உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….

கதையாசிரியர் கௌசல்யா நவரத்தினம் பேசியதாவது…

இந்த தருணம் மிக மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை மாதிரி வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இத்தனை ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி. உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கதிரவென் ஆகியோருக்கு நன்றி. என்னை நம்பி நான் எழுதிய கதையை, இத்தனை பெரிய படைப்பாக, இங்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி. இந்தப்படம் வெற்றியடைய வேண்டுமெனக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…

கண்நீரா படக் குழுவிற்கு என் வாழ்த்துக்கள். கதாசிரியர் பேசும்போது, இயக்குநருக்குத் தனியாக நன்றி சொன்னார். இயக்குநர் அவருடைய கணவர் தான், ஆனால் யாரோ போல அவர் பேசி நன்றி சொன்னது ஆச்சரியம் தான். இருவரும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இடையில் குழந்தையையும் உருவாக்கி இருக்கிறார்கள், இந்த படத்தை முடித்துவிட்டு, அவர்கள் அடுத்த குழந்தைக்கான வேலையைப் பார்க்கட்டும். வாழ்த்துக்கள். முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழா நடத்தும்போது, இரண்டாவது பாகத்தையும் முடித்து, மிகத் தயாராக வைத்துள்ளார்கள். அவர்களின் வேகத்திற்கு மூன்றாம் பாகமே எடுக்கலாம். மலேசியாவில் படத்தை எடுத்து, தென்னிந்தியாவில் ரிலீஸ் செய்கிறார்கள் இங்குள்ள அனைத்து சங்கங்களும் உங்களை வரவேற்று ஆதரவு தருவார்கள், வாழ்த்துக்கள். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் ஹரி உத்ரா பேசியதாவது….

உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் செய்யும் மூன்றாவது படம் இது. இந்த வருடத்தில் முதல் படம். மலேசியாவில் எடுத்த படத்தை, இங்கு பெரிய அளவில் வெளியிடுகிறோம். More 4 Production மிகச்சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளனர். மலேசியாவில் எடுத்ததால், இங்குள்ள ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் பல விசயங்களை மாற்றியுள்ளோம். முக்கியமான இப்படத்தின் இசை, அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். இப்படம் மிகப் புதுமையாக இருக்க, இயக்குநர் கதிரவென் தான் காரணம். அவர் நாங்கள் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, முழு ஒத்துழைப்பு தந்தார். படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது, ஒவ்வொன்றாக வெளியாகும். இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் கதிரவென் பேசியதாவது….

எங்களுக்கு ஆதரவு தந்து, இங்கு இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரையுலக ஜாம்பவான்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இவர்களுடன் அமர்ந்திருப்பதே மிக மகிழ்ச்சியாக உள்ளது. மலேசியாவில் தான் முழுமையாக இப்படத்தை, கஷ்டப்பட்டு உருவாக்கி உள்ளோம். எங்களுக்கு முழு ஆதரவைத் தந்த உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் உத்ரா சாருக்கு என் நன்றிகள். என் மனைவிதான் இப்படத்திற்குக் கதை எழுதி உள்ளார். மலேசியாவிலிருந்தபோது, இந்த கதையை என்னிடம் சொன்னார் மிக அருமையாக இருந்தது. இந்தப் படத்தை உருவாக்கலாம் என்று ஆரம்பித்தபோது, என் மனைவி கர்ப்பமானார், ஆனால் அப்போது கூட கண்நீரா படம் தான், என் முதல் குழந்தை என்று சொன்னார். அப்போதே இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. என் மனைவி தான் இப்படத்தை இயக்கியிருக்க வேண்டும் ஆனால் சில காரணங்களால் அவர் என்னையே இயக்கச் சொன்னார். ஒரு மிகச்சிறப்பான படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் ரசிக்கும் வண்ணத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை என் மனைவி இயக்க வேண்டியது, அவரிடம் சொன்ன போது, இரண்டாம் பாகத்திற்குக் கதை இருப்பதாகச் சொன்னார், அந்தக்கதையும் மிக அருமையாக இருந்தது. அந்தப்படத்தை மனைவி தான் இயக்கியுள்ளார். அந்தப்படத்தையும் முடித்து விட்டோம். நீங்கள் தான் முழு ஆதரவைத் தர வேண்டும்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

