‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் இன்று காலமானார் என்கிற செய்தி என் மனதை கடும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அவரின் மறைவு, திரையுலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே மாபெரும் இழப்பு.

தான் முன்னெடுத்த எல்லா செயல்களிலும் / பொறுப்புகளையும் சிரமேற்கொண்டு வென்று காட்டியதில் ‘கேப்டனுக்கு’ நிகர் உண்டோ என்றே எண்ண தோன்றுகிறது.
நடிப்பு என்பதைத் தாண்டி சக நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள், நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைவரது முன்னேற்றத்திலுமே கேப்டனின் பங்கு அளப்பரியது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை, கடனில் இருந்து மீட்டெடுத்த இமாலய சாதனை ‘கேப்டன்’ அவர்களையே சாரும்.

அவரைப்பற்றி, உயர்ந்த, நல்ல சொற்களை மட்டுமே எவரும் மொழிந்து கேட்க முடியும். வெற்றிகளையும் புகழ் வார்த்தைகளையும் எப்போதும் பொருட்படுத்தாது எல்லாரையும் சமமாக பாவித்து, சிறந்த பண்பாளராக திகழ்ந்த ‘கேப்டன்’ அவர்களை நினையும் போது மிகப்பெரிய பெருமிதம் மட்டுமே இதயத்தில் நிற்கிறது.

வெள்ளி விழா கதாநாயகனாக, உணவளிப்பதில் வள்ளலாக, நடிகர் சங்க தலைவராக, வெளிப்படையான அரசியல் தலைவராக, நல்லுள்ளம் படைத்த சிறந்த மனிதராக, நாடி வரும் அனைவருக்கும் பெரிய மனம் படைத்த ஒரு அண்ணனாக, தலைமை பண்போடு வாழ்ந்து காட்டிய ‘கேப்டன்’ அவர்களின் வாழ்க்கை, நம் எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணம்.

‘கேப்டன்’ அவர்கள் மறைந்த இந்த தருணத்தில் முன்னின்று செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தும், நான் வெளிநாட்டில் இருப்பதினால், அவரின் மறைவுக்கு உடனே நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலை , என்னை மிகவும் மனம் வருந்தச்செய்கிறது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சங்கத்திற்காகப் பல நல்ல முன்னெடுப்பைச் செய்த அவரது மறைவு, நடிகர் சங்கத்திற்கும் தனித்த பேரிழப்பாகும்.

என்றும் உங்கள்,
கார்த்தி

  • நடிகர்
  • பொருளாளர், தென்னிந்திய நடிகர் சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here