ஒரே நேரத்தில் காமெடி நடிகராகவும் நாயகனாகவும் நடித்து கலக்கி வரும் யோகிபாபு நாயகனாக நடித்து வெளியகி இருக்கும் படம் லக்கிமேன். இதில் யோகிபாபுவுக்கு ஜோடியாக ரேச்சல் நடித்துள்ளார். பாலாஜி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இளம்வயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவராக கருதப்படும் யோகிப்பாபுவுக்கு திடீரென அதிர்ஷ்டம் அடிக்க அவர் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது, அந்த அதிர்ஷ்டம் அவருக்கு மகிழ்ச்சியை கொண்டுவந்ததா இல்லை மேலும் சிக்கல்களை கொடுத்ததா என்பதே லக்கிமேன் படத்தின் கதை. மனைவி ரேச்சல், குழந்தை சாத்விக்குடன், வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியாமல் கஷ்டப்படும் ரியல் எஸ்டேட் புரோக்கரான யோகிபாபுவுக்கு ஒரு அதிர்ஷ்ட குலுக்கலில் கார் பரிசாக விழ அவர் வாழ்க்கையே மாறுகிறது. அதே நேரம் அந்த காரால் காவல் துறை அதிகாரியான வீராவுடன் யோகிப்பாபுவுக்கு முரண்பாடு ஏற்பட என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி.

இது போன்ற காதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை, யோகிபாபுவுக்கு அல்வா சாப்பிடுவதுபோல, பின்னி எடுத்திருக்கிறார். அவருக்கு இணையாகவே காமெடியில் கலக்கி இருக்கிறார் ரேச்சல்.


குழந்தை நட்சத்திரம் சாத்விக் க்யூட்டாக நடித்திருக்கிறார். யோகிபாபுவின் நண்பனாகவரும் அப்துல் லீ ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய விசிட்டிங் கார்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. போலீஸ் அதிகாரியாகவரும் வீரா, டெம்பிள் மங்கீஸ் தாவூத், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.

சந்தீப் கே.விஜய்யின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது, குறிப்பாக இருளில் கதை நடக்கும் களத்தை சிறப்பாக படம் பிடித்திருக்கிறார். ஷான் ரோல்டனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலம், ஷான் ரோல்டன் பாடி இருக்கும் ‘எதுதான் சந்தோஷம்‘ பாடலும், பிரதீப் குரலில் ஒலிக்கும் ‘ஒரு வரி காதல்‘ பாடலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. அனைவரும் ரசிக்கும் படியான முழு நீள நகைச்சுவை படமாக வெளியாகியுள்ளது லக்கிமேன்

லக்கிமேன்: அதிர்ஷ்டசாலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here