கண்நீரா தலைப்பே மிக அருமையாக உள்ளது. படம் சிறப்பாக வந்திருக்கிறது இதில் சிறப்பு என்னவென்றால் மனைவி கதை எழுதியுள்ளார், கணவர் இயக்குநராகப் படம் எடுத்திருக்கிறார். சாதாரணமாக குடும்பங்களில் திரைப்படத்திற்கு எதிராகத் தான் பேசுவார்கள், ஆனால் இப்படத்தில் அவரது மனைவி அவருக்கு உறுதுணையாக நின்று, படத்தை உருவாக்கியுள்ளார். இருவருக்கும் என் மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரொமான்ஸ் படங்கள் வருவது இப்போது குறைந்து விட்டது. அந்த வகையில் இந்த திரைப்படத்தினை காதலை மையமாக வைத்து மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். நீண்ட நாள் கழித்து நல்ல காதல் படம் வருகிறது. மலேசியாவில் எடுத்து, இங்கு வெளியிடுகிறார்கள். அனைவரும் ஆதரவு தர வேண்டும். சின்ன படங்கள் ஓடவில்லை என சொல்கிறார்கள், சின்னப்படங்கள் பார்க்கத் திரையரங்கிற்குக் கூட்டமே வருவதில்லை என திரையரங்கில் சொல்கிறார்கள். இதைக் கண்டிப்பாகப் பேசித் தான் தீர்க்க வேண்டும். சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது. இன்று சின்னப்பட்டங்கள் பார்க்க ஆட்கள் இல்லை, தியேட்டரும் இல்லை, படம் நேரத்திற்கு ஒர்த்தாக இருந்தால் மட்டுமே மக்கள் வருகிறார்கள். பெரிய ஹீரோ படங்களுக்கு இந்த பிரச்சனையில்லை. சின்னப்படங்களுக்கு மக்களை வரவைக்க, என்ன செய்ய வேண்டும். இதை அனைவரும் அமர்ந்து பேச வேண்டும். திரையரங்கில் மக்கள் வாங்கும் பொருட்கள் கொள்ளை விலையில் இருக்கிறது. கார் பார்க்கிங்க் கொள்ளை இப்படி இருந்தால், மக்கள் எப்படி வருவார்கள். நம் மீது குறை வைத்துக்கொண்டு மக்களைக் குறை சொல்லக்கூடாது. இவர்கள் பல கஷ்டப்பட்டு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார்கள். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…..

