“குறிஞ்சி பூ பூப்பது போல மதகஜராஜா ரிலீஸ் அமைந்து விட்டது” ; விஷால் மகிழ்ச்சி

கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’.

ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதில் கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிவண்ணன் மற்றும் மனோபாலா போன்ற மறைந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் சுந்தர்சியுடன் அவருக்கு இது முதல் படம்.

பொங்கலுக்கு படம் வெளியாவதை தொடர்ந்து மதகஜராஜா படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த படம் வெளியாவது குறித்த மகிழ்ச்சியையும் இந்த படம் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது,

“மதகஜராஜா படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பேன் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஒரு இயக்குனராக அவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராமல் ஆரம்பித்த ஒரு சந்தோஷமான நிகழ்வு இது. சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு 12 மணி அளவில் திருப்பூர் சுப்பிரமணியம் எனக்கு போன் செய்தார். இந்நேரத்தில் அழைக்கிறாரே என நினைத்தால் மதகஜராஜா படத்தை பார்க்க தயாரிப்பாளர் அழைத்தார், பல வருடங்கள் ஆகிவிட்டதால் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்தபடி பார்க்க சென்றால் படம் சூப்பராக இருப்பதாகவும் கூறி படத்தைப் பற்றி அரை மணி நேரம் ரசித்து பேசினார். இந்த முப்பது வருடங்களில் என்னிடம் படங்களின் வசூல் நிலவரங்கள் பற்றி தான் பேசுவாரே தவிர படத்தின் விமர்சனம் பற்றி எதுவும் சொல்ல மாட்டார். அப்படிப்பட்டவர் இந்த படத்தை பற்றி பாராட்டி பேசினார் என்கிறபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அதோடு நிற்காமல் அந்த படம் சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் பேசி இதோ பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆகப் போகிறது. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த படம் துவங்கிய போது தான் எனக்கு என் குடும்பத்தில் ஒரு நபராக விஷால் கிடைத்தார். அப்போது ல்முரட்டுக்காளை, போக்கிரி ராஜா போன்ற ஒரு ஜனரஞ்சகமான, குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுக்கலாமே என்று ஆசைப்பட்டோம்.

இந்தப் படம் சில பிரச்சினைகளை தாண்டி இப்போது பொங்கல் ரிலீஸ் ஆக வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்ட போது சிறிய தயக்கம் இருந்தது. காரணம் பல வருடங்கள் கழித்து இந்த படம் வருகிறது. படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும் ? சிலபேர் இப்போது இந்த படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியது ரொம்ப அவசியமா என்று கிண்டல் செய்வார்களோ என்றெல்லாம் தோன்றியது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் போஸ்டர் வெளியானதுமே சோசியல் மீடியாவில் அவ்வளவு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்தது. இத்தனை வருடங்கள் தாமதம் ஆனாலும் இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்று நினைக்கும்போது படத்தின் இயக்குனராக எனக்கு சந்தோசம். முதலில், பொங்கல் ரிலீஸ் என்று தான் ஆரம்பித்தோம். அப்போது மிஸ் ஆனாலும் இதோ இந்த பொங்கலுக்கு ரிலீஸாகிறது. பொங்கலுக்கான ஒரு கொண்டாட்டமான படமாகத்தான் இது இருக்கும்.

மேலும் சென்டிமென்டாக என்னுடைய குருநாதர் மணிவண்ணன் கடைசியாக நடித்த படம் இது. அவர் நிச்சயமாக மேலிருந்து என்னை ஆசிர்வாதம் செய்வார் என நினைக்கிறேன். அதேபோல மறைந்த நடிகர் மனோபாலா இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், ரிலீஸானால் என்னுடைய ரேஞ்சே வேற என்று சொல்லிக் கொண்டிருப்பார். குறிப்பாக இந்த படத்தில் விஷால், சந்தானம், மனோபாலா மூவரும் இடம் பெறும் ஒரு 15 நிமிட காட்சி இருக்கிறது. என்னுடைய படங்களிலேயே என் ஃபேவரைட் காமெடி காட்சி என்றால் இதுதான் என்று சொல்வேன்.

