தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், கமர்ஷியல் வெற்றிகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நல்ல தரமான படைப்புகள் மக்களை சென்றடைய வேண்டும், நல்ல படைப்பாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்கிற நோக்கில் படங்களை வெளியிட்டுவருகிறது.
ஜோக்கர், அருவி, பர்ஹானா, கடந்த வருடம் வெளியான இறுகப்பற்று என தொடர்ந்து வித்தியாசமான, அதேசமயம் சமூக விழிப்புணர்வுக்கான படங்களை கொடுத்து வருகிறது.
அந்தவரிசையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் நாளை (ஜூன்-7) வெளியாக உள்ள படம் ‘அஞ்சாமை’. திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ளார். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் நீட் தேர்வை மையப்படுத்தி, அதேசமயம் உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று (ஜூன்-5) மாலை திரையிடப்பட்டது. படம் பார்த்த பத்திரிகையாளர்கள் பலரும், வளர்ந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோராக நடித்துள்ள விதார்த், வாணி போஜன் இருவரின் நடிப்பையும் அவர்கள் இந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட துணிச்சலையும் வெகுவாக பாராட்டினர். வணிக ரீதியிலான படங்களை நோக்கி செல்லாமல், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விதார்த்துக்கு இந்தப்படம் அவரது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என்றும் கூறினர்.
நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துவரும் நடிகை வாணி போஜன் இந்தப்படத்திற்கு பிறகு இன்னும் உயரம் செல்வார் என்றும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறுவார் என்றும் பாராட்டினர்.
தனது முதல் படத்திலேயே, நீட் போன்ற சமூகத்தில் பரபரப்பாக பேசப்படுகின்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதேசமயம் எந்த சார்பும் இல்லாமல் கத்திமேல் நடப்பது போன்ற திரைக்கதையுடன் அழகாக படமாக்கியுள்ள அறிமுக இயக்குநர் சுப்புராமன் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குநராக வெளிச்சம் பெறுவார் என்றும் அவர்கள் பாராட்டினர்.