போதைக்கு அடிமையாகும் இளைஞர்களால் அந்த நாடே அழிந்துவிடும் – ‘ஐ.ஏ.எஸ். கண்ணம்மா’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை கோமல் சர்மா பேச்சு

தாயப்பசுவாமி பிலிம்ஸ் சார்பில் தா.ராஜசோழன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’. இதில் கதையின் நாயகியாக பிரின்ஸி நடிக்க, முக்கியமான வேடத்தில் தா.ராஜசோழன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆட்டுக்குட்டி புரூஸ்லி, கோவை ஆறுமுகம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் பாபு இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கேசவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராம்நாத் படத்தொகுப்பு செய்ய, பழனிவேல் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். கபிலன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, நிரோஷான் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எஸ்.எம்.முருகேசன் மேலாளராக பணியாற்ற, காந்தி புகைப்படக் கலைஞராக பணியாற்றியுள்ளார். நா. விஜய் மக்கள் தொடர்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ திரைப்படத்தின் இசை மற்றும் முனோட்ட வெளியீட்டு விழா ஏப்ரல் 28 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் சங்க செயலாளர் பேரரசு, பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, செயலாளர் ஜான், நடிகை கோமல் சர்மா, ‘சாமானிய’ பட இயக்குநர் ராகேஷ், ரூபன் பட நாயகன் விஜய் பிரசாத், இயக்குநர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தா.ராஜசோழன் பேசுகையில், “நான் ஒரு எழுத்தாளன், கவிஞன். சினிமாவுக்காக நான் கொஞ்சம் நஞ்சம் கட்டப்படவில்லை. சினிமாவில் அனைவரும் கஷ்ட்டப்படுவார்கள். ஆனால், நான் சினிமாவில் நுழைவதற்கே ரொம்ப கஷ்ட்டப்பட்டு விட்டேன். பேரரசு சாரிடம் உதவி இயக்குநராக சேர முயற்சித்தேன், ஆனால் அது முடியாமல் போய்விட்டது. சினிமா என்ற கோவிலின் மதில் சுவர் பக்கம் கூட என்னை அனுமதிக்கவில்லை. தருமபுரியில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தேன், அங்கே பணி முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடுவேன், பிறகு மீண்டும் தருமபுரி சென்று பணியாற்றுவேன். குடும்பத்தையும் பார்க்க வேண்டும், இப்படி பல வேலைகள் இருந்தும், சினிமாவுக்காக தொடர்ந்து முயற்சித்து தோற்றுப் போனேன். பிறகு எழுத்துலகில் பயணிக்க தொடங்கினேன். அதன்படி என்னை தமிழ் வாழ வைத்தது. என்னிடம் தமிழ்ச் சங்கங்கள் கவிதை கேட்டார்கள், அனைவரிடம் கேட்பார்கள், அதுபோல் என்னிடம் கேட்ட போது, நான் அவர்களுக்கு கவிதை எழுதி கொடுத்தே, அதை அவர்கள் வெளியிட்டார்கள். பிறகு தீர்த்தமலை என்ற சிவன் மலைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். பிறகு மருத்துவ குறிப்பு, கவிதை தொகுப்பு என்று எழுதினேன், அனைத்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
குடும்ப சூழ்நிலைக்காக நடத்துனராக பணியில் சேர்ந்தேன், சிறிது காலத்திற்குப் பிறகு வேலையை விட்டு விட்டு சினிமாவுக்கு ஜம்ப் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அது முடியவில்லை. அதேபோல் நடத்துனர் வேலையையும் காப்பாற்றிக் கொள்ள ரொம்ப போராட வேண்டியதாயிற்று. இப்படி வாழ்க்கை போன போது, சினிமா ஆசை என்னை விடவில்லை. எதாவது செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்தேன். இந்த சினிமாவுக்காக என் குடும்பத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நிறைய ஏமாந்திருக்கிறேன், ஆனால் நான் யாரையும் இதுவரை ஏமாற்றவில்லை. உலகத்திலேயே எந்த துறையிலும் கிடைக்காத அனுபவம் எனக்கு நடத்துனர் துறையில் கிடைத்தது. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம் ஆயுள் குறைந்துக் கொண்டே வருகிறது, அதற்குள் எதாவது சாதிக்க வேண்டும். எனவே சினிமாவில் சாதிக்க வேண்டும், என்று முடிவு செய்தேன். அதற்காக இரண்டு குறும்படங்கள் எடுத்தேன். இப்போது ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்திருப்பதோடு, நடிக்கவும் செய்திருக்கிறேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. ஆனால், நான் இப்படி ஒரு படத்தை இயக்குவதற்கு ‘ரூபன்’ படத்தின் இயக்குநர் ஐயப்பன் தான் காரணம். நான் இங்கு நிற்க அவர் தான் காரணம். நான் இந்த படத்தை இயக்கினாலும், என்னை இயக்கியது ஐயப்பன் தான், அவர் வயதில் இளையவராக இருந்தாலும், எனக்கு அவர் தான் குரு, அவரை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்.
