கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும் சென்னை சிஐடி நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று (22.06.2024 – சனிக்கிழமை) நடைபெற்றது.

விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, மிஷ்கின் , பிருந்தா சாரதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கவிஞர்கள் ஜெய பாஸ்கரன், மு. முருகேஷ், பதிப்பாளர் மு. வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் பரிசாக ரூபாய் 25000, இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000, மூன்றாவது பரிசாக ரூபாய் பத்தாயிரம், பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் 50 கவிதைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் என ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் 53 கவிதைகளையும் தொகுத்து நூலாகவும் வெளியிடப்பட்டது. நூலை இயக்குனர் மிஷ்கின் வெளியிட பேராசிரியை பர்வீன் சுல்தானா பெற்றுக்கொண்டார்.

முதல் பரிசு கவிதையாக அம்சப்ரியா எழுதிய

தன் நிழலை
காடென நினைத்து
மெல்ல அசையும் கோவில் யானை

என்ற கவிதையும்,

இரண்டாவது பரிசுக்குரியதாக ஸ்ரீதர் பாரதி எழுதிய
பார்வையற்றவனின்
புல்லாங்குழலில்
ஒன்பது கண்கள்
கவிதையும்

மூன்றாவது பரிசுக்குரியதாக
காஞ்சி பாக்கியா எழுதிய

நீந்தியபடியே கீழிறங்குகிறது
பனிக்கட்டியின் மேல் விழுந்த
ஒற்றை எறும்பு

என்ற கவிதையும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் இருந்து ஹைக்கூ கவிஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here