கமல் சார் படத்திற்கு குரல் கொடுத்திருக்கிறார்! – இயக்குநர் மணி ரத்னம்

வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்க வேண்டும்!
சிவாஜி கணேசன் விருப்பம்!!

  • நடிகர் கமலஹாசன் விருப்பம்

1000 ஆண்டுகளுக்கு முன்பே உலகை நேசிக்க வைத்தவர் ராஜராஜ சோழன் ; மணி சாரால் தான் இது சாத்தியமானது! – நடிகர் விக்ரம்

“பொன்னியின் செல்வன்” அறிமுகக் காட்சியை மணிரத்னம் எப்படி வைத்திருக்கிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்;
சுபாஸ்கரன் இந்த மாதிரி படத்தை எடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் – நடிகர் ரஜினிகாந்த்

இந்த படத்திற்கு 3 கதாநாயகர்கள் கல்கி, சுபாஸ்கரன், மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் கதையை அப்போது வாங்க பெரிய கூட்டம் இருந்தது.

அப்போது இந்த கதையை எடுக்க முடியவில்லை. Part 1, part 2 என்று அப்போது கிடையாது.

சுபாஸ்கரன் இந்த மாதிரி படத்தை எடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். லண்டனில் வசிக்கும் சுபாஸ்கரன், ஒரு கால் செய்து UK பிரதமரை சந்திக்க முடியும். அந்த மாதிரி செல்வாக்கில் உள்ள அவர் இந்த படத்தை இங்கே எடுக்க காரணம் மணிரத்னம் என்னும் அசுரத்தனமான இயக்குநர் என்ற நம்பிக்கை தான்.

பாம்பேயில் பெரிய ஜாம்பவான் எல்லாம் மணிரத்னம் வந்தால் எழுந்து நிற்பார்கள். அவரால் மட்டுமே இந்த படத்தை எடுக்க முடியும், முடிந்தது.

தளபதி படம் பண்ணும் போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

அப்போது ஹிந்தி படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அதன் பிறகு இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.
மணி சாருடன் முதல் காம்பினேசன். முதல் நாள் படபிப்புக்கு சென்று,
நல்லா பளிச்சின்னு மேக்கப் போட சொன்னேன். ஏன்னா..மம்முட்டி ஆப்பிள் நிறம் போல் இருப்பார்..
நான் கருப்பாக இருந்தேன்.

என் ஸ்டைலில் மேக்கப் போட்டுக் கொண்டு காஸ்டியுமை கொண்டு வர சொன்னேன். எனக்கு லூசா பேண்ட், பனியன், சப்பல் கொடுத்தார்கள். அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி.. நான் வழக்கமாக அணியும் பேண்ட், சர்ட் அப்புறம் நான் போட்டிருந்த வாக்கிங் ஷூ அணிந்து கொண்டு படபிடிப்பு தளத்துக்கு போனேன். மணி சார் என்னை பாத்ததும்.. என்ன இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணலையா.. பண்ணிட்டு வந்திருங்ன்னு சொன்னார்.
மாத்தியாசி சார்.. இதுதான்னு என்று சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டு.. அவர் டெக்னீஷியன்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணிகிட்டிருந்தார். ரொம்ப நேரமாச்சி.. வெயிட் பண்ணிகிட்டே இருந்தேன். ஷூட்டிங் ஆரம்பிக்கவே இல்ல.
முதல் நாள் ஷூட்டிங் ஷோபனாக் கூட. ஷோபனா எல்லாரையும் கலாக்கிற பார்ட்டி. அவர்கிட்ட கேட்டா சரியா தெரியும்ன்னு நினைச்சி.. என்ன நடக்குது.. இன்னும் ஒரு காட்சி கூட ஆரம்பிக்கபே இல்லன்னு அவர்கிட்ட கேட்டேன். அவரும் விசாரிச்சிகிட்டு வந்து..
என்னாச்சி.. டைரக்ட்டருக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்னையா.. இன்னைக்கு ஷூட்டிங் முதல் நாள்.. வந்ததுக்கு ஷூட்டிங் முடிச்சி அனுப்பி வைச்சிகிட்டு.. அப்புறம் ஹீரோவ கமல போட்டுடலாம்ன்னு பேசிகிட்டிருக்காங்கன்னு சொன்னதும்.. ( அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது ) அப்பதான் புரிஞ்சது.. நம்ம இஷ்டத்துக்கு மேக்கப்பும் டிரஸ், ஷூவெல்லாம் போட்டு கிட்டு வந்ததுன்னு.. தெரிஞ்சது.
முதல் நாளே என்ங்கிட்ட இதெல்லாம் சொல்லி எப்படி புரிய வைக்க.. அதுக்கு ஹீரோவை மாத்திடலாம் என்பதை மணி சொல்ல கேள்விபட்ட பிறகு .. அப்புறம் போய் அவங்க சொன்னபடி எல்லாத்தையும் மாத்தி கிட்டு வந்து நடிச்சேன். அப்படி மணி சார் ஒரு கண்டிஷனான இயக்குனர்.