திருக்கோவிலூரில் தமிழ்ச் சங்கத்தில் இருந்து சிறுகதை கேட்டார்கள். அவர்களுக்காக எழுதிய சிறுகதை நல்ல வரவேற்பு பெற்றது. நான் ஓட்டுனராக பணியாற்றும் போது பேருந்தில் பயணிக்கும் சில வாத்தியார்கள் அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்று படிப்பதோடு, பள்ளியில் பாடமாகவும் நடத்துவார்கள். அப்போது தான் இந்த கதையை படமாக எடுக்க முடிவு செய்தேன். பெண் கல்வி மற்றும் போதைப் பழக்கம் இது இரண்டையும் வைத்து தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவும் இருந்தால் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை எடுக்க இருக்கிறேன், நன்றி.” என்றார்.
நடிகர் ஆட்டுக்குட்டி என்கிற புரூஸ்லி பேசுகையில், “எனக்கு இந்த படத்தில் நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கும் எங்கள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். அடுத்தடுத்து அவர் படங்கள் பண்ண வேண்டும், எங்கள் ஐ.ஏ.எஸ் கண்ணம்மா படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் அரவிந்த் பாபு பேசுகையில், “ஒரு நல்ல திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறேன் என்ற கர்வம் எனக்கு இந்த படத்தின் மூலம் வந்திருக்கிறது. இன்று எப்படி எப்படியோ படம் எடுக்கும் சூழ்நிலையில், இப்படியும் படம் எடுக்கலாம் என்று ராஜசோழன் சார் காண்பித்திருக்கிறார். இதுபோன்ற ஒரு படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும், அந்த தைரியம் கொண்ட இயக்குநர் சாருக்கு நன்றி. இந்த படத்தில் பணியாற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் எங்களை எல்லாம் இயக்கிக் கொண்டிருக்கும் ஐயப்பன் சார் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இது பெயர் அளவில் தான் சிறிய படம், ஆனால் படத்தை பார்க்கும் போது பெரிய படமாக இருக்கும். எனவே பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும், நன்றி.” என்றார்.
நடிகர் கோவை ஆறுமுகம் பேசுகையில், “ஏ.கே.ஆர் பியூச்சர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ரூபன் என்ற படத்தை எடுத்தோம். அந்த படத்தின் இயக்குநர் ஐயப்பன் மூலம் தான் ராஜசோழன் சார் பழக்கம். எங்கள் படத்தின் படப்பிடிப்புக்கு அவர் வருவார். அப்போது பாரதியார் போல் இருந்ததால் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். பிறகு அவர் இப்படி ஒரு படம் இயக்கப் போவதாகவும், அதில் ஒரு இன்ஸ்பெக்டர் ரோல் பண்ண வேண்டும், என்று கேட்டார். அதன்படி நானும் நடித்துக் கொடுத்தேன், அது சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன். ஒரு ஏழ்மையான பெண் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார், அவருக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது, அவற்றை கடந்து அவர் எப்படி படிப்பில் வெற்றி பெறுகிறார், என்பது தான் கதை. இந்த படப்பிடிப்பே ஒரு குடும்ப பணி போல் தான் இருந்தது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.
ரூபன் பட நாயகன் விஜய் பிரசாத் பேசுகையில், “ரூபன் படத்தின் படப்பிடிப்பின் போது தான் ராஜசோழன் சாரை சந்தித்தேன். அப்போது எனக்கு தெரியாது இதுபோன்ற ஒரு படம் பண்ணப் போகிறார் என்று. இன்று தான் தெரிகிறது இவ்வளவு பெரிய படம் பண்ணியிருக்கிறார். இதற்கு உறுதுணையாக இருந்த ஐயப்பன் அண்ணனுக்கு நன்றி. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த படத்தில் நடித்திருக்கும் சிறுமி நேத்ரா என் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். ஆறுமுகம் அண்ணனுக்கு நல்ல மனது, அவர் நடிக்கும் போது இன்ஸ்பெக்டர் போன்ற வேடத்தில் தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார், அவர் ஆசைப்படி அவருக்கு இந்த படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அவருக்கும் வாழ்த்துகள். படத்தின் இசைமைப்பாளர் அரவிந்த பாபு சாரின் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. அவர் இளையராஜா சாரிடம் பணியாற்றியவர், அதனால் அவரது மெலோடி பாடல்கள் தாலாட்டுவது போல் இருக்கும். இந்த படக்குழுவுக்கு என் ஒட்டுமொத்த வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன். ஒரு இடத்திற்கு செல்ல எவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம், என்பதை சார் சொன்னதை கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. யாரோ போட்ட பாதையில் பயணிக்காமல், தனக்கு என்று தனி போட்டுக்கொண்ட ராஜசோழன் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும், என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.
