பெற்ற தாய்க்கும், வளர்ப்புத் தாய்க்கும் குழந்தை மீதான உரிமை குறித்த பாசப் போராட்டம் தான் ஆர் யூ ஓகே பேபி.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி, அபிராமி, முல்லை அரசி, அசோக் குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படத்தை, மங்கி கிரியேட்டிவ் லேப் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு கிருஷ்ணசேகர், படத்தொகுப்பு பிரேம்குமார்.
முல்லை அரசி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது அவள் பெற்ற குழந்தை, குழந்தை இல்லாத சமுத்திரக்கனி அபிராமி தம்பதிக்கு தத்து கொடுக்கப்படுகிறது. அபிராமி சமுத்திரக்கனி தம்பதி, அந்த குழந்தை மீது பாசத்தை கொட்டி வளர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், முல்லை அரிசி தன் குழந்தையை திரும்ப கேட்க, நடக்கும் சம்பவங்களும் பாசப் போராட்டங்களும் தான், ஆர் யூ ஓகே பேபி என்ற ஒரு மென்மையான, இதயத்தை நெகிழ வைக்கும் படத்தின் கதை.
அபிராமி சமுத்திரக்கனி இருவரும் குழந்தை இல்லாத மத்திய வயது தம்பதியின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்துள்ளனர். குழந்தையை பிரிந்து தவிக்கும் ஒரு தாயின் ஏக்கத்தையும் துடிப்பையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் முல்லை அரசி. சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணன், இப்படத்திலும் அதே பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இந்த பாத்திரம் சிறப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் இசை ஒரு மெல்லிய தாலாட்டாக மனதினில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. படத்தின் தன்மைக்கேற்ற ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளன. நடிகர்களின் இயல்பான நடிப்பு, இசை, படத்தொகுப்பு உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள், இயக்கம் வசனம் என படத்தின் அனைத்து துறைகளும் சிறப்பாக இயங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
மலையாளத் திரை உலகையும் உலக சினிமாக்களையும் பாராட்டிக் கொண்டிருக்கும் நாம், இது போன்ற மெல்லிய உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்களை கொண்டாட வேண்டும், வரவேற்பு கொடுக்க வேண்டும் அதுவே தமிழ் திரை உலகின் உண்மை ஆன்மாவை தட்டி எழுப்புவதாக இருக்கும்.
ஆர் யூ ஓகே பேபி : நெகிழ்ச்சி