இயக்குனர் சாமி இயக்கிய அக்காக் குருவி படத்தை பார்த்து சீமான் பேசியதாவது :

என்னுடைய தம்பி இயக்குனர் சாமி தயாரித்து இயக்கிய படம் அக்காக் குருவி. உலகத் திரைப்பட விழாவில் மஜித் மஜிதி எடுத்த சில்ரன் ஆஃப் ஹெவன் பார்த்தோம். அப்படம் உலகப்புகழ் பெற்ற திரைப்படம். நாங்கள் வியந்து ரசித்த படம். அதே சாமி மறுபதிப்பு செய்து இருக்கிறார். ஆனால், அத்திரைப்படத்தை ஏனோதானோ என்று இல்லாமல் மிகுந்த பொறுப்புணர்வோடு கொஞ்சமும் சிதையாமல் எடுத்திருக்கிறார். சில்ட்ரன் ஆஃப் ஹெவன் 83 நிமிடங்கள். ஆனால் அக்கா குருவி 1.53 நிமிடங்கள் நீட்டித்திருக்கிறார். இருப்பினும், தேவையற்ற காட்சிகளை வலிந்து திணிக்கிறார் என்று சொல்ல முடியாத அளவிற்கு முதன்மையான உணர்வை கெடுக்காமல் மக்களின் ரசனைக்கு ஏற்ப திரைக்கதை அமைத்து சிறப்பாக செய்திருக்கிறார் தம்பி சாமி. அதற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருடைய முந்தைய படங்களை விட மிகவும் உணர்வுபூர்வமான கவித்துவமான காவியம் என்று தான் சொல்ல வேண்டும். இதில் என்னவென்றால் இதுபோன்ற படங்களில் தயாரிக்க யாரும் முன்வர மாட்டார்கள். ஆகையால், அவருடைய கனவு தொழிற்சாலை, முத்து மூவிஸ் என 9 பேர் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய திரையுலக சூழல் அப்படி ஆகிவிட்டது.

நட்சத்திரமாக நடித்து இருக்கும் குழந்தைகள் மிகவும் அருமையாக நடித்து இருந்தார்கள். மேலும், நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஆனாலும் புதுமுகங்கள் மாதிரி தெரியவில்லை அனைவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றி தங்களுடைய திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் பார்க்கும் உணர்வே எனக்கு வரவில்லை அந்த அளவிற்கு எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள். அது இப்படத்திற்கு பெரிய வெற்றி.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் உத்பல் வி. நாயனார் மலையாளத்தில் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். கலை இயக்குனர் என்னுடைய தம்பி வீரசமர். இசையைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஈடு இணையற்ற இசை மேதை இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவர் இசையமைத்து இருக்கிறார் என்பதைவிட ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்து இருக்கிறார் என்பதே பொருத்தமாக இருக்கும். இசையால் இப்படத்தை வருடிக் கொடுத்து இருக்கிறார். அண்ணன் இருக்க தனது பங்களிப்பை இளையராஜா கொடுத்திருக்கிறார். இப்படம் பார்த்தால் அனைவருக்கும் பிடிக்கும். சாதாரண படத்திற்கு சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்தவர், இந்த மாதிரி படங்களை விடுவாரா என்ன?! மிகவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.

படம் திரையரங்கிற்கு வந்து ஓடுகிறது. என் அன்பு உறவுகள் அனைவரும் பார்க்க வேண்டும். அப்போதுதான் புதிதாக முயற்சிக்கும் படைப்பாளிகளுக்கு ஊக்கமும். நம்பிக்கையும் வரும். இது எனது அன்பான வேண்டுகோள். மேலும் இந்த வகையில் இப்படத்தை தவறவிடக் கூடாது குழந்தைகள் குடும்பம் குடும்பமாக பார்க்கவும். வன்முறை ஆபாசம் தேவையற்ற காட்சிகள் உரையாடல்கள் என்று ஒரு துளிகூட கிடையாது. மிக சிறந்த படைப்பு. இப்படிப்பட்ட ஒரு படத்தை யாரும் தயாரிக்க வில்லை என்றால் நாமே துணிந்த எடுப்போம் என்ற என்னுடைய தம்பி இயக்குனர் சாமிக்கு என்னுடைய பாராட்டுக்களும் நன்றியும். அவருக்கு துணையாக இருந்த என்னுடைய சகோதரர். இவர் ராஜு மதுரவனின் மைத்துனர். இவர்கள் அனைவரும் இணைந்து அவரவர்களுக்கு இயன்ற அளவு பணம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள்.

இது ஒரு போர்தான். சாமி 9 பேர் இணைந்து தயாரித்து இருக்கிறோம் என்றார். நாங்கள் 50 பேர் இணைந்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறோம் என்று கூறினேன். இதுபோன்ற முயற்சி எடுக்கும் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒருமுறை படம் பாருங்கள். படம் உங்களை உறுதியாக ஏமாற்றாது.. மிகுந்த மன நிறைவை தரும் சிறந்த படம். எவ்வளவு பாராட்டினாலும் தகும். என்னுடைய பாராட்டை படைப்பாளிகளுக்கு, இப்படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு குறிப்பாக என்னுடைய தம்பி சாமிக்கு வாழ்த்துக்களை சொல்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.

இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அன்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here