரை மறக்கச்செய்து ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனாகவே உணரச்செய்கிறது. தான் ஒரு நகைச்சுவை நடிகன் மட்டுமல்ல என்று ஏற்கனவே நிரூபித்திருக்கும் யோகிபாவுக்கு இப்படம், தலைசிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது. கௌதம் மேனன், சாரல், அதிதி பாலன் என அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் தன் இசை ஆளுமையை படம் முழுக்க படரவிட்டிருக்கிறார். ’மன்னிக்கச் சொன்னேன்’, ‘செவ்வந்தி பூவே’ பாடல்கள் மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ஏகாம்பரம் அவர்களின் க்ளாசிகல் கேமிராவும் லெனின் அவர்களின் மரபு சார்ந்த படத்தொகுப்பும் நம்மையும் திரைக்குள் இறங்கி, களத்தில் கலந்து கதாபாத்திரங்களை அருகில் இருந்து உணரச்செய்திருக்கின்றன.

இதை ஒரு வழக்கமான திரைப்படம் என்று கடந்து சென்று விடமுடியாது, இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களும், சூழ்நிலையும் நமக்கோ, நம்மை சார்ந்தவர்களுக்கோ எதாவது ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கும், படம் பார்க்கும்போது நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது. நிச்சயம் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் கருமேகங்கள் கலைகின்றன.

கருமேகங்கள் கலைகின்றன – குறிஞ்சி மலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here