இப்படி மூணு நாள் ஷூட்டிங் போய்கிட்டிருக்கு. நம்ம எப்பவுமே ஒவ்வொரு காட்சியிலுமே எப்படி நடிக்கணும்ன்னு ஒரு ‘டெம்ப்ளேட்’ வெச்சுருப்போம். ( கமல் வாய் விட்டு சிரித்தார் ) இதிலேயும் அப்படிதான் நடிச்சிகிட்டிருந்தேன். ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். இன்னும் பீல்.. கொடுங்கன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டேயிருந்தார். இதுக்கமேல என்ன பீல் பண்ண.. நாம தான் ஒரு டெம்ப்ப்ளேட் வைச்சிருக்கோமே..அப்படிதான் நடித்து முடிச்சேன். நான் அப்போ நடிச்சிகிட்டிருந்ததெல்லாம், தூக்குடா.. அடிடா.. அப்படிதான். ( அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது ) எப்படியோ அன்னைக்கு ஷூட்டிங் முடிந்தது.
தினமும் இது இப்படியே போய்கிட்டிருந்தா சரியா வராதுன்னு நினைச்சி.. கமலுக்கு போன் பண்ணி.. ,
10 டேக்.. 12 டேக்கெல்லாம் எடுக்கிறாரு.. இன்னும் கொஞ்சம் பீல் பண்ணி நடிக்க சொல்றாரு.. அப்படி நடந்ததை எல்லாம் சொன்னேன்.
மணி படம் நீங்க நடிக்கும் போதே நான் நினைச்சேன். சரியா மாட்டுனேங்களா.. மணிகிட்ட நான் எவ்வளவு அனுபவிச்சிருப்பேன்.. அப்படின்னார்.
சரி இப்போ என்ன பண்ணலாம்ன்னு கேட்டேன்.
ஒண்ணு பண்ணுங்க.. எப்படி நடிக்கணும்ன்னு அவரையே நடிச்சி காட்ட சொல்லி, அதை அப்படியே மனசுல ஏத்திகிட்ட மாதிரி பொய்யா அதை அப்படியே நடிச்சிருங்க. என்று சொன்னார்.
நானும் கமல் சொன்னது மாதிரி மணிகிட்ட நடிச்சி காட்ட சொல்லி.. அதை அப்படியே தம்பிடிச்சு கிட்டு அங்க இங்குமா நடந்து கிட்டு.. பெருசா பீல் பண்ணின மாதிரி பொய்ய சொல்லி ( மீண்டும் பலத்த கரவொலி ) தான் மணிகிட்ட நடிச்சு முடிச்சேன்.

நான் புத்தகம் நிறைய படிப்பேன். ஆனா 300 பக்கங்களுக்கு மேல இருந்தா.. படிக்கவே மாட்டேன். ( அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது ) எல்லாரும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தீர்களா என்று கேட்டார்கள். நிறைய பக்கம் இருந்தால் படிக்க மாட்டேன்.

பொன்னியின் செல்வன் கதையில் உள்ள வந்திய தேவன் கதாப்பாத்திரத்தை யார் நடித்தால் நல்லா இருக்கும் என குமுதம் அரசு கேள்வி பதில் ஒன்றில், ஜெயலலிதா அவர்களிடம் ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு, ‘ரஜினிகாந்த்’ என ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார், ஜெயலலிதா அவர்கள்.

