பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசிகர்களை வசீகரித்த இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அப்படி எண்ணிலடங்காத ரசிகர்களை தன் வசப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம் இப்பொழுது நம்மோடு இல்லை என்றாலும், அவர் பாடிய பாடல் மூலம் நம்முடன் வாழ்ந்து வருகிறார். ஜூன் 4 ஆம் தேதி இவரது பிறந்தநாள். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில், எஸ் பி பி யின் தீவிர ரசிகரும், டாக்டருமான ஆர்.பாலாஜி, சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார். உயிரான குரலே எங்கள் எஸ்பிபி நீங்களே… எனத் தொடங்கும் இந்த பாடலை டாக்டர் ஆர்.பாலாஜியே பாடியுள்ளார். ராகேஷ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை தரன் எழுதியுள்ளார்.

இந்த பாடல் குறித்து டாக்டர் ஆர்.பாலாஜி கூறும்போது, எஸ்பிபி அவர்களின் தீவிர ரசிகன் நான். அவர் மறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பாடல்கள் மூலம் இன்னும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். டியர் எஸ்பிபி சார் உங்கள் குரல் எங்கள் வாழ்வின் ஓர் அங்கம், அது வெறும் குரல் அல்ல, அது எங்கள் செவிகளில் நிறைந்திருக்கும் இன்னொரு உயிர்… என்று டாக்டர் ஆர்.பாலாஜி கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here