கம்போடியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் 2000 ஆண்டுகாலப் பாரம்பரியத் தொடர்பு உண்டு.வாணிபத் தொடர்பு வழியாகச் சென்று கலந்த தமிழர்களின் நாகரிகம் பண்பாடு போன்றவற்றின் தாக்கம் கம்போடியாவில் இன்றும் உண்டு.
அங்கும் தமிழர்கள் வசிக்கிறார்கள்; தமிழ்க் கலைகளைக் கொண்டாடுகிறார்கள்.அதன் ஓர் அம்சமாக கம்போடியாவின் சியம் ரீப் நகரில் இரண்டாம் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு நடைபெற்றது.
நவம்பர் 21 முதல் 26 வரை நடைபெற்ற மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டார்கள்.
ஜெர்மன் ஹம் நகரில் உள்ள காமாட்சி அம்மன் தலைமை ஆதீனம் சிவ ஸ்ரீ பாஸ்கர குருக்கள்,ஆஸ்திரேலிய எழுச்சிக் கவிஞரும் சிறை அதிகாரியுமான ரவிச்சந்திரன்,ஆசிரியையும் வானொலி ஒலிபரப்பாளருமான சாரதா ரவிச்சந்திரன்,சமூக செயற்பாட்டாளர் நாவலூர் முத்து, தொல் ஆய்வாளர் சுகவனம், புலவர் நந்திவர்மன், டாக்டர் வாசுகி சித்திரசேனன்,அகிலன் ஆகியோருடன்
தமிழ் நடிகர் விஜய்விஷ்வா கலந்து கொண்டார்.
இவ்விழாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டது .பாடலை பாடியவர் வேல்முருகன்,கேவி மீடியாஸ் சார்பில் டாக்டர் பி.செந்தில் நாதன் தயாரித்திருந்தார். ஞானம்- சீனு ஒருங்கிணைத்துள்ளனர். ஜி கே வி இசையமைத்துள்ளார். தாமரை வரிகளை எழுதியுள்ளார்.
தனது கம்போடியப் பயண அனுபவம் பற்றி நடிகர் விஜய் விஷ்வா கூறும் போது,
“நான் கம்போடியா சென்று அங்குள்ள மண்ணையும் மக்களையும் பார்க்கும்போது எனக்கு நமது தமிழ் கலாச்சாரத்தின் மீது பிரமிப்பு ஏற்பட்டது. கடல் கடந்து நம் தமிழர்கள் சென்று பரப்பிய பண்பாட்டை அங்கே காண முடிந்தது.
ஒரு சுற்றுலாவாக அங்கோர்வாட் சென்று அங்குள்ள கோயில்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
நமது தமிழ் மன்னர்கள் அமைத்த கோயிலைக் கண்டு ஒரு புறம் பெருமையாகவும் அதன் சிதைவுகளைக் கண்டும் அதன் மீது வேறொரு பண்பாட்டுச் சின்னங்களை நிறுவ முயன்று இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாகவும் இருந்தது.
கம்போடிய மக்கள் மிகுந்த மரியாதை தருபவர்கள். பொறுமையானவர்கள். அவர்கள் நம்மிடம் பழகும் போது அவர்களது பண்பாட்டை அறிய முடிந்தது.
கம்போடியாவிலுள்ள தமிழ் சான்றோர்கள் கம்போடிய அரசின் தலைமை அலுவலகத்தில் தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி உள்ளனர் .மேலும் கம்போடியப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கவிஞர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தியதில் கம்போடியாவில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஞான சேகரன்,சீனிவாச ராவ், தாமரை சீனிவாசராவ் ஆகியோர் ஆற்றிய பணி அறிந்து பெருமையாக இருந்தது. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் வாழ்த்தினாலும் தகும்.
கம்போடிய மண்ணையும் மக்களையும் பார்க்கும்போது நமது மக்களைப் பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது.
அந்தக் கவிஞர்கள் மாநாட்டில் மொழி தெரியாவிட்டாலும் கூட நமது மொழியை மதித்து பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாகவும் பொறுப்பாகவும் அமர்ந்திருந்து கண்டு களித்தது மகிழ்ச்சியாக இருந்தது .அது நமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் தரக்கூடிய மரியாதையாகவும் இருந்தது” எனக்கு ஒளிரும் நட்சத்திரம் விருது வழங்க கௌரவித்தனர்,இவ்வாறு விஜய் விஷ்வா கூறினார்.