‘பூ’ராம், காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லெட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜூ, கருப்பு ஆகியோர் நடிப்பில் ரா.வெங்கட் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் கிடா. இப்படத்தை ஸ்ரீஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்.ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய தீசன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு ஆனந்த் ஜெரால்டின்
எளிய மனிதர்களின் வாழ்க்கையை இயல்பு மாறாமல் கண் முன்னே படம்பிடித்து காட்டியுள்ள இயக்குனர் ரா.வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ’பூ’ ராம், பாண்டியம்மாள் தன் பேரன் தீபனுடன் கிராமத்தில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு வேறு யாரும் இல்லாத நிலையில் கிடைக்கும் வருமானத்தில் பேரனை வளர்த்து வரும் தாத்தா ’பூ’ ராமுக்கு தீபாவளி ரூபத்தில் சோதனை வருகிறது. தன் பேரன் ஆசைப்பட்ட துணியை வாங்கி கொடுக்க முடியாமல் கஷ்டப்படும் ராம், சாமிக்கு நேர்ந்துவிட்ட கிடாயை விற்க முடிவு செய்கிறார். அதன் பிறகு அவர் சந்திக்கும் இன்னல்களும் சம்பவங்களுமே கிடா படத்தின் கதை
மறைந்த நடிகர் ’பூ’ ராம் அவர்களை சிறந்த நடிகர் என்று பாராட்டுவது ஏதோ சம்பிரதாயமாக இருக்கும், கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதே போல் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய நபர் காளி வெங்கட் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார், காளி வெங்கட் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள். மாஸ்டர் தீபன், பாண்டியம்மாள் தொடங்கி சின்ன சின்ன கேரக்டர்கள் வரை மனதில் பதிகிறார்கள்.
தீசனின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக ஏகாதசி பாடல் மிகச்சிறப்பு. ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு, எம்.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு, கலை இயக்குனர் கே.பி.நந்துவின் பணிகள் என அனைத்தும் படத்துக்கு முதுகெலும்பாக அமைந்துளது. இயக்குனர் தேர்ந்தெடுத்த கதையும், அமைத்த திரைக்கதையும் வசனங்களும் ரா.வெங்கட் அவர்களை தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்த்தும் என்பதில் ஐயம் இல்லை.
கிடா – மனதில் பாய்கிறது
கிடா திரைப்பட விமர்சனம்