நடிகர் உதயா மற்றும் இயக்குநர் விஜய் ஆகியோரின் தாயாரும், மூத்த தயாரிப்பாளர் திரு ஏ.எல். அழகப்பனின் மனைவியுமான திருமதி வள்ளியம்மை சில தினங்களுக்கு முன் காலமானார்.

திருமதி வள்ளியம்மை குறித்து அவரது மூத்த மகனான உதயா பகிரும் உருக்கம் நிறைந்த நினைவுகள் பின்வருமாறு:

அம்மா என்றால் எல்லோருக்குமே தெய்வத்திற்கு சமமானவர் தான். எங்களுக்கு இன்னும் ஒரு படி மேல் என்றால் மிகையல்ல. யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவர் எங்கள் தாய். விஜய், தங்கை மற்றும் நான் ஆகிய மூன்று குழந்தைகளையும் ஒரே மாதிரி தான் நடத்துவார், அன்பு செலுத்துவார்.

என்னை செந்தில் என்று தான் அம்மா அன்புடன் அழைப்பார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்ட பிறகு நான் முதலில் சொன்னது அம்மாவிடம் தான். அப்பாவிற்கு இதில் பெரிதும் விருப்பம் இல்லை என்ற போதிலும், அம்மா தான் அவரை சம்மதிக்க வைத்து நான் நடிகனாவதற்கு காரணமாக இருந்தார்.

சினிமாவில் நான் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து கடந்த 22 வருடங்களாக எனக்கு மிகப்பெரிய பக்கபலமாகவும், ஊக்கமாகவும் இருந்தது எனது தாயார் தான். “நீ நிச்சயம் பெரிய அளவில் ஜெயிப்பாய்,” என்று அடிக்கடி கூறுவார். நான் பெரிய வெற்றியை அடைந்து விட வேண்டுமென்று அவர் போகாத கோவில் இல்லை, செய்யாத பிரார்த்தனை இல்லை.

தம்பி விஜய் போன்று சினிமா வாயிலாக பொருளாதார ரீதியாக அம்மாவுக்கு பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் கூட, அம்மா கை காட்டும் பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியோடு இருந்து அதை நிறைவேற்றினேன். அவருக்கு நான் பணம் கொடுக்கவில்லையென்றாலும் கூட, பாசத்தை கொடுத்திருக்கிறேன், அன்பை கொடுத்திருக்கிறேன். ஆனால், அவை எல்லாவற்றையும் பல மடங்கு அதிகமாக அவர் எனக்கு தந்துள்ளார்.

அவரது உடல்நிலை இதற்கு முன்னர் குன்றிய போதெல்லாம் மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் அவர் மீண்டு வந்திருக்கிறார். நீ வெற்றி பெறுவதை பார்க்காமல் நான் போய் விட மாட்டேன் என்று புன்னகையுடன் என்னிடம் கூறுவார். ஷீ இஸ் அ ஃபைட்டர். ஆனால் யாருமே எதிர்ப்பார்க்காத போது எங்களை எல்லாம் விட்டு விட்டு சென்று விட்டார்.

எனக்கு பாசத்தை பெரிதாக வெளிப்படுத்த தெரியாது என்ற போதிலும், அம்மா இறப்பதற்கு முன் சில நாட்களாக அவரிடம் நிறைய பேசினேன். அப்போதும் அவர் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் போய் விட்டால் நான் அனாதை என்று நான் என்னுடைய உறவினர் ஒருவரிடம் சொன்னபோது கூட, அப்படியெல்லாம் உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்று அவர் நம்பிக்கையோடு கூறினார். ஆனால் இன்று அவர் எங்களுடன் இல்லை.

ஒருவருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் திகழ்ந்தார். வீட்டுக்கு வரும் யாரும் உணவருந்தாமால் செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அந்த அன்பின் காரணமாகத்தான் அவர் இறந்தவுடன் எங்கெங்கிருந்தோ வந்து ஏராளாமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட எங்கள் நால்வரையும் (அப்பா, நான், விஜய், தங்கை) இணைத்து தாங்கி பிடித்தது எங்கள் அன்னை தான். குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும், கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும், பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் மிகச்சிறந்த உதாராணமாக திகழ்ந்தார் அவர். பேரக்குழந்தைகள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

தம்பி விஜய்யும் நானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது அவரது விருப்பம். அதன் படியே தலைவா படத்தில் நான் நடித்தேன். அம்மாவிற்கு மிகச்சிறந்த சிகிச்சையை விஜய் உறுதி செய்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அம்மாவை உடனிருந்து பார்த்து கொண்டோம். இருந்த போதும் எதிர்ப்பார்க்காத தருணத்தில் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

உடலால் அவர் எங்களுடன் இல்லை என்ற போதிலும், உணர்வால் எங்களுக்குள் அவர் வாழ்கிறார். அவரது வாய்ஸ் மெசேஜ்களை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அவரது குரல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, இருக்கும். கடவுளாக இருந்து அம்மா எங்களை தொடர்ந்து வழி நடத்துவார் என்பது நிச்சயம். இந்த கடினமான நேரத்தில் எங்களுடன் இருந்து எங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் வணக்கங்கள்.

லவ் யூ அம்மா, மிஸ் யூ அம்மா…

அன்பு மகன்,
செந்தில் எனும் உதயா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here