தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (03/04/2024) தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வைப்பார் பகுதியில் உள்ள வீரபாண்டியன் கட்டபொம்மன் நினைவு ஆலய அருகே தனக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கனிமொழி கருணாநிதி அங்கு இருந்த வீரபாண்டியன் கட்டபொம்மன் நினைவு ஆலயத்திற்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டியன் கட்டபொம்மனுக்குக் கோட்டை எழுப்பியவர் கலைஞர் அவர்கள். மோடி பிரதமராகப் பதவியேற்ற பொழுது இருந்த சமையல் எரிவாயு விலை 410 ரூபாயாக இருந்தது ஆனால் இப்பொழுது ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உள்ளது, சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்குவதாகக் கூறினார், இதுவரை யாருக்காவது மானியம் வழங்கினாரா என்றால் இல்லை.

நம் தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது போலச் சமையல் எரிவாயுவின் விலை ₹500 ஆக குறைக்கப்படும், அதேபோல் பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும்.

இந்த பகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண, 363 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் சென்ற ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கிட்டத்தட்ட நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. தற்பொழுது வரை குடிநீர் தேவைக்குத் தற்காலிகமாக லாரியில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிரந்தரமாக உங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.

சென்ற முறை தொகுதியில் நான் போட்டியிட்ட பொழுது எதிர்க்கட்சியினர் நான் சென்னை சேர்ந்தவர் அதனால் வெற்றிக்குப் பின்பு இங்கு வரவே மாட்டேன் என்று பரப்புரை செய்தனர். அவர்கள் கூறியதற்கு மாறாக மக்களோடு மக்களாகத் தூத்துக்குடியில் இருந்து மக்கள் பணி செய்தேன். என்னுடைய இரண்டாவது தாய் வீடான தூத்துக்குடியில் மீண்டும் மக்கள் பணி செய்வதற்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here