நடிகை காயத்ரி பேசுகையில், “இந்த காலத்து பாரதி போல் இருக்கும் இயக்குநர் தயாரிப்பாளர் ராஜசோழன் சார் நினைத்தது நடந்து விட்டது, அவர் சாதித்து விட்டார். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இதேபோல் ஊக்கமளிக்கும் படங்களை தொடர்ந்து எடுக்க வேண்டும். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.
படத்தின் நாயகி பிரின்ஸி பேசுகையில், “காலதாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். என்னுடைய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. சிறிய குழுவை வைத்து மிகப்பெரிய படம் பண்ணியிருக்கோம். இந்த குழுவில் ஒருவர் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் இந்த படம் இந்த அளவுக்கு வந்திருக்காது, எனவே அனைவருக்கும் ரொம்ப நன்றி. கண்டிப்பாக படம் பாருங்கள், அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.
மக்கள் தொடர்பாளர்கள் சங்க செயலாளர் ஜான் பேசுகையில், “நடத்துனர் பணி என்பது மிக முக்கியமான பொறுப்பாகும். அப்படிப்பட்ட பணியில் இருந்து இயக்குநராக வந்திருக்கும் ராஜசோழன் சாருக்கு வாழ்த்துகள். பி.ஆர்.ஓ தம்பி விஜய், அவருக்கு நான் குரு அல்ல, யாருக்கும் யாரும் குரு சிஷ்யன் அல்ல, அனைவரும் அண்ணன் தம்பி தான். அவர் அவர் தான் கற்றுக் கொள்ள வேண்டும். பி.ஆர்.ஓ-வாக கார்டு எடுப்பது முக்கியம் அல்ல, படம் பண்ண வேண்டும், அது தான் முக்கியம். இங்கு பின்னாடி நிறைய பேசுப்வார்கள், நல்லதுக்கு காதை திறந்து வை, கெட்டதுக்கு காதை மூடி வை. இவை இரண்டுக்கும் செவி கொடுக்காமல் பயணித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். எனக்கு பின்னாடி நிறையப் பேர் பேசுகிறார்கள், ஆனால் என் முன்னாடி பேசினால் அதற்கு தீர்வு காண முடியாமல் அப்படி இல்லை என்றால் அதை நாம் கண்டுக்கொள்ள கூடாது. எனவே, குறை சொல்பவர்களை பற்றி கவலைப்படாமல் பயணிக்க வேண்டும்.
