இன்று (26.10.2021) வடபழனி, குமரன் காலனி மெயின் ரோடு, ஜே.பி. டவரிலிருக்கும் எங்கள் தமிழ் சினிமா கம்பெனி அலுவலகத்திற்கு ஃபெஃப்ஸி தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி வந்திருந்தார்.

எதிர்கால இயக்குநர்களை வரவழைத்து அடிக்கடி கலந்துரையாடல் நடத்துவது பற்றி ஏற்கெனவே அவருக்குத் தெரியும். இயக்குநர் சங்கத்தின் தலைவரும் அவரே. எனவே, நாங்கள் நடத்தும் கலந்துரையாடல் இயக்குநர்களுக்குப் பயனளிக்கும் என்ற வகையில் எங்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

எங்களுடைய பிரிவியூ தியேட்டரில் சில டிரெய்லர்களையும், அமேசான் பிரைம் படத்தின் ஒரு சில காட்சிகளையும் பார்த்து ரசித்தார்.
இயக்குநர்களின் ரெஃபரன்ஸூக்காகப் படம் பார்க்க விரும்பும்போது டிஸ்கவுண்ட் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் உடனடியாகச் சம்மதித்தேன்.

தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைமை பற்றிச் சிறிது நேரம் பேசினோம்.

‘கோடிகளில் தயாரிக்கப்படும் படங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளம் 1% – 10% வரை மட்டுமே ஆகிறது. தேவையற்ற வீண் செலவுகள் 5% – 15% வரை ஆகிறது. வீண் செலவுகளைக் குறைத்தாலே தயாரிப்பாளர்களின் தயாரிப்புச் செலவு கட்டுப்பாட்டுக்குள் வரும். தொழிலாளர்களின் சம்பளம் மிகச் சாதாரணமானதாக ஆகிவிடும்’ என்ற தன் கருத்தை விளக்கினார்.

அந்த வீண் செலவுக்குக் காரணம் அனுபவம் இல்லாமல் வரும் தயாரிப்பாளர்கள், அவர்களின் சிற்றின்ப ஆசைகள், வேறு வழியில்லாமல் அதற்குத் துணை போகும் புரடக்சன் மேனேஜர்கள் என்பதை விளக்கினார்.

புரடக்சன் மேனேஜர்கள் செய்யும் தவறுகளையும், சிறிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பில் ஃபெப்ஸி ஊழியர்கள் நடந்து கொள்ளும் தவறான நடத்தைகளையும் விவரித்து, தங்கள் உறுப்பினர்களிடம் எடுத்துக் கூறி திருத்துவதாகக் கூறினார்.

3, 4 மாதங்களுக்கொரு முறை ஃபெப்ஸி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் முக்கியமான தயாரிப்பாளர்களைப் பேச வைத்து இரண்டு பக்கமும் புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற என் ஆலோசனையையும் ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாகக் கூறினார்.

கடந்த 10 வருடங்களாக வெளி வராமல் முடங்கிக் கிடக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து, மேம்படுத்தி வெளியிடும் எங்களின் முயற்சியை மனதாரப் பாராட்டியவர், பெரிய அளவு உதவி செய்வதாகவும் கூறினார்.

அதேபோல, குறைந்த பட்ஜெட்டில் பார்ட்னர்ஷிப் முறையில் படம் தயாரிக்கும் விபரத்தையும் கேட்டுப் பாராட்டினார். தன்னாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார்.

எல்லா தயாரிப்பாளர்களும் ஃபெப்ஸி தொழிலாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், அங்கு ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை நிர்வாகம் களையும் என்ற உறுதிமொழியையும் முன் வைத்தார்.

தமிழில் நல்ல, லாபகரமான படங்கள் வெளியாவதற்கு சில நல்ல ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்.

இவரது முதல் படத்திற்கு வசனம் எழுதி படம் மெகா ஹிட் ஆவதற்குக் காரணமான, தற்போது எங்கள் ‘ஹிரோஷிமா’ படத்திற்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கும் திரு. லியாகத் அலிகான் அவருடனான தன் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

விரைவில் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்காக தங்கள் உறுப்பினர்களுக்கு உதவி வழங்க பிஸியாக ஓடிக் கொண்டிருந்த வேளையிலும் எங்களுக்காக சற்று நேரம் ஒதுக்கி வந்து பார்த்து கலந்து பேசியது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது.

அவர்மேல் சில விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால், தன் குடும்பத்தை மறந்து இயக்குநர்கள் மற்றும் ஃபெப்ஸி தொழிலாளர்களின் நல்வாழ்விற்காக இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.

வெட்டினால் வளராமல் குறுகிப் போகும் போன்சாய் மரமாக இல்லாமல், எத்தனைதான் வெட்டினாலும் வீரியமாக வளரும் மரம்போல 30 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அவருக்கு அன்பும் நன்றியும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here