இப்படத்தின் நாயகன் ராம்போவுக்கு இரண்டு வாழ்க்கை அதாவது பகலில் கால் டாக்ஸி ஓட்டுபவர், இரவில் பப்’ ஒன்றில் ‘பவுன்சர்’. கால் டாக்ஸி ஓட்டும் ராம்போ மீது நயன் தாராவுக்கு காதல், பவுன்சர் மீது சமந்தாவுக்கு காதல். இது ஏதோ முக்கோண காதல் கதை என்று சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது. எந்த விதமான விகல்பமோ ஆபாசங்களோ இல்லாத, உண்மையாகவே மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும் ஒரு வித்தியாசமான காதல் கதை.

குழந்தை பருவத்தில் இருந்தே துரதிர்ஷ்டம் துரத்தும் நபர் விஜய் சேதுபதி. தயாரின் வாக்குப்படி ஏதாவது ஒரு நாள் ஒரு தேவதை மூலம் வாழ்க்கை மாறும் என்பதை ஆழமாக நம்பிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு இரண்டு தேவதைகள் மூலம் வாழ்க்கை மாறுகிறது. தேவதைகள் என்றாலும் இரண்டு பேரை திருமணம் செய்து கொள்ள முடியாதல்லவா? இரண்டு தேவதைகளுக்கு இடையே ஏற்படும் போட்டி பொறாமைகள் செல்ல சண்டைகள் என செம ஜாலியாக நகர்கிறது படம்.

விஜய் சேதுபதியின் நடிப்பு எக்ஸ்ட்ராட்ரினரி. கல்லூரி மாணவர் போல் தோற்றம் இல்லை, ஏறக்குறைய மாஸ்டர் பவானியின் கெட்டப்பில்தான் இருக்கிறார் ஆனாலும் ரொமான்ஸ் சூப்பராக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. நயன்தாராவின் தோற்றம் கதாபாத்திரம் என அனைத்தும் மிகச்சிறப்பாக பொருந்தி இருக்கிறது, சமந்தா செம்ம சார்மிங்காக இருக்கிறார். இந்த மூவர் மட்டுமே முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். ஷிகான் ஹுனைனியின் பாத்திரம் உள்ளிட்ட‌ ஒரு சில கதாபாத்திரங்கள் மிகக்குறைந்த நேரமே வந்தாலும் சர்ப்ரைசிங்காக இருக்கிறது.

அனிருந்த்தின் பாடல்கள் ம‌ற்றும் பின்னணி இசை குதூகலப்படுத்துகிறது. காதல் படத்துக்கேற்ற கண்களுக்கு குளிச்சியான கேமிரா ஒர்க் சிறப்பு. விஜய் சேதுபதி யாருக்கு என நயன் மற்றும் சமந்தா இடையே நடக்கும் போட்டிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதி முழுவதும் அது ஒன்று மட்டுமே ஓடிக்கொண்டிருப்பதால் சற்றே தொய்வாக இருப்பதைப் போல் ஒரு உணர்வு. ட்ரைலரில் இருந்ததை போல் இரட்டை அர்த்த வசனங்கள் படம் முழுக்க இருக்குமோ என்று எதிர்பார்த்தவர்களும் சரி பயந்தவர்களும் சரி ஏமாந்துபோனார்கள். சொல்லப்போனால் அந்த குறிப்பிட்ட காட்சி கூட துளியும் ஆபாசம் இல்லாமல் ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது. நிச்சயமாக ரசித்து பார்க்கக்கூடிய படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here