அடடான்னு .. எனக்கு ஒரே குஷியாக ஆனது. அன்று தான் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன். ( அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது )

இந்த கதையில், நந்தினி தான் எல்லாமே. பொன்னியின் செல்வி என இதற்கு பெயர் வைத்து இருக்க வேண்டும். இதை வைத்து தான், படையப்பா படத்தில் உள்ள நீலாம்பரி கதாபாத்திரம்.

இந்த படத்தை முன்பே மணி பிளான் பண்ணும் போது, நான் இந்த பெரிய பழுவேட்டையர் கதா பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மணியிடம் கேட்டேன். அவர் ஒப்பு கொள்ளவே இல்லை. இதில் நீங்க நடிச்சீங்ன்னா.. உங்க ரசிகர்களிடம் நான் திட்டு வாங்கவா .. உங்களை இந்த மாதிரு யூஸ் பண்ண நான் விரும்பவில்லை.
வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், மணி வேண்டாம் என சொன்னார். அது தான் மணிரத்னம். hats off..

பழு வேட்டையராக நான், பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, பெரிய பழுவேட்டையர் சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது நான் பிளான் பண்ணும் போது எனக்கு தோன்றியது.

( புத்தகத்தில் வரும் அருண்மொழிவர்மணின் அறிமுக காட்சி வரை அதை அப்படியே சொன்னார் ரஜினி )
பொன்னியின் செல்வனில் 40வது அத்தியாயத்தில் தான் அருண்மொழிவர்மன் தோன்றுவார். இந்த படத்தில் அவரின் அறிமுகக் காட்சியை மணி ரத்னம் எப்படி வைத்திருப்பார் என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன் என்றார்.

வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்க வேண்டும்!
சிவாஜி கணேசன் விருப்பம்!!

  • நடிகர் கமலஹாசன்

எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. என்னுடைய மணி ரத்னம் கதை பற்றி சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார் அப்போது புரியவில்லை.

ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி செய்தேன். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.

மணி ரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். மேடை அலங்காரத்திற்காக நான் இதை சொல்லவில்லை.

ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கோம். அது மாதிரி தான் இந்த படம்.

இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும்.

வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார்.
அதை கேட்ட எனக்கு ஷாக்கா இருந்தது. என்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜின்னு சொல்லிட்டாரேன்னு அதை விட்டு விட்டு.. அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய் என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று. ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம்ரவியும் நடிக்க கிடைத்துள்ளது.

வெற்றி வரும், தோல்வி வரும் ஆனால், அதை புரிந்து கொள்ள வேண்டும்.

AR.ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதய துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டு வந்தேன் என்றார்.

1000 ஆண்டுகளுக்கு முன்பே உலகை நேசிக்க வைத்தவர் ராஜராஜ சோழன் ; மணி சாரால் தான் இது சாத்தியமானது! – நடிகர் விக்ரம்

இதே மண்ணில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை, ஆண்ட விதம், உலகத்தையே நேசிக்க வைத்த சிறு சிறு விஷயங்கள் தான் இன்று, நான் தமிழன் டா என்று அனைவரும் மார்தட்டிக் கொள்ள வைத்திருக்கிறது.

இந்த நேரத்தில் ஒரு சிறிய கதை தான் நினைவிற்கு வருகிறது.

10-ஆம் நூற்றாண்டில் ஒரு பெண்மணி கோவிலில் என் வேண்டுதல் நிறைவேறினால் தினமும் மூன்று வேளையும் இந்த கோவிலுக்கு வந்த விளக்கு ஏற்றுகிறேன் என்று வேண்டிக் கொள்கிறார். இதை அறிந்த மன்னர், அந்த அம்மாவைக் கூப்பிட்டு உன்னால் எத்தனை ஆண்டுகள் இதுபோல் செய்ய முடியும் என்று கேட்டார். அதற்கு அந்தம்மா, எனக்கு இருக்கும் வசதிக்கு 100 வருடங்கள் வரை செய்ய முடியும் என்று கூறினார்.