இந்தப் படம் துவங்குவதற்கு முன்பு வரை மதகஜராஜா என்கிற டைட்டிலுக்கு நாங்கள் வைத்திருந்த கதை வேறு. ஆனால் அது கொஞ்சம் கடினமான ஸ்கிரிப்ட் என்பதால் படம் துவங்குவதற்கு கொஞ்சம் முன்பாக தான் இப்போது எடுக்கப்பட்டுள்ள கதையை முடிவு செய்தோம். அந்த சமயத்தில் கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் சந்தானம் என்னுடன் பணியாற்றி இருந்தார். அந்த படங்களில் எல்லாம் வெறும் ஐந்து, ஆறு நாட்கள் தான் அவர் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் படம் முழுவதும் வரும் விதமாக அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்த படத்தில் தான் மொட்ட ராஜேந்திரன் முதன்முதலாக காமெடி நடிகராக அறிமுகமானார். அதுமட்டுமல்ல நடிகர் ஆர்யாவும் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நானும் விஜய் ஆண்டனியும் முதன்முதலாக இணைந்தது இந்த படத்தில் தான். அவர் தோற்றத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. அவர் ஒரு குழந்தை போல. இது போன்ற படங்களுக்கு இசையமைக்கும் போது தான் அவரிடம் இருந்து இன்னும் துள்ளலான இசை எங்களுக்கு கிடைக்கும். ஒரு இசையமைப்பாளராக அவர் மீண்டும் இதுபோன்று துள்ளலான இசையுடன் திரும்பி வரவேண்டும்.

இந்த படத்தில் என்னை விட கஷ்டப்பட்ட ஆத்மா என்றால் அது விஷால் தான். கிளைமாக்ஸில் ‘எய்ட் பேக்ஸ்’ உடலமைப்புடன் வரவேண்டும் என தெரியாத்தனமாக சொல்லிவிட்டேன். அவரும் தயாராகி விட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அப்படிப்பட்ட ‘எய்ட் பேக்ஸ்’ உடலமைப்புடன் எடுக்க வேண்டிய காட்சிகள் தள்ளிப்போய் மீண்டும் அதை எடுக்க ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவரை அந்த கட்டமைப்பை பராமரிப்பது கடினம். ஆனாலும் விஷால் அதை கடைபிடித்தார். 99 சதவீதம் எந்த காட்சிகளிலும் அவர் டூப் போடவே இல்லை.

மொட்ட ராஜேந்திரன் உடன் மோதும் ஒரு காட்சியில் கொஞ்சம் டைமிங் மிஸ் ஆகி கிட்டத்தட்ட விஷால் கழுத்து முறிவு ஏற்படும் சூழல் உண்டானது. உடனடியாக அப்போது அருகில் இருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.. நல்லபடியாக அவர் உடம்பை ஃபிட்னஸ் ஆக வைத்திருந்ததால் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்று டாக்டர்கள் கூறியதும் தான் எங்களுக்கு உயிரே திரும்பி வந்தது. கிளைமாக்ஸில் சோனு சூட், விஷால் இருவரும் மோதிக் கொள்வது இரண்டு மலைகள் மோதிக் கொள்வது போல இருக்கும். இந்த சண்டைக் காட்சியை படமாக்கும்போது பெண்கள் கூட்டமே இவர்களை பார்ப்பதற்காக வந்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த காட்சியை படமாக்கி முடிந்ததும் விஷால் தன்னுடைய எய்ட் பேக்ஸை முடிவுக்கு கொண்டு வந்தார். அன்று மாலையே எங்கெங்கிருந்தோ கடைகளில் இருந்து பிரியாணி, நான் வெஜ் கொண்டு வரச்சொல்லி அனைவருக்கும் கொடுத்து தானும் தனது எய்ட் பேக்ஸ் விரதத்தை முடித்தார். இந்த மதகஜராஜா எப்படியாவது வெளிவர வேண்டும் என நான் விரும்பியதற்கு ஒரே ஒரு காரணம் விஷால் இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்களை மக்கள் பார்க்க வேண்டும். அது வெளியே தெரியாமலேயே போய் விடக்கூடாது என்பதுதான்.

