பா.இரஞ்சித்தோடு இணைந்து நிற்போம். மார்கழியில்மக்களிசை நிகழ்சியில் பார்த்திபன், ஜீவி பிரகாஷ் பாராட்டு.

“கலை என்பதே அரசியல் நடவடிக்கை தான்” என்ற கூற்றிற்கிணங்க தனது ஒவ்வொரு படைப்பிலும் தனது அரசியல் நடவடிக்கையை சமரசமில்லாமல் முன்னகர்த்திச் சென்றுகொண்டிருக்கும் இயக்குனர் பா. இரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இவர் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப்படங்களை தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவை தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் “நீலம் பண்பாட்டு மையம்”, “கூகை திரைப்பட இயக்கம்”, “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “நீலம் மாத இதழ்”, “நீலம் பதிப்பகம்”, “நீலம் யூ டியூப்”, ‘நீலம் புக்ஸ்’, நீலம் புரொடக்‌ஷன்ஸ் என மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் தனது செயல்பாடுகளை முன்னகர்த்தி வருகிறார்.
அந்த வகையில் ‘Casteless Collective’ இசைக்குழு இதுவரை இசையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும், உள்நாட்டு அரசியல் பற்றிய பாடல்கள், சமூகப்பிரச்சனை பற்றிய பாடல்களை அரங்கேற்றியுள்ளது.
அதற்கான அங்கீகாரமாக, பொதுமக்களின் பாராட்டுக்களையும் மற்றும் பல்வேறு விருதுகளையும் ‘Casteless Collective’ குவித்து வந்ததுத. அதன் தொடர்ச்சியாக கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாடும் விதமாக மறுக்கப்பட்ட கலைகளை, மேடை ஏற்றி கெளரவிக்கும் நிகழ்ச்சியாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் முதல் முறையாக நடைபெற்றது.
அதன் நீட்சியாக தற்போது 2023-ஆம் ஆண்டு 4ஆவது முறையாக “மார்கழியில் மக்களிசை 2023” நிகழ்ச்சி கேஜிஎப். ஓசூர், சென்னை என்று மூன்று இடங்களில் நடைபெற்றது.

அதில் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் சென்னை, மைலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் கடந்த 28-ஆம் தேதி நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி அன்று நடக்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்து.

அதனைத் தொடர்ந்து கடந்த 29-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி தொடங்கப்பட்து. இந்த நிகழ்வில் அவரை நினைவு கூறும் வகையில், அவர் நடித்த படத்திலிருந்த பல பாடல்கள் பாடப்பட்டன.

இரண்டாம் நாள் நிகழ்வாக நேற்று (30-ஆம் தேதி) விழுப்புரம் பேண்ட் செட்டின் அரங்கம் அதிரும் இசையோடு ஆரம்பித்த மக்கள் இசை கானா, தம்மா தி பேண்ட், கரிந்தலக்கூட்டம், அறிவு அண்ட் தி அம்பசா குழு கலைஞர்களோடு கோலாகலமாக நடந்தது இதற்கிடையில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த கலைஞர்களான சிந்தை ரேவ் ரவி, சிந்தை ரேவ் ரவி, காரியப்பட்டி ராஜசேகர், ஆசானூர் சவரிமுத்து, ராஜபார்ட் மேக்கியார்பட்டி மகாராஜா ஆகியோருக்கு “மக்களிசை மாமணி 2023” விருதும் 50 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை எழுத்தாளர் தமிழ்பிரபா தொகுத்து வழங்கினார்.

இயக்குனர் பார்த்திபன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகர்கள் குரு சோமசுந்தரம், தினேஷ், மைம்கோபி, ஜான்விஜய், அசோக் செல்வன் , சாந்தனு, பிரித்விபாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன்,
சஞ்சனா மற்றும் தோழர் செல்வா, கிரேஸ்பானு,
ஜெயராணி, TKS இளங்கோவன், மல்லைசத்யா, இயக்குனர்கள் ஜெய், தினகரன், ஷான், மனோஜ், மற்றும் அரசியல்பிரமுகர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்

நிகழ்வின் இறுதியில் சிந்தை ரேவ் ரவி, காரியப்பட்டி ராஜசேகர், ஆசானூர் சவரிமுத்து, ராஜபார்ட் மேக்கியார்பட்டி மகாராஜா ஆகிய இசைக் கலைஞர்களுக்கு
விருதுகள் வழங்கியப்பின்

இயக்குனர், நடிகர் பார்த்திபன் பேசியதாவது,

“இந்த மேடையை நான், மக்களிசை மேடையாக பார்க்கவில்லை, ஒரு அரசியல் மேடையாக தான் பார்க்கிறேன். இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அனைவரையும் பா. இரஞ்சித் ஒரு காட்டுத் தீயாக உருவாக்கியுள்ளார். இங்கு வந்திருக்கும் இந்த மக்களுக்கும் நன்றிகள். இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களை இந்த மக்களுக்கான தலைவனாக பார்க்கிறேன் . மார்கழியில் மங்கள இசை கேட்டுத்தான் பழக்கம், இப்போதுதான் மக்களிசையை கேட்கிறேன். இந்த நாடே மக்களுக்கானது. இந்த இசையும் மக்களுக்கானது இந்த மாதிரி மேடைகளும் மக்களுக்கானது. எங்கோ ஒர் குக்கிராமத்தில் , மலைகிராமத்தில் உலகம் அறியாத கலைஞர்களை கண்டுபிடித்து அவர்களுக்கான மேடை அமைத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதெல்லாம் பாராட்டுக்குறியது. பா.இரஞ்சித்தோடு நாம் எல்லோரும் இணைந்து இதுபோன்ற முன்னெடுப்புகளை செயல்படுத்தவேண்டும்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் பேசுகையில், “இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நான் ஒரு ஸ்டேட்மெண்ட்டாக பார்க்கிறேன். சென்ற வருடம் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன். இந்த வருடமும் வந்துள்ளேன். தொடர்ந்து பா.இரஞ்சித் அவர்களின் முன்னெடுப்புகளில் பங்கெடுப்பேன். கலை மக்களுக்கானது” என்று பேசினார்.

நிறைவாக பேசிய இயக்குனர் பா.இரஞ்சித் ” “மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி ஒரு பண்பாட்டு மீட்சி, நான்கு ஆண்டுகளாக நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. இது போன்ற நிகழ்ச்சிகள் வெற்றிபெறுவதற்கும், தொடர்ந்து இயங்குவதற்கும் நீங்கள் திரளாக வந்து கலந்துகொள்வதும், தொடர்ந்து ஆதரவளிப்பதும் பெருமகிழ்ச்சியளிக்கிறது. மனிதமாண்பை மீட்டெடுக்கும் பண்பாட்டு புரட்சிதான் இது. தொடர்ந்து புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பாதையில் பயணிப்போம்” என்று பேசினார்.
இறுதியாக அறிவு மற்றும் அம்பாசாவின் அதிர வைக்கும் இசையால் அரங்கமே ஆடியது. பெருவெள்ளமாக மக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகழித்து கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here