உடனே மந்திரியை அழைத்து இந்த நாட்டில் மிகவும் ஏழையான ஒருவரை கண்டுபிடுத்து வாருங்கள் என்று மன்னர் கட்டளையிட்டார். அந்த ஏழையிடம், மூன்று வேளையும் கோயிலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். நூறு வருடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு உனக்கு என்ன வேண்டும் என்று மன்னன் கேட்க… அதற்கு அந்த ஏழை எனக்கு 48 பசு மாடுகள் கொடுங்கள் போதும் என்றார். 48 போதுமா? இதை நீ 100 வருடங்கள் செய்ய வேண்டும் என்றிருக்கிறார் ராஜா. 48 பசுக்களும் ஒரு வருடத்தில் 96 ஆக ஆகும் என்று ஏழை கூறியிருக்கிறார். அதேபோல் மந்திரியே மந்திரியிடம் 48 மாடுகள் கொடுக்க சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் .
2 வருடங்கள் தொடர்ந்து கண்காணித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். அதன்படி 2 வருடங்கள் கழித்து அது 96 ஆனது. பின்பு அதிலிருந்து 48 பசுக்களை எடுத்து இன்னொரு ஏழைக்கு கொடுங்கள். இதேபோல் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் செய்து வாருங்கள். இது போல் 50 வருடங்கள் நடந்தால் நாட்டில் ஏழைகளே இருக்கமாட்டார்கள் என்று அந்த மன்னர் கூறினார். இது உண்மையாகவே நடந்தது நம் தஞ்சை மண்ணில் தான். ஆம் அதை செய்தவர் ராஜராஜ சோழன் தான்.

1000 வருடங்களுக்கு முன்பே வங்கி முறையை கொண்டு வந்து லோன் கொடுத்தவர் நம் ராஜ ராஜ சோழன். ஏழைக்கு பணம் மட்டும் கொடுக்காமல் அவர்கள் சுயமரியாதையோடு சம்பாதிக்க வழி செய்தவர் ராஜராஜ சோழன். அந்தக் காலகட்டத்திலேயே எதிர்கால சிந்தனையுடன் ஆட்சி புரிந்தவர் ராஜராஜ சோழன்.

மேலும், அனைவரும் உலக அதிசயங்களைப் பற்றியும், அது உருவான விதம் பற்றி பேசவும் தெரிந்து கொள்ளவும், ஆர்வம் கொள்வோம். ஆனால், அதைவிட உலக அதிசயம் ஒன்று உண்டு. அது தஞ்சை பெரிய கோவில் தான். ஆயிரம் வருடங்களைத் தாண்டி அரை இன்ச் கூட நகராமல் அப்படியே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்த கோவிலை கட்டியவர்கள், அதற்கு உதவி புரிந்தவர்கள், முடி வெட்டும் தொழிலாளர்கள், என அந்த கோவிலுக்கான பணிகளை செய்த அனைவரின் பெயர்களையும் கோயில் சுவற்றில் பொறித்து வைத்த ஒரே அரசன் ராஜராஜசோழன்.

அமெரிக்காவை கண்டுபிடித்து பெயர் வைத்தது 15ஆம் நூற்றாண்டில்தான். ஆனால் அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே வரைபடங்கள் இல்லாத காலகட்டத்தில் நம் நாட்டில் மட்டுமல்லாது கலிங்கம், கடல் கடந்தும், சீன நாடு வரை படையெடுத்து உலகம் முழுவதும் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், அறிவியலையும், கொண்டு சேர்த்த ஒரே மன்னர் ராஜராஜ சோழன். இதுபோல அவருடைய பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பொன்னியின் செல்வனில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் ஆதித்ய கரிகாலன். நான் அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவு இன்று நனவானதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த மணிரத்னம் சாருக்கு மிக்க நன்றி.

இரண்டு வருடங்கள் நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்து இருக்கிறோம். இதை சாத்தியமாக்கியது மணி சார் தான். இந்த படம் நம் அனைவருக்குமே பெருமைக்குரிய படம் என்றார். இதை நிகழ்த்தி காட்டிய பெருமை லைகா சுபாஸ்கரன் சாருக்கு என்றும் நிலைத்து நிற்க்கும்.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பேசியதாவது,

இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம், இன்று எடுத்துள்ளோம். அனைவருக்கும் நன்றி என்றார்.

2 நிமிடங்களிலேயே இப்படத்தை எடுக்கலாம்! லைகா சுபாஸ்கரன் கூறிவிட்டார்;
கமல் சார் படத்திற்கு குரல் கொடுத்திருக்கிறார்! – இயக்குநர் மணி ரத்னம்

செக்க சிவந்த வானம் முடிந்த பிறகு அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று சுபாஸ்கரன் கேட்டார். பொன்னியின் செல்வன் தான் என்று கூறினேன். 2 நிமிடங்கள் யோசித்துவிட்டு உடனே சரி பண்ணலாம் என்றார்.