ஆரம்பத்தில் எனக்கும் விஷாலுக்கும் அவ்வளவு பழக்கமில்லை. குஷ்புவுக்கு தான் அவர் நண்பராக இருந்தார். அந்த சமயத்தில் அவருக்காக வேறு ஒரு ஸ்கிரிப்ட்டுடன் அவரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தோம் எங்களை வரச் சொன்னவர் நாங்கள் சென்ற அதே நேரத்தில் வெளியே கிளம்பி போய்விட்டார். எனக்கு அப்போது அவர் மீது மிகப்பெரிய கோபம் வந்துவிட்டது. அவர் முகத்தில் இனி முழிக்கவே கூடாது என்று நினைத்தேன். இரண்டு மாதம் கழித்து ஒரு பொதுவான பங்ஷனில் கலந்து கொண்டபோது அவரும் வந்திருந்தார். அவரை பார்க்காதவாறு நான் ஒதுக்கி சென்றேன். ஆனால் விடாமல் என்னை தேடி வந்து அவராகவே பேசினார். அன்றைய தினம் ஒரு மருத்துவ வேலை காரணமாக அவசரமாக செல்ல வேண்டியதாகிவிட்டது,. உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, நீங்கள் எப்போது சொன்னாலும் நான் உங்களை தேடி வந்து கதை கேட்கிறேன் என்று கூறினார், அப்போது ஆரம்பித்த நட்பு இப்போது வரை தொடர்கிறது. பழகப்பழக தான் அவர் ஒரு நல்ல ஆத்மா என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. கார்த்திக் முத்துராமன் சாரை என் அண்ணன் என்று சொன்னால் எனது தம்பி விஷால் என்பேன்.

இந்த படத்தில் விஷாலை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறோம். அதற்காக அவர் ஜானகி அம்மாவை விட ராகத்தை இழுத்து ஒரு ஆலாபனை எல்லாம் செய்திருக்கிறார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பாடி முடித்ததும் விஷால் இப்போது வரை தன்னை ஒரு சீரியஸான பாடகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். சார் இந்த படம் வெளியானால் எனக்கு கட்டாயம் பாடகருக்கான விருது கிடைக்கும் பாருங்கள் என்று சொல்லி வருகிறார்.

இந்த படத்தை தயாரித்த ஜெமினி நிறுவனத்தில் அனைத்து இயக்குனர்களுமே படம் இயக்க வேண்டும் என்பதை கனவாக வைத்திருப்பார்கள். இந்த படத்திற்காக அவர்கள் எனக்கு கேட்டதை எல்லாம் கொடுத்தார்கள். சில காரணங்களால் பட ரிலீஸில் இப்படி ஒரு தடங்கல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த மதகஜராஜா படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு, வெற்றி மூலமாக மீண்டும் ஜெமினியின் கொடி பறக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசும்போது,

“இந்த படத்திற்கு எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்து, எந்த ஒரு அழுத்தமோ, நெருக்கடியோ கொடுக்காமல் ஒவ்வொரு பாடலையும் சுந்தர்.சி சார் கூட இருந்தே வாங்கிய விதம் அவ்வளவு அழகாக இருந்தது. இந்த படத்தில் பாடலை உருவாக்கும் போது சுந்தர் சி தான் பாடலின் முதல் வரிகளை எல்லாம் எடுத்துக் கொடுப்பார். அப்போது நானும் அவரும் இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான பாடலை உருவாக்க வேண்டும், ஏடாகூடமான வார்த்தைகளை எல்லாம் போட்டு ஜாலியாக இருக்க வேண்டும், மிகப்பெரிய இசை மேதைகள் எல்லாம் இந்த பாடலைப் பார்த்து டென்ஷன் ஆகி இது என்னடா இசைக்கு வந்த சோதனை என்கிற அளவுக்கு பேச வேண்டும் என ஒரு பாடலை உருவாக்க முடிவு செய்தோம்.

அதற்காக விஷாலை பாடவைப்பது என முடிவுசெய்தோம். சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பார்களே அதே மாதிரி விஷால் சிங்கிள் டேக் பாடகர். ஒரே டேக்கில் சரியாக பாடிவிட்டாரா என்று கேட்காதீர்கள். இந்த பாடலை சொதப்ப வேண்டும் என முடிவு செய்து தான் உருவாக்கினோம். அதனால் விஷால் முதல் டேக்கில் பாடுவதையே ஓகே என எடுத்துக்கொண்டோம். இரண்டாவது டேக்கில் ஒருவேளை நன்றாக பாடிவிட்டால் என்ன செய்வது ? அந்த பாடலை தான் விஷால் பாடியுள்ளார்.

இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தாலும் கூட, ஒரு பிரஷ்ஷான படத்திற்கான விஷுவல்ஸ் அனைத்தையும் சுந்தர்.சி அப்போதே பண்ணியிருக்கிறார். இத்தனை வருடங்கள் தாண்டி இவ்வளவு வெற்றி கொடுத்தும் நீங்கள் எவ்வளவு பணிவாக இருக்கிறீர்கள் என்பதை பார்த்து உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். உங்களை பார்க்கும்போது தான், சீரியஸான படங்களில் இருந்து கொஞ்சம் விலகி கலகலப்பான படங்களையும் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது. நிச்சயமாக முயற்சிப்பேன். அதேபோல என்னுடைய நண்பன் விஷாலுக்கு வெடி படத்தை தொடர்ந்து நான் இசையமைத்துள்ள இரண்டாவது படம் இது. வெடி படத்தை போல இந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆகும். இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்பமாக போய் ரசிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த மதகஜராஜா ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கும். விஷாலுக்கு நிச்சயமாக எதிர்காலத்தில் நான் படம் பண்ணுவேன்” என்று கூறினார்.

நடிகர் விஷால் பேசும்போது,

“இப்போது படைப்பாளிகளுக்கு சுதந்திரம் கொடுத்து படம் தயாரிக்கும் ஜெமினி போன்ற நிறுவனங்கள் இங்கே இல்லை. அதனால் ஜெமினி போன்ற நிறுவனங்கள் மீண்டும் பட தயாரிப்பில் முழுமூச்சுடன் இறங்க வேண்டும். இந்த வருடம் எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கிறதோ இல்லையோ சிறந்த பாடகர் விருது கிடைக்கும். அதற்கு விஜய் ஆண்டனிக்கு நன்றி. இந்த படத்தில் ஒரு பாடலைப் பாட விஜய் ஆண்டனியும் சுந்தர்சியும் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த பாடலை வழக்கமான ஒரு பாடகர் பாடக்கூடாது.. ஒரு புதியவர் பாட வேண்டும்.. ஆனால் இந்த பாடலை பாடிய பிறகு அவர் வாழ்க்கையில் பாடவே கூடாது என்று பேசிக் கொண்டிருந்தபோது சரியாக நான் உள்ளே நுழைந்தேன். உடனே இவர் தான் அந்த பாடகர் என என்னை முடிவு செய்து விட்டார்கள்.

இந்த படத்தில் நான், சந்தானம், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா பங்கு பெற்ற ஒரு 15 மணி காட்சி படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பார்க்கும் அனைவரும் 100% சிரித்துக்கொண்டு தான் வெளியே வருவார்கள். அதற்கு சுந்தர்.சி சாருக்கு நன்றி. குறிஞ்சி பூ 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் என்பார்கள். அதுபோல 12 வருடம் கழித்து இந்த மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது. பழைய படம் போலவே இருக்காது. அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்” என்றார்.

நடிகை குஷ்பு பேசும்போது,

“இந்த 30 வருட வாழ்க்கையில் என் கணவர் சுந்தர் சி தூக்கமில்லா இரவுகளை கழித்தது என்றால் இந்த மதகஜராஜா படத்திற்காக தான். இந்த படத்திற்காக அவ்வளவு கடின உழைப்பை எல்லோருமே கொடுத்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் நிச்சயமாக இருந்தது. சில நேரங்களில் இந்த படம் ரிலீசாக போகிறது என்று சொல்வார்கள். பின்னர் அது அப்படியே நின்றுவிடும். ஆனால் எது எப்போது நடக்க வேண்டுமோ, எல்லாம் நன்மைக்கே என்பது போல இந்த பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக மதகஜராஜா ரிலீஸ் ஆகிறது. இந்த இந்த படம் துவங்குவதற்கு முன்பு நானும் விஷாலும் தான் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆக இருந்தோம். ஆனால் இந்த படத்திற்குப் பிறகு ஆம்பள, ஆக்சன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்ற துவங்கியபோது என்னை கழட்டி விட்டு அவர்கள் இருவரும் காதலர்கள் போல மாறிவிட்டார்கள்” என்றார்.

விழாவில், இரண்டு பாடல்கள், டிரைலர் காட்டப் பட்டு கை தட்டல்கள் பெற்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here