தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இன்று (08/04/2024) தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மசூதி காலனியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ், சைதாப்பேட்டை பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கனிமொழி கருணாநிதி பேசியது: இந்த தேர்தல் என்பது, நாம் அரசியல் அமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கக் கூடிய தேர்தல், நம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தலாகும், இந்நாட்டின் அடித்தட்டு மக்கள், சாமானிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய தேர்தல், பாஜக கையிலிருந்து நாம் நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தேர்தல் ஆகும்.
இந்த தேர்தல் என்பது நாம் நாட்டின் 2வது சுதந்திரப் போராட்டமாகும். ஏனென்றால் இந்நாட்டில் ஜனநாயகம் பாதுக்கப்பட்டுள்ளதா, ஏழை எளிய சாமானிய மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்ற பதில் மட்டுமே உள்ளது.
நாடாளுமன்றத்தில் மிக முக்கியமாக இருப்பது விவாதம், பேச்சுவார்த்தை, ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு விவாதமும் இல்லை பேச்சுவார்த்தையும் இல்லை. மக்கள் பிரச்சினை குறித்துப் பேசினால் பதிலே அளிப்பதில்லை, பொதுவாகவே பாஜகவிற்கு மற்றவர்கள் பேசுவது காதுகளில் விழாது.
விவசாய சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்த்துப் போராடினோம், வெளிநடப்பு செய்த ஐந்து நிமிடத்தில் திரும்ப அவைக்கு வந்து விட்டோம், அந்த ஐந்து நிமிடத்தில் தொழிலாளருக்கு எதிரான தொழிலாளர் திருத்தச் சட்டத்தை பாஜக கொண்டு வந்தது.
இந்தியா வரலாற்றில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டது இந்த பாஜக ஆட்சியில் தான். பாஜகவிற்கு எதிராக ஏனென்று கேள்வி கேட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நம் நாட்டை சுற்றியுள்ள எந்த நாட்டிடனும் நட்புறவுடனும் பாஜக இருந்ததில்லை, பல காலமாக நம்முடன் நட்புடன் இருந்த நாடுகள் தற்போது நட்பை முறித்துக் கொண்டனர். மாலத்தீவில் இராணுவ தளவாளங்களை எடுக்கக் கூறிவிட்டனர் இந்த பாஜகவால்.
சீனா நமது நாட்டு எல்லைகளை ஆக்கிரமித்து விட்டது, இதைக் கேள்வி கேட்க நம் நாட்டின் விஸ்வகுரு இரும்பு மனிதர் எனக் கூறும் மோடியால் முடியவில்லை நாம் கேட்டாலும் பதில் அளிக்க இயலவில்லை எனத் தெரிவித்தார்.