சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும், ’கூழாங்கல்’ புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி- அன்னா பென் நடித்த ’கொட்டுக்காளி’ திரைப்படம், புகழ்பெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் முதல் தமிழ்த்திரைப்படம்!

சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் உலகத்தளத்தில் புகழையும் ஒரு திரைப்படம் பெறப்போகிறது என்ற விஷயம் நமது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே பெருமையான ஒன்று. அந்த வகையில், வருகிற 2024 ஆம் வருடம் தமிழ் திரையுலகிற்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், தான் இயக்கிய ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறார். பெர்லினில் பிப்ரவரி, 2024ல் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ‘கொட்டுக்காளி’ தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் திரையிட தேர்வாகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெறுகிறது ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கும் இந்தப் பெருமைமிகு படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்க சூரி, அன்னா பென் மற்றும் பலர் தங்களது திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒரு திரைப்படம் தேர்வாகி இருக்கிறது என்பது உலக அளவில் ஒட்டுமொத்த திரைப்படத் துறையினருக்கும் பெருமை மிகு அடையாளமாக அமைகிறது.

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ”நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் செயல்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி தொழில் மீது ஆர்வம் கொண்ட திறமைசாலிகள் சரியாக அமைந்துள்ளனர். மொழி மற்றும் பிராந்திய தடைகளுக்கு அப்பால் அனைவரும் தொடர்புபடுத்தக்கூடிய மனித உணர்ச்சிகளை அங்கீகரிக்கும் தனித்துவமான கதைகளை உருவாக்க எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளது. இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும்” என்றார்.

’கொட்டுக்காளி’ படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்க, இணைத் தயாரிப்பாளர் கலை அரசு மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸூடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

பி.சக்தி வேல் ஒளிப்பதிவு, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு, சுரேன் ஜி & எஸ். அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பு, ராகவ் ரமேஷின் ஒலி ஒத்திசைவு மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் இப்படம் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here