சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்ட்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையை படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது. அவர்களிடம் இருந்து நண்பனின் தங்கையை காப்பாற்றும் வேங்கை, அவர்களது போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடிவு செய்கிறார். வேங்கை உயிருடன் இருந்தால் தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கலாகிவிடும் என்பதால், அவரது நண்பன் மூலமாகவே அவரை கஞ்சா கூட்டம் கொலை செய்துவிடுகிறது.

அநியாயத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் வேங்கையின் மரணத்திற்கு பழி தீர்ப்பதோடு, கஞ்சா போதைப் பொருளால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கூட்டத்தை வேறோடு அழிக்க வேங்கையின் தாய் வெட்டுடையார் காளியும், அவரது தம்பி அப்புக்குட்டியும் களம் இறங்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை அதிரடியாகவும், சமூகத்திற்கு அவசியமானதாகவும் சொல்வதே ‘கலன்’ படத்தின் கதை.

வெட்டுடையார் காளி என்ற கதாபாத்திரத்தில் பாசமிகு தாயாக நடித்திருக்கும் தீபா, தனது மகனின் மரணத்திற்குப் பிறகு எடுக்கும் அவதாரத்தில் காளியாக மிரட்டியிருப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் கூட்டத்திற்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

உழைப்பாளியாக, பாசம் மிக்க தம்பியாக நடித்திருக்கும் அப்புக்குட்டி தனது எதார்த்தமான நடிப்பால் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் கொலை வெறியை தெறிக்க விட்டிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சம்பத் ராமின் காத்திருப்புக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பவர் தன் வில்லத்தனம் மூலம் ரசிகர்களின் கடும்கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

கஞ்சா வியாபாரியாக போதை மிதக்கும் கண்கள், கையில் சுருட்டு என்று மிரட்டலான கதாபாத்திரத்தில், திமிரான நடிப்பின் மூலம் நல்ல நடிகையாக நிமிர்ந்து நிற்கிறார் காயத்ரி. கிராமத்து அம்மா, நகரத்துப் பெண், மருத்துவர் என பல வேடங்களில் கச்சிதமாக பொருந்தும் காயத்ரி, வில்லியாகவும் தனது தனித்துவமான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்.

வேங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர், தென் மாவட்ட இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் நடிப்பில் கர்ஜித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சேரன் ராஜ், வேங்கையின் நண்பராக நடித்திருக்கும் நடிகர் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தென் மாவட்ட மக்களை பிரதிபலிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜெர்சன் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகங்கள். குறிப்பாக “வெட்டுடையார் காளி..” பாடலும், அதை படமாக்கிய விதமும் திரையரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும். குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் ஆகியோரது பாடல் வரிகள், கதாபாத்திரங்களின் உணர்வுகளை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் ஜெயக்குமார் மற்றும் ஜேகே தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை இயல்பாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருந்தாலும் அதை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்திய விதம், திருவிழா காட்சிகள் ஆகியவை படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் ஆகியோரது படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்வதோடு, இயக்குநர் சொல்ல முயற்சித்திருக்கும் கருத்துகளை சிதைக்காமல் பார்வையாளர்களிடம் கடத்தியிருகிறார்கள்.

கலை இயக்குநர் திலகராஜன் அம்பேத், நடன இயக்குநர் வெரைட்டி பாலா ஆகியோரது பணி கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் வீரமுருகன், தற்போது சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையை கருவாக கொண்டு மிகப்பெரிய விழுப்புணர்வு படத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக போதைப் பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து வரும் அவல நிலை மற்றும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் அலறல்களை அழுத்தமாக பதிவு செய்திருப்பவர், குற்றவாளிகளுக்கு எத்தகைய கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் அதிரடியாக பதிவு செய்திருக்கிறார்.

சில இடங்களில் சாதி ரீதியான குறியீடுகள் பல இருந்தாலும், அனைத்தையும் லாஜிக்கோடு திரைக்கதையில் பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் வீரமுருகன், ஆன்மீகம் மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை திரை மொழியில் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை களை எடுக்கும் காட்சிகள் அதிகம் இரத்தம் தெறிக்கும் வகையில் இருந்தாலும், பாதிக்கபப்ட்டவர்களின் இடத்தில் இருந்து பார்க்கும் போது அந்த காட்சிகள் சரியானதாகவே இருக்கிறது.

சமூகத்திற்கான ஒரு படமாக இருந்தாலும், அதை கமர்ஷியலாகவும் அதே சமயம் நாகரீகமான முறையில் இயக்கியிருக்கும் இயக்குநர் வீரமுருகன், வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி அனைவருக்குமான ஒரு பாடமாக கொடுத்திருக்கும் ‘கலன்’ மக்களை நல்வழியில் பயணிக்க வைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here