பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது.

கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார்.

நவீன நாடகங்களை நடத்தும் ஒரு கலைக்குழு, அந்த கலைக் குழுவில் பங்கேற்று நடிக்கும் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமுதாய வாழ்க்கை, மனப் போராட்டங்கள், மன மாற்றங்கள் என ஒரு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, மிகச்சிறந்த உலகத் தரத்திலான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் .

சமுதாயத்தில் நடக்கும் ஒட்டுமொத்த நன்மைகள், தீமைகள், அவலங்கள் என அனைத்தையும் தன்னுடைய நாடக கதைமாந்தர்கள் வாயிலாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் நாயகி என துஷாரா விஜயனை சொல்லலாம் மற்றபடி படத்தின் நாயகன் என்று தனியாக எந்த கதாபாத்திரமும் இல்லை. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாயகர்கள்தான். அனைத்து கதாபாத்திரங்களையும் நம்மிடையே வாழும் மனிதர்களாக உணர வைத்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். நட்சத்திர பட்டாளங்களுக்கு இடையே கவனம் இருப்பது கலையரசன் கதாபாத்திரமும் அவருடைய நடிப்பும். துஷாரா விஜயன் கண்முன்னே ஒரு தேவதையாக ஜொலிக்கிறார். அவருடைய கதாபாத்திரப்படைப்பு, இதுவரை தமிழ் திரையுலகில் வந்த எந்த கதாபாத்திரத்தின் சாயலும் இல்லாமல் மிக உயர்ந்த இடத்தில் தனித்து நிற்கிறது.

படத்தின் ஆகச்சிறந்த பலம் என்று பட்டியலிட்டால் வசனங்கள், ஒளிப்பதிவு என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். சின்ன சின்ன எளிய வசனங்கள் மூலம், நடைமுறை சமூக அரசியலை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு மிகப்பெரிய வர்ணஜாலம் நடத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார். கலையரசன் கதாபாத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் மனமாற்றம் குறித்து சொல்லப்படும் ஒரு காட்சியில், புத்தர் ஓவியம் வரையப்பட்ட ஒரு கதவு திறக்கப்படும் காட்சியில், வசனங்கள் ஏதும் இல்லாமல், இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தி இருப்பார்கள் இது போல மிகச் சிறந்த காட்சிகளை பட்டியலிட வேண்டுமென்றால் படம் முழுக்க பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

படத்தின் தன்மைக்கேற்ற, வித்தியாசமான பாடல்கள் மற்றும் மிகச் சிறந்த பின்னணி இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தென்மா.

அனைவரும் நிச்சயம் தவறவிடாமல் பார்க்கக்கூடிய ஒரு கலைப் பொக்கிஷமாக வெளியாகியிருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம்.

நட்சத்திரம் நகர்கிறது உலகத் தரத்திலான இந்திய சமூகப் படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here