மேலும், இப்படம் ராஜமௌலியின் பாகுபலி மாதிரி இருக்குமா என்று கேட்டார். கண்டிப்பாக பாகுபலி மாதிரி இருக்காது என்று கூறினேன்.

சரி, சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி மாதிரி இருக்குமா என்று கேட்டார். இருக்காது என்றேன். வேறு எந்த மாதிரி இருக்கும் என்று கேட்டார். அதற்கு நான் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மாதிரி இருக்கும், அது மாதிரியே இருக்க வேண்டும் என்று கூறினேன்.

முடிந்தவரை நாங்கள் அதற்காக தான் முயற்சி செய்திருக்கிறோம். இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எனக்கு வலுவான ஆதரவாக இருந்தார்கள். இப்படத்திற்காக கமல் சார் குரல் கொடுத்திருக்கிறார். நீங்கள் டிரெய்லரை பார்த்தால் தெரியும் என்றார்.

மணி சாருடன் இருந்தாலே போதும் ;
தள்ளி தள்ளி போன படம் சாத்தியமானதற்கு முக்கிய காரணம் லைகா சுபாஸ்கரன் தான்! – நடிகர் கார்த்தி

நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. இந்த படம் சாதாரண படமல்ல 70 வருட கனவு. வரலாற்று புனை கதை என்றால் என்ன? இரண்டு உண்மை சம்பவங்களுக்கு இடையில் இருப்பதை புனையப்பட்டு எழுதுவதுதான் வரலாற்று புனை கதை. உதாரணமாக, மிகப் பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன். இது உண்மை. ஆனால், அதை கட்டுவதற்கு எப்படி கட்டினார் என்பதே அவரை அதில் பொறித்து வைத்திருக்கிறார். ஆனால், நாம் கற்பனையாக கூறும்போது, அடிமைகளை வைத்துக் கட்டினார்கள், ஏலியன்களை வைத்துக் கட்டினார்கள் என்று நம் கற்பனைக்குத் தகுந்தவாறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அப்படித்தான் கல்கியும் இந்த கதையை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். இப்படம் வீரம், துரோகம், அன்பு, ஆன்மீகம், அரசியல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தந்த கதாபாத்திரங்களுடன் வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. அது உயர் மின்னழுத்த கம்பி போன்றது. தொட்டால் ஷாக் அடிக்கும். பயந்து பயந்து தான் தொட வேண்டும். ஆனால், அது தொடுவதற்கான ஆற்றலும், தைரியமும் தமிழ் பற்று வரும் போது, சினிமா மீது காதல் வரும் போது வருகிறது.

40 வருடங்களாக மணி சார் இப்படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். 80களில் உள்ள கமல் சாரின் பேட்டி ஒன்று இப்போது கிடைத்தது. எண்பதுகளில் நான் இந்த படத்தை தயாரிக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் கூறியிருந்தார். நீங்கள் மிச்சம் வைத்ததற்கு நன்றி சார். இந்த படத்தையும் நீங்களே செய்திருந்தால் நாங்கள் என்ன செய்வது?

40 வருடங்களில் பல முறை மணி சார் முயற்சி எடுத்தும் இப்படம் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. ஆனால், இப்போது அனைத்தையும் வரிசைப்படுத்தினால் நாங்களும் மலேசியா சென்றோம். கமல் சார் கூறியதைப்போல எங்களை மொத்தமாக புல்டோசர் வைத்து ஏற்றிவிட்டார். இந்தப் படம் எடுத்ததே ஒரு விஸ்வரூப வெற்றி. அதற்கே முதலில் மணி சாரை பாராட்ட வேண்டும். இந்த மூன்று தலைமுறை கதைகளை கூறுவதற்கும் அவ்வளவு பொறுமை தேவைப்படும். அத்தனை கலைஞர்கள் தேவைப்படுவார்கள். மணி சார் 5hertz வேகத்தில் பணியாற்றுகிறார். பணியாற்றுவதை பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது. அவர் கூட இருந்தாலே போதும் என்று தோன்றுகிறது.

