இன்று (25/03/2024) தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள திருச்செந்தூர் தேரடித்திடல் பிரச்சாரம் செய்தார்.

தொடர்ந்து, தெற்கு ரதவீதி, தோப்பூர், வீரபாண்டியன்பட்டினம், அம்பேத்கர் சிலை-பிரசாத் நகர், சண்முகபுரம், இராணிமகராஜபுரம்-ஆறுமுகநேரி பேரூராட்சி, அடைக்கலப்புரம், காமராஜபுரம், ஆறுமுகநேரி பஜார், செல்வராஜபுரம், திசைக்காவல் தெரு, மடத்துவிளை, கந்தன் குடியிருப்பு, அம்மன்புரம், சோனகன்விளை ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேசியது: உங்களுடைய அன்பான வரவேற்புக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது தெருமுனை பிரச்சாரமா அல்லது ஒரு பொதுக்கூட்டமா என்று கேட்கத் தோன்றக் கூடிய அளவிலே இவ்வளவு பெரிய வரவேற்பைத் தந்து இருக்கக்கூடிய உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் மீண்டும் தூத்துக்குடி வேட்பாளராக நிற்க கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கிறார்கள். சென்ற முறை நான் தேர்தலில் நின்ற போது பல பேர் ஏன் மீது வைத்த விமர்சனம், அவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். நிச்சியமாக தேர்தல் முடிந்து வெற்றி வாய்ப்பு கிடைத்தால் தூத்துக்குடிக்கு திரும்பி வரவே மாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் தூத்துக்குடி என்பது என்னுடைய இரண்டாவது தாய்வீடு என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் என் மீது அன்பைப் பொழிந்து இருக்கிறீர்கள். அதே போல நானும் உங்களோடு நின்று பணியாற்றி இருக்கிறேன் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அந்த உரிமையோடு நான் உங்களிடம் கேட்கிறேன், உங்களுடைய பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தை அளித்து மீண்டும் உங்களோடு பணியாற்றக் கூடிய வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் என்பது நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது வெறும் அரசியல் வெற்றிக்கான தேர்தல் இல்லை. நம்முடைய தேர்தல் என்பது இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். நம்முடைய முதலமைச்சர் சொல்வது போல், இது 2வது சுதந்திரப் போராட்டம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். நம்முடைய அடையாளங்களை, நம்முடைய மொழியை, தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.

ஒன்றிய பாஜக அரசு இந்த நாட்டில் இருக்கக்கூடிய எல்லா மாநில உரிமைகளைப் பறிக்கிறது. அப்படி உரிமைகளைப் பறிப்பதற்காக தமிழ்நாட்டு மக்களுடைய வரிப் பணத்தை அரசாங்கத்திடமிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், நம்மிடம் 1 ரூபாய் வாங்கி 26 பைசா தான் திருப்பி கொடுக்கிறார்கள். வெள்ள நிவாரணத்துக்கு இன்று வரை ஒரு ரூபாய் கூட கொடுக்க வில்லை. ஆனால், அவர்கள் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம் 1 ரூபாய் வரி கொடுத்தால் 2 ரூபாய் 2 பைசா திரும்பிக் கொடுக்கிறார்கள். இது ஓரவஞ்சனை, நியாயம் இல்லாமல் ஒரு அரசாங்கம் நடந்து கொள்ளலாமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து பெரும்பான்மை மக்கள் இந்து மதத்தை இவர்கள் காப்பாற்றுவதற்காகவே பிறந்தவர்கள் போல் பேசுகிறார்கள். நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், பாஜகவிடம் இருந்து இந்து மதத்தையும், மக்களையும் காப்பாற்றுவது நமது கடமை. ஏனென்றால் மதத்தைப் பயன்படுத்தி அரசியலுக்கு வந்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, எந்த மக்களால் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்களோ அவர்களை எதிர்த்து வேலை செய்து கொண்டியிருப்பதுதான் பாஜக, மோடி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடித்தட்டில் இருக்கக் கூடிய மக்கள், உழைக்கக் கூடிய மக்கள், வியாபாரிகள் யாராவது பாஜக வாழவைத்து இருக்கிறதா? என்றால் இல்லை. விவசாயிகளுக்கு எதிராகச் சட்டம், தொழிலாளர்களுக்கு எதிராகச் சட்டம், அது போல் ஜிஎஸ்டி கொண்டுவந்த இங்கே இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து, வியாபாரம் செய்ய முடியாத அளவுக்குச் சித்திரவதை செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள் தான் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய முதலமைச்சர், எல்லோருக்குமான முதலமைச்சர், இன்னும் சொல்லப் போனால் எனக்கு ஓட்டுப் போட்டவர்கள், ஓட்டுப் போடாதவர்களுக்கு சேர்த்து நான் முதலமைச்சர். எனக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை என நினைக்க கூடிய அளவிற்கான பணியாற்ற வேண்டும் என்று சொன்ன முதலமைச்சர். அவருடைய ஆட்சியில் இன்றைக்கு எத்தனையோ புதிய திட்டங்கள் தமிழ்நாட்டுக்காக கொண்டுவரப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரப்படுகிறது, பெண்கள் இங்கு இருக்கக்கூடிய சகோதரிகளுக்குப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயணம், விடியல் பயணம்.

அதேபோல் நம்ம வீட்டுப் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகள் ஆக இருக்கட்டும் கல்லூரியில் படிக்கும்போது மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படும், ஏன் என்றால் நம்ம பசங்க படிக்கவேண்டும். படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் நோக்கக் கூடிய விரும்பக்கூடிய ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

வேலை இல்லையே அப்படி என்று அமித்ஷா அவர்களைக் கேட்டால், போய் பக்கோடா போடு, அதுவும் வேலைதான் என்று சொல்லக்கூடிய மனது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, முதலமைச்சருக்கும் கிடையாது. எனது பிள்ளைகள் படிக்கவேண்டும், தலைநிமிர்ந்து வாழவேண்டும், தொழிற்சாலைகளைக் கொண்டு வருவேன் அவர்கள் படித்துவிட்டு அங்கே வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் தான் நாங்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, இந்த நாடு தலைநிமிர எல்லா மக்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் இங்கே மட்டுமில்லை, டெல்லியிலும் ஆட்சி மாற்றம் வரவேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாடு நமது ஆகவேண்டும் நாற்பதும் நமது ஆக வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட நாள் இந்த பகுதியில் கோரிக்கை என்பது பொன்னங்குறிச்சியில் இருந்து புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நீங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விரைவிலேயே அந்த திட்டம் தொடங்கப்படும் என்ற உறுதியை உங்களுக்கு நான் இந்த கூட்டத்தில் வழங்கிக் கொள்கிறேன் என்று பேசினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளரும் ,திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கரும்பர், சமத்துவ மக்கள் கழகத்தில் தலைவர் எர்ணாவூர் நாராயணன், சமத்துவ மக்கள் கழக அற்புதராஜ், மக்கள் நீதி மையம் கட்சியை சார்ந்த அலெஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here