மார்ச் 25, 2025
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், நம் இயக்குநர் இமயத்தின் வீட்டில் நிகழ்ந்த பெரும் சோக நிகழ்வு எங்களின் துயரமான நாளாக இன்றை மாற்றிவிட்டது.
இயக்குநர் இமயம் செய்த சாதனைகள் எண்ணற்றவை. தன்னகத்தே பெருந்திறன் படைத்த தென்னகத்தான். நம் அகத்தான்.
அப்பெருமான் பெற்ற பெருமகனார், திரு.மனோஜ் பாரதியை, கால தேவன் கைக்கொண்டு போவான் என நாங்கள் கனவிலும் எண்ணவில்லை.
வெற்றியின் மகனாக மாறக் காத்திருந்த அந்த இளவலை இழந்து வலித்துக் கிடக்கிறோம். கண்களில் வழியும் ஒவ்வொரு துளியும் எம் வீட்டுப் பிள்ளையை இழந்துவிட்டோம் என தகிக்கிறது.
தன் மகனை இழந்த எங்கள் தலைவருக்கு எப்படி ஆறுதல் சொல்ல? வார்த்தைகளற்ற ஆணியடிக்கப்பட்ட சுவரோவியமாய் மரத்துப் போய் நிற்கிறோம்.
இயக்குநர் இமயத்திற்கு இந்நேரத்தில் தோள் நிற்பதைத் தவிர செய்வதொன்றும் அறியோம். இத் திடீர் இழப்பிலிருந்து அவரும், அவர் குடும்பத்தினரும், திரு.மனோஜ் பாரதியின் குடும்பமும் மீள இறைவன் பலம் தரட்டும்.
தந்த இறைவன் எடுத்துக்கொண்டான் என்று ஏற்றுக் கொள்வதா? இல்லை இப் பெருந்துயரோடும், வலியோடும் நாட்களை நகர்த்துவதா? என்ற நிலையை இயக்குநர் இமயம் கடந்து வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.
சடுதியில் மறைந்து போன, மின்னலாய் ஆன, எங்கள் மனோஜூம் வானில் ஒரு ஒளி நட்சத்திரமாய் மின்னிக் கொண்டே இருப்பார்.
அவரின் ஆன்மா தூயதாய் இறைவன் மடியில், ஆழ் துயில் கொள்ளட்டும். “எங்களால் நிச்சயம் மறக்க முடியாதது மனோஜின் அந்த வெள்ளைச் சிரிப்பு”.
துயரின் மிகுதியில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.
T.G. தியாகராஜன்
செயல் தலைவர்.