தோட்டாதரணி மாதிரி அனுபவம் வாய்ந்த, விஷயமறிந்த ஆட்கள் கிடைப்பார்களா என்பது தெரியவில்லை. இந்த தலைமுறையில் பிறந்ததற்கு பெருமைபடுகிறோம். அதை விட இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகப் பெருமையாக இருக்கிறது.

என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி அவர் ஒவ்வொன்றாக விவரித்த விதம் ரொம்ப அழகாக இருந்தது. வந்திய தேவன் ஒரு பெண்ணிடம் எப்படி பேசுவான், அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், ஒவ்வொரு காட்சிகளையும் தெளிவாக குறித்து வைத்திருப்பார். நான் என்னதான் புத்தகதை பலமுறை படித்தாலும் அங்கு போய் நிற்கும் போது மணி சார் அதை எப்படி வடிவமைத்திருக்கிறார் என்றுதான் பார்க்க தோன்றும். மேக்கப் கலைஞர்கள் இப்படத்திற்காக பிரத்யேகமாகவும் திறமையாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சரத்குமார் சாரை அடையாளமே தெரியவில்லை. ஆயிரம் பேர் இப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டார். அவர் கதாபாத்திரத்திற்கு அவர் குண்டாக வேண்டும் தொப்பை வயிறு வேண்டும் என்பதற்காக தினமும் அதிக அளவில் உணவு உண்டு எடையைக் கூட்டினார்.

இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி எதிர்காலத்தைப் பற்றி பேசக்கூடிய சிறந்த நண்பனாக கிடைத்திருக்கிறார்.

தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த இப்படம் இன்று சாத்தியமாக முக்கிய காரணமாக இருந்தது லைகா சுபாஸ்கரன் சார் தான். அவருக்கு ரொம்ப நன்றி.

மேலும், பெண்களைப் பற்றி சொல்லியாக வேண்டும். இப்படத்தில் நடித்த அனைத்து பெண்களும் கடின உழைப்பாளிகள். என்னுடைய ஜீனியூஸ் மனிதரைப் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இங்குதான் நான் நேரில் பார்த்தேன். பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் செய்வது போல ஆளுக்கு ஒரு நோட்டை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். நான் உதவி இயக்குனராக இருந்த போது திரிஷாவிற்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்தேன். இந்த படத்தில் அவருடன் முதல் முதலில் பணியாற்றுவதில் சந்தோஷமாக இருக்கிறது. ஷோபிதா உடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த மேடைகளில் நிறைய பேசுகிறேன் என்றார்.

மணி சார் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன்; இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம்! – நடிகர் ‘ஜெயம்’ ரவி

எல்லோரும் நன்றாக பேசி விட்டார்கள். நாம் என்ன பேசுவது என்று நினைக்கும் போது, இந்த நேரத்துல வீரர்கள் சொல்லும் வார்த்தை, பார்த்துக்கலாம் என்ற கமல் சார் டயலாக் நினைவிற்கு வந்தது.

இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள். எனக்கு தெரியாது, மணிரத்தினம் கூப்பிட்டார், சென்றேன், நடித்தேன் என்று கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்து விட்டேன் என்று தோன்றியது. ஆனால், நான் சொல்லும்படி அப்படி ஒன்றும் நல்லது செய்யவில்லை. ஒருவேளை அப்பா அம்மா செய்த நல்ல விஷயங்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று நினைத்தேன். அதுதான் உண்மை.
பிறகு இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தேன். உனக்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.. என்ற ரஜினி சார் டயலாக் தான் நினைவிற்கு வந்தது.
மேலும் இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த போது, நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. நீண்ட வருடங்களாக உழைத்திருக்கிறேன், அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது எனக்கு தோன்றியது. கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்த படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். அதைத் தாண்டி உங்களுடைய ஆதரவும், இறைவனுடைய அருளும் எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால், அருண்மொழிவர்மன் யார் என்பதை நான் கூறும்போது நீ இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேள் என்று கூறினார். மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். அவர் சொல்லி முடித்ததும் ஒரு மூட் கிரியேட் ஆச்சி. அப்படியே வீட்டுக்கு சென்றேன். எப்போது பாத்தாலும் ஆதே மூடில் இருந்தேன். இதுனானல் வீட்டில் திட்டு வாங்கினேன். அது வேறு வழி இல்லை. ஆறு மாதத்தில் அதே மூடில் அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன்.
இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம். மிக்க நன்றி சார்.