கண்நீரா படக்குழு குடும்பமாக இப்படத்தை எடுத்துள்ளார்கள். கௌசல்யா நவரத்தினம் குழந்தையை மட்டுமல்ல, இந்தப்படத்தையும் கருவாகச் சுமந்துள்ளார். கணவனுக்கு உறுதுணையாக இருந்து படத்தை இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பெண்கள் அவ்வளவு சாதாரணமாக சினிமாவுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் கதிரவெனுக்கு பின்னால் தூணாக கௌசல்யா இருக்கிறார். அதனால் கண்டிப்பாக இப்படம் கதிரவென் ஜெயிப்பார். மலேசியாவில் இப்படத்தை எடுத்து தமிழ் நாட்டில் இப்படத்தை வெளியிடும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். கண்நீரா அருமையான காதல் கதையை சொல்கிறது. கண்நீரா பெண்களின் கண்ணீரை பேசுகிறதா சந்தோசத்தைப் பேசுகிறதா என படம் வந்தால் தெரியும். கடந்த 10, 15 ஆண்டுகளாகத் தமிழகத்தில், இந்தியா முழுக்க பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான், இப்போது கூட ஒரு கல்லூரியில் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலை மாற வேண்டும். அரசாங்கம் இது போன்ற விசயங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பைப் பற்றி அதன் அவசியம் பற்றி பேசியிருக்கும் இந்த கண்நீரா படம் பெரிய வெற்றி பெறட்டும். சினிமா சில நேரங்களில் நன்றாக இருக்கிறது பல நேரங்களில் நன்றாக இல்லை. கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி நட்டம். மக்கள் சின்னப்படங்களுக்கு செலவு செய்வதில்லை. படம் எடுக்க முடிகிறது ஆனால் வியாபாரம் இல்லை. க்யூபிற்கு, விளம்பரத்துக்குப் பணம் இல்லாமல் 200 படங்கள் நிற்கிறது. சின்னப்படங்களுக்கு திரையரங்குகளில் தனி விலை வையுங்கள். சின்னப்படங்களுக்கு 40, 50,70 என வையுங்கள். அப்போது மக்கள் வருவார்கள். சின்னப்படங்கள் நன்றாக இருந்தால் ஓடுகிறது. பெரிய படங்களை விட சின்னப்படங்கள் தான் அதிகம் ஜெயிக்கிறது. அதன் வெற்றிக்குக் காரணமாகப் பத்திரிக்கைகள் இருக்கிறது. சின்னப்படங்களுக்கு கொஞ்சம் நல்ல விமர்சனங்கள் தாருங்கள். மலேசியாவிலிருந்து நம்பி வந்துள்ள இந்த படக்குழு ஜெயிக்க வேண்டும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது….

என்னுடைய முதல் வாழ்த்து, இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் பாடல் மிக நன்றாக இருந்தது. இயக்குநருக்கு முதல் படம் போலவே இல்லை. முதல் படத்தில் பாடலெழுதிக் காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டார்கள் கதிரவென், கௌசல்யா தம்பதி. அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். என் மனைவி எழுதிய கதை தான் எஜமான். பொன்னுமனி அவர் எழுதிய கதை தான். அது போல் உங்கள் மனைவி எழுதிய கதையும் வெற்றி பெறும். டிரெய்லர் மிக அற்புதமாக இருக்கிறது. கண்ணெல்லாம் நீராக சுமந்து கொண்டு இருக்கிறது, விட்டுக்கொடுத்தலைப் பேசுகிறது இந்தப்படம். மலேசியா தமிழர்களுக்கு நாம் எப்போதும் அன்பும் ஆதரவும் காட்டியே வருகிறோம். மலேசியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது எனக்குத் தனி அன்பு உண்டு. அதே போல் மக்களும் உங்கள் படத்தை நேசிப்பார்கள். மலேசியாவில் இப்படத்தை ரசித்ததாகச் சொன்னீர்கள் அதே போல் கண்டிப்பாக மக்கள் இங்கும் ரசிப்பார்கள். நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சினிமா இப்போது நன்றாக இல்லை, அரசாங்கத்திடம் எப்போதும் முறையிட்டுக் கொண்டு தான் உள்ளோம் ஆனால் திரையரங்குகளில் நம்மை வைத்துச் செய்கிறார்கள். தலைவர் எம் ஜி ஆர் ஆட்சியில் சினிமாவில் பிரச்சனையே இருந்ததில்லை. சினிமாவும் அரசியலும் கலந்துதான் பிரச்சனை. சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது, இருந்தால் சினிமா உருப்படாது. அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள் நன்றி என்றார்.

இந்த படத்தை கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
நயாகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் NKR ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை எழுதி, இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கௌசல்யா நவரத்தினம்.

ஒளிப்பதிவு – ஏகணேஷ் நாயர்
இசை – ஹரிமாறன்
பாடல்கள் – கௌசல்யா.N
கலை – குதூஸ் சங்கிலிஷா
நடனம் – மாஸ்டர் சேவியர், மாஸ்டர் முகிலன்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – உத்ரா புரொடக்சன்ஸ் S.ஹரி உத்ரா – More 4 Production

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here