தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (10/04/2024) கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு திட்டங்குளம் ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த மக்களவைத் தேர்தல் யார் பிரதமராக வேண்டும் என்பதைத் தாண்டி, இந்த நாட்டை பாஜகவின் கைகளில் இருந்து விடுதலை பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு விடுதலை போராட்டத்தைப் போன்ற தேர்தல் தான் இது. பாஜக ஆட்சியில் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அதே போல் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது. எதிர்கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களையும் மிரட்டி சிறைக்கு அனுப்புகின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.

பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வழக்குப்பதிவு செய்தவர்கள், பாஜகவில் இணைந்துவிட்டால் வழக்குகள் காணாமல் போய்விடும். அவர்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தளவுக்கு மோசமான பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது.

இங்கு 100 நாள் வேலை இருக்கு, ஆனால் இல்லை. இந்த திட்டம் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. பாஜக ஆட்சியில் இதற்கான நிதியைக் குறைத்துவிட்டனர். யாருக்கு முறையாக வேலை கிடைப்பதில்லை. வேலை செய்த நாட்களுக்கும் சம்பளம் கொடுக்க மாட்டார்கள். மோடி ஆட்சியில் ரூ.15 லட்சம் கோடி அதானி, அம்பானி போன்றவர்களின் வங்கிக் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லையென ரூ.21 ஆயிரம் கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளுக்குக் கடன் ரத்து இல்லை. கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை.

இந்தியாவில் உள்ள கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யாத ஒரு ஆட்சி பாஜக ஆட்சி. தமிழகத்தில் இருந்து நமது நிதியை ஜிஎஸ்டி என கூறி எடுத்துச் சென்று விடுகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவு நிதி கொடுக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டுக்கு முறையாக நிதி திருப்பி கொடுப்பதில்லை. மழை வெள்ளம் என பாதிப்பு வந்தபோது பார்க்க வராத மோடி, தற்போது தேர்தல் வந்ததால் தமிழகத்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வழக்கம் போல் பாஜக நோட்டாவுக்கு கீழே தான்.

இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் என வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதே போல் 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். சம்பளம் ரூ.400 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். விவசாயக் கடன், கல்விக் கடன் ரத்து செய்யப்படும். எனவே, எனக்கு உங்களுடன் மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here