கார்த்தி இந்த படத்தின் மூலம் சிறந்த நண்பன் ஆகிவிட்டான். அவன் வளர்வதைப் பார்க்க பிடிக்கும். விக்ரம் சார் உலகளவில் பேசப்பட வேண்டும் மனதார வேண்டிக் கொள்கிறேன்.

விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் சார் மற்றும் அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி. லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி என்றார்.

இந்தப் படத்தைப் பற்றி நான் கூறும்போது அலாதியான இன்பம் வருகிறது; இந்த வாய்ப்பை அளித்த மணி சாருக்கு நன்றி! – நடிகை திரிஷா

இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது முதலில் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார் கமல் சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் வாவ் என்றே சொல்ல வைக்கிறது.

2கே கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்த படம் சிறப்புரிமை, ஆசீர்வாதம், சிறந்த படம் என்று நான் என்ன வார்த்தை கூறினாலும் எனக்கு அது குறைவாகவே தோன்றுகிறது. அதைத்தாண்டி அதற்கு குறவாகவே தோன்றுகின்றது. அதை தாண்டி உள்ளுக்குள் ஒரு அலாதியான இன்பம் வருகிறது.

இந்த வாய்ப்பை கொடுத்த மணி சாருக்கு மிக்க நன்றி என்றார்.

மணி ரத்தினத்திற்கு, சுஹாசினியின் காதலுக்கு முன்பே வேறு காதல் இருந்திருக்கிறது;
பல ஆண்டு கனவை நனவாக்கிய லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனுக்கு மிகப்பெரிய நன்றி – நடிகர் பார்த்திபன்

போன வாரம் பார்த்த படம் பழகிவிட்டது போன மாதம் கேட்ட கதை பழையதாகி விட்டது. ஆனால், பல ஆண்டுகளாக நடந்த கதை கல்கியின் எழுத்தால் சரித்திரமாக மாறிவிட்ட இந்த படைப்பு, அவருடைய கனவை இன்று கலக்கி இருக்கிறார் மணி ரத்னம் அவர்கள். நான் பேசும்போது நீங்கள் கை தட்டி பாராட்டுவது போல் இன்று கல்கி இருந்திருந்தால் மணி ரத்தினம் அவர்களை கைதட்டி பாராட்டியிருந்திருப்பார்.

மணி ரத்னத்திற்கு சுஹாசினிக்கு முன்பு ஒரு காதல் இருந்திருக்கிறது. அது பொன்னியின் செல்வன் என்று நினைக்கிறேன். அப்படி காதல் இல்லை என்றால் இந்த படத்தை நிச்சயம் அவர் செய்திருக்க முடியாது. பொன்னியின் செல்வனில் கடைசி புள்ளி எழுத்து நான்தான்.

நடிக்கவே வராதவர்களுக்கு கூட மணி சார் இருந்தால் நடிக்க வந்து விடும். இப்படத்தின் வாய்ப்பு கிடைத்ததும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாம் தூய தமிழில் பேசினோம். ஆகையால், நமக்கு தமிழ் நன்றாக பேச வரும் என்று இறுமாப்புடன் சென்றேன். ஆனால், அங்கு சென்றதும் ஒரு மாப்பு கூட வேலை செய்யவில்லை. முதல் நாள் படப்பிடிப்பிலேயே மணிரத்தினம் சார் அவ்வளவு தூய தமிழில் எல்லாம் பேச வேண்டாம் என்று கூறி மட்டம் தட்டினார். மட்டம் தட்டுவது என்றால் தமிழில் இரண்டு அர்த்தம் இருக்கிறது. கேவலப்படுத்துவது என்று ஒரு அர்த்தம், இன்னொன்று கட்டடம் கட்டுவதற்காக மட்ட பலகையை வைத்து சுவரை சமன்படுத்த பயன்படுத்துவதுதான் மட்டம் தட்டுவது என்பது. அதைத்தான் மணிரத்னம் சார் செய்தார்.

