தமிழ் திரைப்படத் துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை தொழிலாளர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில், தமிழ் திரைப்பட துறையில் இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அனைத்து சங்கங்களின் உறுப்பினர்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொள்ள கடந்த 2010ம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களால், செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதற்கு அவரே திரைப்பட நகரம் என்று பெயரும் சூட்டினார். ஆனால், சில காரணங்களால் அந்த இடத்தின் அரசாணை புதுபிக்கபடாமல் இருந்தது. அதனை புதுப்பித்து தர வேண்டி மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி கடந்த 2010 ம் ஆண்டு மேற்கண்ட இடத்திற்கு என்ன அரசாணை வழங்கப்பட்டதோ அதே போல இந்த முறையும் புதுப்பித்து வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்து, அரசாணையை வெளியிட்டு, ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் வாழ்வாதாரம் செழிக்க, தயாரிப்பாளர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ள மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு.வருவாய்த்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும், மாண்புமிகு. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. மு. பெ.சாமிநாதன் அவர்களுக்கும், மற்றும் அரசாணை புதுப்பிக்க உறுதுணையாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும், ஒட்டுமொத்த தமிழ் திரையுலக சார்பாகவும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களின் தொலை நோக்கு பார்வையில் உள்ள திட்டங்களால் தமிழ்நாடு மக்கள் அனைவரும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அதே போல் தமிழ் திரைப்பட துறைக்கு செய்துள்ள இந்த விஷயம், தமிழ் திரையுலகம் இருக்கும் வரை மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களின் கிரீடத்தில் வைரக்கல்லாய் திகழும் என்பதில் ஐயமில்லை. தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி அனைத்து திரைத்துறையினர் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மீண்டும் ஒரு முறை இரு கரம் குவித்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.