ஐ.ஏ.எஸ் பணிக்கு சுமார் 2000 பெண்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இத்தனை வருடங்களில் இவ்வளவு பெண்கள் தான் இந்த பதவிக்கு வந்திருக்கிறார்களா? என்றால் அது அப்படி தான். இன்னும் நிறைய பெண்கள் இந்த பதவிக்கு வர வேண்டும். அதேபோல் கல்வியில் தோற்றுப்போனவர்கள் தோல்வி அடைந்தத்தாக நினைக்க வேண்டாம். கல்வி இல்லை என்றால் அடுத்த துறையில் சாதிக்க முயற்சிக்க வேண்டும். பிள்ளைகளை படி படி என்று சொல்வதை விட படிப்புக்கு அடுத்தப்படியான விசயங்களுக்கு சொல்ல வேண்டும். அனைவரும் அரசாங்க வேலை, உயர் பதவிகளுக்கு முயற்சிக்காமல் தொழில் முனைவர்களாக உருவாக வேண்டும், அதற்கு ஏற்றவாறு பிள்ளைகளை வளர்க்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த குழுவின் பணியாற்றியிருக்கும் ஒளிப்பதிவாளர் கேசவன், இசையமைப்பாளர் அரவிந்த பாபு, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராஜசோழன், பி.ஆர்.ஓ நா.விஜய் என அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
நடிகை கோமல் சர்மா பேசுகயில், “இந்த படத்தில் இயக்குநர் ராஜ்ழோசன் மூன்று முக்கியமான விசயங்களை பேசியிருக்கிறார். ஒன்று கல்வி, இரண்டு போதைப்பழக்கம், மூன்றாவது பெண்கள் முன்னேற்றம். பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும், ஆனால் இந்தியாவில் இன்னமும் பெண்களுக்கான கல்வி குறைவாகவே இருக்கிறது. இன்னமும் பல ஊர்களில் 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மேலே படிக்காமல் பல பெண்கள் இருக்கிறார்கள். எனவே, கல்லூரி வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும், என்று அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன். ஒரு வீட்டில் ஒரு ஆண், பெண் இருந்தால், ஆண் பிள்ளை படிப்புக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கல்லூரி வரை இலவச படிப்பு சலுகை வழங்கினால் பெண்களும் படிப்பார்கள். இன்று ஒரு நாடு அழிவதற்கு போதைப்பொருள் தான் காரணம். குறிப்பாக இளைஞர்கள் போதைப்பழகத்திற்கு அடிமையாவதால், காஷ்மீர் பயங்கரவாத சம்பவங்கள் போன்று நடக்கிறது. படிப்புக்காக குரல் கொடுத்த மலாலாவை தாக்கியதும் இதற்காக தான். பெண்களின் கல்விக்கு குரல் கொடுத்த அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு பல திறமைகள் இருக்கிறது, ஆனால் அவற்றை வெளிக்காட்டக்கூடிய வழி தெரியவில்லை. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களை போதைக்கு அடிமையாக்கி விடுகிறார்கள். எனவே, இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். அதேபோல், பெண்களின் முன்னேற்றம், அவர்களின் படிப்பு இரண்டுமே சமநிலையை சொல்கிறது. இப்படி படத்தில் பல விசயங்கள் சொல்லியிருக்கும் ராஜசோழன் சார், உருவத்தில் பாரதியார் போல் இல்லாமல் அவர் கருத்தை மிக ஆழமாக சொல்லியிருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
’சாமானியன்’ திரைப்பட இயக்குநர் ராகேஷ் பேசுகையில், “ராஜசோழன் சாரை பார்க்கும் போது பெரிய தன்னம்பிக்கை கிடைத்தது. நிறைய கஷ்ட்டங்களை எதிர்கொண்ட போதிலும், வாழ்க்கையில் நினைத்ததை விரட்டி பிடித்திருக்கிறார். இதை விட வேறு என்ன சார் வேண்டும். அவரது இந்த முயற்சிக்கு அவருக்கு வாழ்த்துகள். சாரை பார்க்கும் போது சாயாஜி ஷிண்டேவை பார்ப்பது போல் இருக்கிறது. சாயாஜி ஷிண்டே சார் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து முடித்த போது, ஒரு தொழிலதிபர் அவரை அழைத்து பிளாங் செக் கொடுத்தாராம். அதுபோல் இந்த படம் வெளியானால் உங்களுக்கு நிறைய செக் வரும் சார். அனைவரும் நம்பிக்கையோடு உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் அடுத்தக்கட்டத்திற்கு போக வேண்டும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டிக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.
பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி பேசுகையில், “ராஜசோழன் அவர்களை பார்க்கும் போது சாயாஜி ஷிண்டே போல் இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பிரின்ஸி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் அரவிந்த் பாபுவின் பாடல்களில் வார்த்தைகள் தெளிவாக புரிகிறது. இதுபோன்ற புது நட்சத்திரங்களை வைத்து படம் பண்ணும் போது ஒளிப்பதிவாளர், சண்டைப்பயிற்சியாளர் மற்றும் நடன இயக்குநர்கள் அதிகம் சிரமப்படுவார்கள், அவர்களுக்கும் வாழ்த்துகள். ரூபன் பட இயக்குநர் ஐயப்பன் சாருக்கு வாழ்த்துகள். பெண் கல்வி என்பது ஒரு குடும்பத்திற்கு மிக முக்கியம். இன்று மத்திய, மாநில அரசுகள் பெண் கல்விக்காக பல சலுகைகள் வழங்குகிறார்கள், அதை சரியான பயன்படுத்தினாலே வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம். பெண்கள் பெருமை பேசுகிறோம், அவர்களை போற்றி கவிதைகள் எழுதுகிறோம், ஆனால் அதை நாம் மதிக்க வேண்டும், என்பது தான் முக்கியம். பி.ஆர்.ஓ நா.விஜய்க்கு முதல் வாய்ப்பு கொடுத்த ராஜசோழன் அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சிறிய படங்களுக்கு பத்திரிகையாளர்கள் சிறப்பான ஆதரவளித்து வருகிறார்கள். அதுபோல் ரசிகர்களும் இதுபோன்ற சிறிய படங்களை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
இந்த படத்தின் மூலம் பி.ஆர்.ஓ-வாக அறிமுகமாகும் நா.விஜய் பேசுகையில், “இந்த இடத்திற்கு வர நான் 15 ஆண்டுகள் போராடியிருக்கிறேன். திரைப்பட விமர்சகராக என் வாழ்க்கையை தொடங்கினேன். பிறகு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், என்று நினைத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நான் என் வீட்டில் இருந்ததை விட பிரசாத் லேபில் தான் அதிக நாட்கள் இருந்தேன். தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் பி.ஆர்.ஓ ஜான் சார் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவியாளராக பணியாற்றினேன், பிறகு பி.ஆர்.ஓ கார்டு பெற்றேன். அதன் பிறகு படம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. பிறகு சிவாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் ஐயப்பன் சாரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து இந்த படத்தின் வாய்ப்பு கிடைக்க துணையாக இருந்தார். அவருக்கு நன்றி. உங்களது வாழ்த்துகளும், ஆதரவும் எனக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும், நன்றி.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “ஐ.ஏ.எஸ் கண்ணம்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதை விட, பி.ஆர்.ஓ விஜயின் அரங்கேற்றமாகவே இந்த விழா நடைபெற்றுள்ளது. இதில், நான் பங்கேற்பது மகிழ்ச்சி. என் உதவியாளர் இந்த படம் குறித்து சொல்லி நிகழ்வுக்கு என்னை அழைத்தார். நான் தொடர்ந்து வந்துகிட்டு இருக்கேன், மேலும் பெப்ஸியில் மே தின வேலைகள் நடைபெறுவதால், இன்று வர முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், விடாமல் நான் தான் வர வேண்டும், என்று கூறினார்கள், சரி என்னை மிக அன்பாக அழைக்கிறார்கள் என்று வந்தேன். இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது, என்னிடம் உதவியாளராக சேர முயற்சித்த ராஜசோழன், அது நடக்காமல் போனதால், தானே ஒரு படம் எடுத்து, அதில் என்னை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும், என்று நினைத்து தான் என்னை இங்கு அழைத்திருக்கிறார், என்பது தெரிந்து விட்டது. சார், நான் உங்களை சேர்க்க மறுக்கவில்லை, என்னை அனுகாமல் இருந்திருப்பீர்கள். அதே சமயம், நீங்க உதவி இயக்குநராக இருந்து படம் எடுக்க முயற்சித்திருந்தால் ரொம்ப லேட்டாகியிருக்கும். ஆனால், இப்போது உடனடியாக இயக்குநராகி விட்டீர்கள். அதற்கு காரணம், ஒரு வெறி இருக்கும் அது தான் உங்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது.
பி.ஆர்.ஓ ஜான் சிறப்பாக பேசினார், வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு இருக்கிறார் போல, அவர்களால் தான் இப்படி பேச முடியும். அவர் சொன்னது போல், பின்னாடி நம்மை குறை சொல்பவர்களை கட்டுக்கொள்ள கூடாது. அதேபோல், நம் முன்பு அதிகமாக புகழ்பவர்களையும் நாம் கண்டுக்கொள்ள கூடாது. நம்ம தகுதிக்கு மீறி நம்மை புகழ்பவர்களிடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து நாம கொஞ்சம் விலகியிருப்பது நல்லது.