பல வருடமாக செயல்படுத்த முடியாத கனவு படத்தை பின்னணியாக இருந்து நனவாக்கிய லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அவர்களுக்கு பெரிய நன்றி. லைகாவின் பயணத்தில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நந்தினியாக நடித்திருக்கிறார் என்று கூறுவதைவிட, இந்த படத்திற்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார் என்று கூறுவதே சரியாக இருக்கும் என்றார்.

மணி சார் எனக்கு எப்போதும் குருவாகவே இருப்பார்; இப்படம் சினிமாவின் மாயாஜால உலகமாக இருக்கும் ; இப்படம் எனக்கு சிறப்புரிமையை கொடுத்திருக்கிறது! – நடிகை ஐஸ்வர்யாராய்

ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கமல் சாருடன் இன்னும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை – நடிகை ஐஸ்வர்யாராய்

நடிகை ஐஸ்வர்யாராய் பேசும்போது

எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழிலில் பேச ஆரம்பித்தார், ஐஸ்வர்யாராய். இங்கு வந்ததில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய குரு மணி ரத்னம் சார். அவர், எனக்கு எப்போதுமே குருவாகவே இருப்பார். இந்த வாய்ப்பளித்த அவருக்குநன்றி. இப்படம் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் சிறப்புரிமையை கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்த படத்தின் குழுவோடு கனவும் இன்று நனவாயிருக்கிறது. இப்படம் சினிமாவிற்கு மாயாஜால உலகமாக இருக்கும்.

மணி ரத்னம் சார் மிகவும் திறமைசாலி.
லைகா புரொடக்ஷன்ஸ், ரவிவர்மன் சார், ஏ.ஆர்.ரகுமான் சார், மற்றும் இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், மேக்கப் கலைஞர்கள் மற்றும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி.

ஜெயராம் சார் , பார்த்திபன் சார், சரத் சார், பிரபு சார், தோட்டா தரணி சார், ஶ்ரீகர் பிரசாத் சாத், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா மற்றும் இப்படத்தில் அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத நிகழ்வு.

தனது குரு துணையை மணி ரத்னம் சாருக்கு மௌனமாக தந்து வரும் ஹாசினி மேடமுக்கு நன்றி. ஆகையால், தான் மணி ரத்தினம் சார் எப்போதும் வெற்றியடைந்து வருகிறார்.

கமல் சார், ரஜினி சார் இருவருக்கும் இங்கு வந்ததற்கு நன்றி. ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கமல் சாருடன் இன்னும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்.

மணி சாருடன் கிடைத்த வாய்ப்பு பெரும் பாக்கியம் ; சுபாஸ்கரன் இப்படத்திற்கு கிடைத்த பொக்கிஷம்! –
ரவி வர்மன்

மணி சார் எல்லோரும் படித்து கேட்ட கதையை, திரும்ப எல்லோரும் கேட்டு படித்த கதையை ஒவ்வொன்றாகக் கூறினார். ஆனால், இயக்குனராக அல்ல; ரசிகனாக! அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பெரிய பாக்கியம். சீயான் விக்ரம் சார் சாதாரண மனிதன் அல்ல!

இவ்வளவு பெரிய படத்திற்கு சிதறாமல் செலவழித்த சுபாஸ்கரன், இப்படத்திற்கு கிடைத்த பொக்கிஷம். இப்படத்திற்கு எப்போ எப்போ என்னவெல்லாம் தேவையோ அதை ஒரு துளி சிதறாமல் கொடுத்தார்.

பிரபு சார், ஜெயராம் சார், பார்த்திபன் சார் அனைவரும் நாங்கள் செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டேருந்தார்கள் என்றார்.

பொன்னியின் செல்வன் படத்துக்கு வரி விலக்கு அளிக்க வெண்டும்! தமிழக முதல்வருக்கு தேனாண்டாள் முரளி கோரிக்கை.

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா நேற்று நடந்தது. இதில் தென்னிந்திய திரைஉலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

இதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி கலந்து கொண்டு பேசியது.
பொன்னியின் செல்வன் அருமையான படைப்பு. மணி சாருக்கு நன்றி.
இப்படியொரு பிரமாண்டமான படைப்பை கொடுத்த லைகா சுபாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள்.
நமது வரலாற்றை,
மக்கள் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு. இந்த மாதிரி படங்களை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க சார்பில் கோரிக்கை வைக்கிறோம். இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here