காதலை கவித்துவமாக சொல்லும் ’அற்றைத் திங்கள் அந்நிலவில்’

திரைப்பட பயிற்சி மைய மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ’அற்றைத் திங்கள் அந்நிலவில்’

அறிமுக நடிகர்களின் நடிப்பில் இதயத்தை வருடம் இனிய காதல் படமாக உருவாகியுள்ள ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’

நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைப்படத்துறைக்கான பல பயிற்சிகளை அளிக்கும் பல பயிற்சி மையங்கள் கோடம்பாக்கத்தில் தோன்றினாலும் அவற்றில் பல தோன்றிய வேகத்தில் மறைந்தும் போயிருக்கின்றன. ஆனால், அப்படி ஒரு பயிற்சி மையமாக இல்லாமல், தமிழ்த் திரைப்பட உலகிற்குப் பல தொழில்நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் உருவாக்கிக் கொடுக்கும் ஒரு மையமாகத் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது “டிஸிஃப்மா – டீசேல்ஸ் சர்வதேச பிலிம் மற்றும் மீடியா அகடாமி’(DESIFMA – Desales International Film & Media Academy).

இந்த திரைப்பட பயிற்சி மையத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்காக இவர்கள் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை சொந்தமாக தயாரிப்பதோடு, அப்படத்தில் மாணவர்களை பணியாற்ற வைத்து, அவர்களுக்கு நேரடி கள பயிற்சி வழங்குவது தான்.

அந்த வகையில், Desales International Film & Media Academy நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ’அற்றைத் திங்கள் அந்நிலவில்’ முழுக்க முழுக்க புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் இதயத்தை வருடும் இனிய காதல் படமாக உருவாகியுள்ளது.

ஐ.டி. நிறுவனத்தில் புதிதாக இணையும் ஹீரோயினுக்கு, அங்கு மேஜேனிங் டைரக்டராக இருக்கும் ஹீரோ மேல் காதல் ஏற்படுகிறது. அந்த காதல் தீவிரம் அடையும் போது ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணமான தகவலோடு, அவர் திருமணம் செய்திருப்பதே ஹீரோயினின் அக்காவை தான் என்ற விஷயமும் சொல்லப்படுகிறது. அக்காவின் கணவர் என்ற போதும், விவாகரத்திற்காகக் காத்திருக்கும் ஹீரோவை ஹீரோயின் தொடர்ந்து காதலிக்க, அந்த காதலை ஹீரோ ஏற்றாரா, சமூகம் அதை எப்படி பார்க்கிறது. இவற்றை கடந்து ஹீரோயினின் காதல் என்ன ஆனது? என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை.

இதில் ஹீரோவாக நவீன் குமார் என்ற அறிமுக நடிகர் நடித்திருக்கிறார். ஹீரோயினாக லாவண்யா நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் இவர் மிஸ்.தமிழ்நாடு உள்ளிட்ட பல பட்டங்களை வென்றிருக்கிறார். இவர்களுடன் சுவாதி, ப்ரேமா உள்ளிட்ட பல புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.

தாஜ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஆர். சி. ஐயப்பன் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ். எஸ். ஜெயக்குமார் லாரன் இயக்கியிருக்கிறார். இவர், இயக்குநர்கள் திரு. கே. பாக்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, திருமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். சென்னை லயோலா கல்லூரியில் 15 ஆண்டுகளாக மீடியா பாட பிரிவில் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது Desales International Film & Media Academy-யின் Dean-ஆக செயல்படுவதுடன், அந்த நிறுவனத்தின் மூலம் பல திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களை உருவாக்கியிருப்பவர். படத்தின் பாடல்களை இவரே எழுதியிருப்பதுடன், திரைக்கதை வசனம் எழுதி, இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

பாபி என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று பாடலும் திரும்ப திரும்ப கேட்கும் காதல் மெலோடி பாடல்களாக உருவாகியுள்ளன. பாடல்கள் வெளியான பிறகு நிச்சயம் இளைஞர்களின் செல்போனில் ரிங்டோனாவது உறுதியாம்.

குறும்படங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள வெங்கடேஷ் இப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். ‘வால்டர்’‘செல்ஃபி’, ‘ ‘தெய்வ மச்சான்’‘ரேக்ளா’ போன்ற பல படங்களின் படத்தொகுப்பாளர் எஸ். இளையராஜா இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பின்னணி வேலைகளில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்படத் தயாரிப்பாளர், “சத்யஜோதி ஃபில்ம்ஸ் திரு. தியாகராஜன்” வெளியிட இருக்கிறார். அதையடுத்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களோடு படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவிக்க முடிவு செய்துள்ளது.

DeSIFMA – Desales International Film & Media Academy-யில் பயிலும் மாணவர்களின் நேரடி கள பயிற்சிக்காக வருடத்திற்கு ஒரு திரைப்படம் தயாரிக்க முடிவு செய்திருக்கும் இயக்குநர் ஜெயக்குமார் லாரன், ’அற்றைத் திங்கள் அந்நிலவில்’படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி படத்தொகுப்பாளர்கள் என்று பல்வேறு கிராப்ட்களிலும் DeSIFMA மாணவர்கள் பணிபுரிந்து தங்களது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here