ஐ.ஏ.எஸ் கண்ணம்மா, கண்ணம்மா என்பதே தமிழ்நாட்டில் வீரியமான பெயர். பாரதியார் கண்ட புதுமைப்பெண், அந்த பெண்ணுக்கு உருவம் இல்லை, அது அவரது கற்பனை என்றாலும், தமிழ்நாட்டில் அந்த பெயருக்கு பல பெண்கள் உருவம் கொடுத்திருக்கிறார்கள். யார் யாரெல்லாம் டாக்டர் ஆனார்களோ அவர்கள் கண்ணம்மா தான், யார் யாரெல்லாம் போலீஸ், ஐ.ஏ.எஸ் ஆனார்களோ அவர்கள் எல்லாம் கண்ணம்மா தான். முன்னேறிய பெண்கள் அனைவரும் கண்ணம்மா தான். வேலு நாஞ்சியார், குயிலி, அஞ்சலை அம்மாள் என அப்போதே தமிழ்நாட்டில் கண்ணம்மாக்கள் உருவாகி விட்டார்கள். ஆக, நம் தமிழகத்தில் பெண்கள் முன்னேறிவிட்டார்கள். நான் கல்லூரி படிக்கும் போது 25 மாணவர்களின், 5 பேர் மட்டும் தான் பெண்களாக இருப்பார்கள். ஆனால், இன்று ஆண்களை விட பெண்கள் அதிகம் படிக்கிறார்கள். நடிகை கோமல் சர்மா சிறப்பாக பேசினார்கள். படிப்பு மட்டும் அல்ல இன்று போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி விட்டார்கள். ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால், அந்த இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கினாலே போதும் அந்த நாட்டி அழிந்து விடும். தற்போது அப்படிப்பட்ட சூழல் தான் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இன்று படிப்பவர்கள் மட்டும் கண்ணம்மா இல்லை, ஒவ்வொரு தாயும் கண்ணம்மா தான். பெற்ற பிள்ளைகளை சுய ஒழுக்கத்தோடு வளர்க்கும் அனைத்து தாயும் கண்ணம்மா தான். உலகத்திலேயே இந்தியா தான் பெண் பெருமை பேசும் நாடு, இந்தியாவில் தமிழ்நாடு தான் பெண் பெருமை பேசும் நாடு. ஆனால், இப்போது அப்படி நிலை இல்லை. தாய் பெண் பெருமையை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்பாவின் பெருமை சொல்லி வளர்க்க வேண்டும், கணவர்களை குறை சொல்லி மனைவிகள் வாழ்கிறார்கள், அதேபோல் ஆண்களும் மனைவிகள மட்டம் தட்டி பேசுகிறார்கள். இப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தால், இதை பார்க்கும் பிள்ளைகள் இருவரையும் மதிக்காமல் கெட்டுப் போய்விடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் பிள்ளைகள் முன்பு இத்தகைய நடவடிக்கையை கைவிட்டுவிட்டு குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும். பள்ளி சரியில்லை, அக்கம் பக்கம் சரியில்லை என்று சொல்வதை விட்டு விட்டு, பெற்றோர்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும். எனவே பிள்ளைகளின் வளர்ப்புக்கு முழு காரணம் பெற்றோர்கள் தான். எனவே, ஒவ்வொரு அப்பனும் பாரதியார், ஒவ்வொரு தாயும் கண்ணம்மா தான்.
படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ராஜசோழன் பாரதியாரின் கருத்துக்களில் ஊறிப்போயிருக்கிறார். அதனால் தான் உருவத்தில் மட்டும் இன்றி தனது படைப்பிலும் பாரதியாரை கொண்டு வந்திருக்கிறார். முதல் படத்தில் கல்வி மற்றும் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் என சமூகத்திற்கு தேவையானதை ஒரு கதையை இயக்கியிருக்கிறார். படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பிரின்ஸியும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவரது நடிப்பில் வித்தியாசம் தெரிகிறது. கண்ணம்மா என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ப கம்பீரமாக நடித்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் ஆட்டுக்குட்டி புரூஸ்லி நன்றாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் அரவிந்த் பாபுவின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது, கேமரா, படத்தொகுப்பு என அனைத்தும் நன்றாக இருந்தது.
கண்ணம்மா என்ற பெயர் என்றாலே ராசியான பெயர், இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றியடையும். பாரதி கண்ட கண்ணம்மாக்கள் தைரியமான பெண்களாக இருக்க வேண்டும், நீட் தேர்வுக்காக உயிரை விட்ட அனிதா போல் இருக்க கூடாது. தேர்வு என்பது ஒரு சாதாரணம் தான், அதில் தோல்வியடைந்து விட்டதால் தற்கொலை முடிவு எடுக்க கூடாது. போராடி ஜெயிக்க வேண்டும். அவர்கள் தான் பாரதி கண்ட கண்ணம்மா, என்று கூறுக்கொண்டு ‘கண்ணம்மா’ படக்குழுவினரை வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
சிறப்பு விருந்தினர்கள் பேரரசு மற்றும் பி.ஆர்.ஓ நெல்லை சுந்தரராஜன் ’ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ இசை தகட்டை வெளியிட மற்ற சிறப்பு விருந்தினர்களுடன் சேர்ந்து படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.