இந்திய கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வழங்கும் ‘இடபத் தளியிலார் ‘ எனும் புதிய மார்க்கம் அரங்கேற்ற நிகழ்வு சென்னையில் நடைபெறுகிறது.
எதிர்வரும் ஜனவரி 22ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி- தேவரடியார் மரபின் கடைசி வாரிசாக இருக்கும் பத்ம ஸ்ரீ இரா. முத்து கண்ணம்மாள் அவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது. மேலும் இந்த கலாச்சார நிகழ்விற்கு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி ஏ. எஸ். குமரி விஜயகுமார் அவர்களும், ‘சொல்லின் செல்வர்’ முனைவர் ஐ. எஸ். பர்வீன் சுல்தானா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இடபத் தளியிலார் எனும் புதிய மார்க்கத்தை… தேவரடியார்களின் இறை தொண்டு குறித்து ஆய்வு செய்து வடிவமைத்த ஆசான். முனைவர் அ. கா. நர்த்தனா கார்த்திகேயன் மற்றும் அவருடைய மாணவிகள் அரங்கேற்றுகிறார்கள்.
இந்த கலாச்சார நிகழ்ச்சி குறித்து இதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான ஆசான் முனைவர் அ. நா. நர்த்தனா கார்த்திகேயன் பேசுகையில், ” தேவர்களுக்கு அடியார்களாக தங்களுடைய வாழ்நாள் முழுவதும் கலையை கருவியாக கொண்டு பரம்பொருளான சிவத்தை அடைந்தவர்களின் கலை சேவை எவ்வாறு இறை சேவையுடன் பிணைந்து ஒன்றிணைந்து இருந்தது என்பதை விவரிக்கும் ஒரு புதிய மார்க்கம் தான் இடபத் தளியிலார்.
இந்த மார்க்கத்தில் திருக்கோயில்களில் நடைபெறும் ஆறு கால பூஜைகளிலும் தேவரடியார்களின் பங்கு- பணி – சேவைகள் – எவ்வாறு கலைநயத்துடன் இருந்தது என்பதை விளக்கக் கூடியது தான் இந்த இடபத் தளியிலார்
இந்த நிகழ்வு தனிப்பட்ட கலைஞரின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இல்லாமல்.. இறைவனோடு இந்த கலை எவ்வாறு இணைந்திருந்தது என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாக இந்த மார்க்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது
மீண்டும் கலை இறைவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதே இந்த மார்க்கத்தின் முதன்மையான நோக்கம். இந்த நிகழ்வில் என்னுடைய மாணவிகள் பங்கேற்கிறார்கள். இதற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சி குறித்தும், புதிய மார்க்கம் குறித்தும் அவர் விளக்கமளிக்கையில், ” தேவர்களின் அடியார்களாகவும் , நேர்மையின் இருப்பிடமாகவும் , அன்பின் புனிதமாகவும், சேவையின் அடையாளமாகவும் திகழ்ந்தவர்கள் தேவரடியார்கள்.
இவர்கள் தமிழர்களின் மரபு தந்த மாணிக்கங்கள் – தமிழர் கலைகளை இந்த உலகிற்கு எடுத்துச் சென்றவர்கள்- செந்தமிழர்களின் சிந்தனையில் பைந்தமிழாய் வாழ்ந்தவர்கள் – இவர்கள்..
அகமும், புறமும் ஒரே சிந்தனையுடன் இறைவனை தன் கலைச் சேவையால் உளம் குளிர செய்த இவர்கள்.. தேவருக்கு அடியார்கள் என்ற பெயருடன் இயங்கியவர்கள் .
இவர்களுக்கு- இவர்களின் கலை சேவைக்கு – இந்த நிகழ்ச்சி சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
மேலும் திருக்கோயில்களில் ஆறு காலங்களாக நடைபெறும் திருப்பள்ளி எழுச்சி – காலை சந்தி பூசை- உச்சிக் கால பூசை – சாயரட்சை பூசை – இராக் கால பூசை – பள்ளியறை சேவை – ஆகிய பூசை நிகழும் தருணங்களில் தேவரடியார்களின் பணி குறித்தும், தேவரடியார்களின் பங்களிப்பு குறித்தும், அவர்களுடைய கலைத்திறன் குறித்தும் இந்நிகழ்ச்சி விவரிக்கிறது.
இந்திய கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி மையம் வழங்கும் இந்த இடபத் தளியிலார் எனும் கலாச்சார நிகழ்ச்சி- சிவபெருமானுக்கு மட்டுமே சேவை செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தேவரடியார்களின் கலை சேவை – முதன்முறையாக அரங்கேற்றம் செய்யப்படுகிறது. ” என குறிப்பிட்டார்.
ஆசான் – முனைவர் அ . கா. நர்த்தனா கார்த்திகேயன் பற்றிய குறிப்பு :
கல்வி உளவியலாளர்- ஆய்வாளர்- நடன அமைப்பாளர் – சமூக ஆர்வலர்- இவற்றுடன் பரதநாட்டிய கலையில் முதுநிலை பட்டம் பெற்றவர். தமிழிசை கல்லூரியில் இசை செல்வம் என்ற பட்டப் படிப்பினையும் , நட்டுவாங்க சிரோன்மணி என்ற பயிற்சியையும் நிறைவு செய்தவர். இந்திய கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநர் – ஷ்ரதா தனியார் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனர். சிறந்த நாட்டுப்புற கலை பயிற்சியாளர் என ஆசியா சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.
2024 ஆம் ஆண்டிற்கான சேவை செம்மல் விருதினையும், ஸ்ரீ மகாத்மா காந்தி ராஷ்டிரிய அபிமன் புரஸ்கார் விருதை 2023 ஆம் ஆண்டிலும் பெற்றவர். இதே ஆண்டில் தேசிய அசோகா சமான் விருதினையும் வென்றிருக்கிறார்.
இந்த விருதுகளுடன் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் எழுவார் குழலி திருக்கோயில் சார்பில் 2013 ஆம் ஆண்டில் சிவனருட் செல்வி என்ற விருதினையும், அன்னை தெரசா விருது- சாதனை பெண்மணி விருது- மகாத்மா காந்தி விருது – சிறந்த நடன கலைஞர் விருது – என பல்வேறு விருதுகளை குவித்து சாதனை பெண்மணியாக வலம் வருபவர்.
தேவரடியார்களின் இறைத் தொண்டு குறித்து ஆய்வு செய்து ‘இடபத் தளியிலார் ‘ எனும் புதிய மார்க்கத்தை வடிவமைத்து தனது கலை சேவையினை தொடர்பவர்.
சிவனடியார்கள்- சிவபெருமானின் பக்தர்கள் – சைவ நெறியை பின்பற்றுபவர்கள் – கலை ஆர்வலர்கள்- தேவரடியார்கள் பற்றிய அறிந்து கொள்ளும் ஆர்வமுடைய பற்றாளர்கள்- பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த புதிய மார்க்க நிகழ்ச்சியை காண வருமாறு மனமுவந்து இரு கரம் கூப்பி வருக! வருக! என வரவேற்கிறோம்.